
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்கிறார்கள். அதில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 'டான்’ பகுதியில் வசிக்கும் குஜ்ஜார் மக்கள் தீபாவளியை கொண்டாடும் விதம் முற்றிலும் வேறுபட்டது. அதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
குஜ்ஜார் மக்கள் முன்னோர்களை வழிபடும் சிராத்த தினமாகவும் அடுத்த நாளை மாட்டுப்பொங்கலாகவும் விசேஷமாகக் கொண்டாடுகின்றனர். தீபாவளியன்று காலையில் வயோதிகர் முதல் வாலிபர் வரை பாயசம், சப்பாத்தி, வெல்லம், நெய், லாப்ஸி அடங்கிய தட்டுகளை நீர்நிலைகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
அங்கே தீமூட்டி அதில் தட்டில் உள்ள பண்டங்களை சூடாக்குகின்றனர். ஆண்கள் வரிசையாக நிற்க, சூடாக்கிய உணவுப் பண்டங்களில் ஒரு பகுதியை 'டாப்' என்ற இலையில் இட்டு நீரில் போடுகின்றனர். குழுமி இருக்கும் கிராமவாசிகள் தங்கள் இறந்த முன்னோர்களை நினைத்து இந்த தினத்தில் நீங்களும் விருந்தை சுவையுங்கள் என்று கூறுகின்றனர். மீதமுள்ள பண்டங்களை எல்லோரும் பிரசாதமாக பகிர்ந்து உண்கின்றனர். இந்த சிராத்த பண்டிகையை அவர்களாகவே நடத்திக் கொள்கிறார்கள். ஒரே ஒரு பெண் மட்டும் மத்தளம் அடிப்பதற்காக அமர்த்தப்படுகிறார். அன்று மாலை ஆண், பெண் இருபாலரும் பசுவை வணங்குகின்றனர்.
அடுத்த நாள் குஜ்ஜார் பெண்கள் கோவர்த்தன பூஜைக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதற்குக் காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால், கோவர்த்தன் என்ற குஜ்ஜாரின மனிதனின் அழகிய மனைவியை கடவுள் விரும்பினாராம். அவர் சிங்க வடிவெடுத்து வந்தபோது ஆடு, மாடுகளும் கோவர்த்தனும் அவன் மகனும் இறந்து விட்டனர். இதனால் கோபம் கொண்ட கோவர்த்தன் மனைவி கடவுளுக்கு சாபம் கொடுக்க முனைந்தபோது அவள் கணவனையும் அவள் மகளையும் தீபாவளி தினத்தன்று உலகில் உள்ளோர் அனைவரும் பாராட்டி மகிழ்வர் என்று கடவுள் கூறினாராம்.
இதனால் அவள் கோபம் தணிந்தாளாம். இதனால் கோவர்த்தனின் உருவத்தை சாணத்தால் அமைத்து பூஜை செய்கிறார்கள். பூஜைக்குப் பின் பெண்கள் ஒருவரை ஒருவர் தழுவி மகிழ்கின்றனர். தீபாவளிக்கு பின் தொடர்ந்து பதினொரு நாட்கள் அவர்கள் வழிபடும் கோவர்த்தன உருவங்களை நீரில் கரைத்து விடுகின்றனர்.
மாட்டுப் பொங்கல்: தீபாவளிக்கு அடுத்த தினம்தான் அவர்களுடைய மாட்டுப் பொங்கல். அன்று காளை மாடுகளை நன்றாகக் குளிப்பாட்டி விலங்குகளை அலங்கரித்து, குங்குமம் இட்டு ஆரத்தி எடுக்கின்றனர். அறிவாளை மெதுவாக உயர்த்தி காளையின் காலில் தொடுகின்றனர். அவற்றுக்கு இனிப்புகளும் படைக்கிறார்கள். பின்னர் அவற்றை அவை உண்ணும்போது விழுகிற மீதம் மிச்சங்களை கூட வயல்வெளியில் எடுத்துப் புதைக்கின்றனர். அவை, 'யூகலா' என்ற நோயில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் என்று நம்புகின்றனர்.
முந்தைய தினம் வழிபட்ட கோவர்த்தன உருவங்களை மாடுகளின் குளம்புகளை தொடும்படி வைத்து, இதற்கு ஒரு கதையும் கூறுகிறார்கள். பார்வதி தேவி ஒரு சமயம் கடலில் உள்ள பலம் பொருந்திய முதலைகளை தொழ நினைத்தாராம். அவை தாங்கள் வசிக்கும் கடலை வணங்குமாறு பணிக்க, கடல் பூமியைக் காட்டியதாம். பூமி, ஆதிசேஷனான பாம்பையும், பாம்பின் வாலையும் காண்பித்தது. கடைசியில் சிவபெருமானையே வணங்குவதற்கு உரிய கடவுளாக வழிபட எண்ணினார் பார்வதி. அப்போது சிவனார், வாகனமான நந்தியை வணங்கும்படி சொன்னதன் பேரில் நந்தியையும், அதன் தாய் பசுவையும் தொழுதாராம் தேவி.
அது முதல் குஜ்ஜார்களின் காளை மாடுகள் வழிபாடு தொடங்கியதாம். காளை மாடுகளின் பூஜைக்கு பிறகு அவர்களது குலதெய்வமான பிருஜி உருவத்தை வீதிகள் வழியாக 16 ஜோடி காளைகளோடு ஊர்வலமாகக் கொண்டு வருகிறார்கள். அப்போது பலவித பூஜைகளும் நடைபெறுகின்றன. அன்றைய பூஜையில் பூஜாரி சாமி வந்து பின்னர் வர இருக்கும் நன்மை, தீமைகளை எடுத்துச் சொல்கிறார்.
அன்று பெரிய அளவில் மாட்டு வண்டி பந்தயமும் நடைபெறுகிறது. இந்த விழாவில் மக்கள் மகிழ்ச்சியாக கலந்து கொள்கிறார்கள். விவசாயத்தை நம்பி வாழ்கிற குஜ்ஜார் இன மக்களுக்கு முன்னோர் ஆசியும், நீரும், காளைகளும் எவ்வளவு முக்கியமானவை என்பது தீபாவளி நாளில் வலியுறுத்தப்படுகிறது. குஜ்ஜார் இன மக்களின் பழைமையான இந்தப் பண்டிகை கவர்ச்சிமிக்கதாக உள்ளது. இப்படி இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையானது பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுவதே சிறப்பு.