
தமிழ் இலக்கியம் ஆனி மாதத்தை இளவேனில் என்கிறது. நீண்ட பகல் பொழுதைக் கொண்ட மாதமாக ஆனி அமைந்துள்ளது. சுமார் 12 மணி நேரம் 38 நிமிடங்கள் வரை இது நீண்டுள்ளது. ஆனி மாதத்தில் மட்டுமே பிற மாதங்களில் இல்லாதபடி 32 நாட்களைக் காண முடியும். ஆனி மாதத்தில் வானம் தெள்ளத் தெளிவாக காட்சியளிக்கும்.
வடமொழியில் இதை ‘ஜேஷ்டா’ மாதம் என்கிறார்கள். இதற்கு ‘மூத்த அல்லது பெரிய’ என்று பொருள். பெயருக்கு ஏற்றாற்போல் தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. மலையாள நாட்டில் ஆனி மாதத்தை, ‘மிதுன மாதம்’ என்பர்.
உத்திராயண புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி. இது தேவர்களின் மாலைப் பொழுது என்கிறது சாஸ்திரம். மேலும், கோடையின் தாக்கம் நீங்கி, இதமான காற்று வீசும். ‘ஆனி மாதத்தில் கூனியும் நிமிர்ந்து நிற்பாள்’ என்ற பழமொழி இருக்கிறது. ஆனி மாதம் சிகிச்சைக்கு ஏற்ற மாதம் என்று வேத கால மருத்துவத்தில், பண்டைய வைத்திய நூல்களில் கூறப்பட்டுள்ளது.
இம்மாதத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும், மஹாவிஷ்ணு எடுத்த கூர்ம அவதார நிகழ்வு ஆனி மாதத்தில்தான் நடந்துள்ளது. ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் சக்கரத்தாழ்வார். அன்று பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வார் ஜயந்தி கொண்டாடப்படுகிறது.
ஆனி மாதம், உத்திரம் நட்சத்திரத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு ஆனி திருமஞ்சனம் நடைபெறும். அதேபோன்று, வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் ஆனி கேட்டை நட்சத்திரத்தில் திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.
பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்து நாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத் திருவிழா. ஆனி உத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடைபெறும். அன்று பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். இன்றைய தினத்தில்தான் நடராஜர் சன்னிதிகளில் ஆனித்திருமஞ்சனம் நடைபெறுகிறது. பக்தர்கள் நடராஜரை தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க ஆனித்திருமஞ்சனம் மிக நல்ல நாள். கலையார்வம் மிக்க மாணவர்கள் இன்றைய தினம் அவசியம் நடராஜரை தரிசிக்க வேண்டும்.
சிவகங்கை பேருந்து நிலையம் எதிரில் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயில் பிள்ளை வரம் தரும் கோயில். இங்கு நடைபெறும் விழாக்களில் ஆனி மாதம் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. 10 நாட்கள் இந்தத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு ஆனி கடைசி வெள்ளியில் பனை ஓலை குருத்தால் செய்யப்பட்ட தேரில் அம்மனை வீற்றிருக்குச் செய்து அதை காளை மாடுகள் இழுத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சில கோயில்களில் ஆனி பௌர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதைக் காணலாம். அந்த வகையில் திருச்சி உறையூரில் மேற்கூரை இல்லாமல் (விமானம்) திறந்தவெளி கொண்ட கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு அன்று மாம்பழங்களால் அபிஷேகம் நடைபெறும். கூடை கூடையாக மாம்பழங்களை அம்மன் மீது அபிஷேகிப்பார்கள். பிறகு அந்த மாம்பழங்களை பர்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.
இதேபோன்று, திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தாயுமானவர் கோயிலில் ஆனி பௌர்ணமி அன்று ஸ்ரீ தாயுமானவ சுவாமிக்கு வாழைப் பழ தார்கள் சமர்ப்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழ வேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை செய்வார்கள். பூஜைகள் நிறைவு பெற்றதும் அர்ச்சகர், அந்த வாழைப்பழங்களை பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பார்.
புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி, மாங்கனித் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறும். ஆனி பௌர்ணமியன்று சுவாமியும் அம்பாளும் வீதியுலா வரும்போது காரைக்கால் அம்மையார் திருவுருவச் சிலையையும் தரிசிக்கலாம். அப்போது பக்தர்கள், மாடி வீடுகளில் ஏறி மாடியின் மேல் நின்று கொண்டு மாம்பழங்களை கூடை கூடையாக சுவாமி ஊர்வலத்தின் மீது வீசி எறிவார்கள்.
ஆனி மாத பௌர்ணமி: ஆனி மாதம் வரும் மூலம் நட்சத்திரம் அன்று இந்த பௌர்ணமி வருவதால் அந்த நாளில் மா, பலா, வாழை உட்பட கனிகளைப் படைத்து இறைவனை வணங்குவது மிகவும் சிறப்பானதாகும்.
தமிழகத்தில் சில கோயில்களில் ஆனி பௌர்ணமியையொட்டி, தெப்பத் திருவிழா நடைபெறும். அந்த வகையில் மன்னார்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள தீர்த்தக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். திருவாரூரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயில் அமைந்திருக்கிறது.