

நம் வீடுகளிலும், கோவில்களிலும் சாம்பிராணி போடுவதை பார்த்திருப்பீர்கள். பல நூற்றாண்டுகளாக சாம்பிராணியை நாம் பயன்படுத்தி வருகிறோம். பெண்கள் தலை குளித்துவிட்டு வந்த பிறகு முடிக்கு காட்டுவது, பூஜைக்கு பயன்படுத்துவது என்று உபயோகப்படுத்தி வருகிறோம். மேலும் இதை மருத்துவத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்.
Styrax benzoin என்ற மரத்தில் இருந்து கிடைக்கும் ஒருவிதமான பிசினை benzoin resin என்று சொல்வார்கள். இந்த பிசினை எடுக்க அந்த மரத்தில் சிறிதாக கீரல் போடப்படும். அதில் இருந்து வரும் பிசின் பேஸ்ட் போல இருக்கும். பிறகு அது இறுகி கெட்டியாகிவிடும். இதை பொடியாக்கினால் சாம்பிராணி கிடைக்கும். இதுபோலவே Boswellia என்ற மரத்தில் frankincense என்ற பிசின் கிடைக்கும். இதை குங்கிலியம் என்று சொல்வார்கள். இதையும் சாம்பிராணியுடன் கலந்து பயன்படுத்துவார்கள்.
இதுப்போன்ற சாம்பிராணியை நாம் பல நூற்றாண்டுகளாக கோவில்கள், வீடுகளில் பயன்படுத்தி வருகிறோம். கோவில்களில் சாம்பிராணி போடுவதற்கு ஆன்மீகம் சார்ந்த நிறைய காரணங்கள் சொல்கிறார்கள். கடவுளுக்கு தூபம் காட்டுவது, தெய்வீகமான சூழ்நிலையை உருவாக்குவது, எதிர்மறை சக்திகளை நீக்குவது,... இதுபோன்ற நிறைய காரணங்கள் இருக்கின்றன.
சாம்பிராணி பயன்படுத்துவதற்கு அறிவியல் பூர்வமான சில காரணங்களும் இருக்கிறது. சாம்பிராணியில் உள்ள Benzoin resin மற்றும் Frankincense resin இவற்றிற்கு இயற்கையாகவே காற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல், பூஞ்சைகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக அறிவியல் பூர்வமாக கண்டுப்பிடித்துள்ளனர்.
கோவில்களில் தரிசனம் செய்வதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடும்போது காற்றில் கிருமிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம். சாம்பிராணிக்கு காற்றில் உள்ள பேக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை அழிக்கும் சக்தி உள்ளதால் இது இயற்கையான Air purifier ஆக செயல்பட்டு நோய்தொற்று அபாயத்தை குறைக்கும். சாம்பிராணியின் அடர்த்தியான புகை கொசுக்கள், பூச்சுக்களை விரட்டியடிக்கும். அதில் இருந்து வரும் நல்ல நறுமணம் மனதிற்கு அமைதியை தரும் என்று சொல்லப்படுகிறது.
கம்ப்யூட்டர் சாம்பிராணி என்று சொல்கிறார்களே? இதில் கம்ப்யூட்டருக்கும் சாம்பிராணிக்கும் என்ன சம்மந்தம்? என்று கேட்டால், கம்ப்யூட்டர் சாம்பிராணி வந்த காலக்கட்டம் கம்ப்யூட்டர் பிரபலம் அடைந்துக் கொண்டிருந்தது.
எப்படி கம்ப்யூட்டர் சிரமமான மனிதர்களின் வேலையை சுலபமாக முடிக்க உதவியதோ அதைப்போல சாதாரண தூள் சாம்பிராணி போடுவதற்கு நெருப்பு வர வைத்து அதில் போட வேண்டியிருக்கும். இதுவே, கம்ப்யூட்டர் சாம்பிராணி என்றால், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பற்ற வைத்துக் கொள்ள முடியும். இந்த எளிமைக்காக கம்ப்யூட்டர் என்ற வார்த்தையை இதனுடன் சேர்த்திருக்கிறார்கள்.