
நாம் பகவான் மகாவிஷ்ணுவை பெருமாள், நாராயணன், புருஷோத்தமன் என்றெல்லாம் அழைக்கிறோம். ஸ்ரீமன் நாராயணனை வைஷ்ணவர்கள் பெரும்பாலும் பெருமாள் என்றே அழைப்பார்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின்படி பெருமாளை பற்றிய கருத்துகளையும் அதன் காரணங்களையும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெருமாள் என்று அழைப்பதற்கு முன்னால் பகவான் மகாவிஷ்ணுவை ‘பெருமால்’ என்றுதான் அழைத்திருந்தார்கள். ‘பெரு’ என்றால் உயர்ந்த என்றும், ‘மால்’ என்றால் விஷ்ணு என்றும் பொருளாகும். விஷ்ணுவிற்குத் தமிழில் மால் என்ற ஒரு பெயரும் உள்ளது. ஆகவே, பெருமால் என்றால் மகாவிஷ்ணுவை குறிக்கும். இந்த பெருமால்தான் நாளடைவில் பெருமாளாக மாறியது.
பெருமாளுக்கும் தனிப்பொருள் இருக்கிறது. பெருமாள் என்றால் பெரிய + ஆள் ஆகும். அதாவது, மனிதர்களிலே உயர்ந்தவர் என்று பொருள். இந்த மனிதர்களிலே உயர்ந்தவர் யார் தெரியுமா? சாட்சாத் பகவான் புருஷோத்தமர்தான். புருஷர்களில் உத்தமமானவர்தான் புருஷோத்தமர் என்கிற பெருமாள்.
அடுத்தபடியாக, திருமால் என்பதன் பொருளை பார்க்கலாம். ‘திரு’ என்றால் லக்ஷ்மி, ‘மால்’ என்றால் விஷ்ணு அல்லது நாராயணன் என்று பொருளாகும். ஆகவே, திருமால் என்றால் லக்ஷ்மி நாராயணன் என்பதாகும்.
அடுத்தபடியாக நாராயணன் என்பதன் பொருளைப் பார்க்கலாம். நாராயணன் = நாரம் + அயனன். நாரம் என்றால் சம்ஸ்கிருதத்தில் தண்ணீர் என்று பொருள். அயனன் என்றால் இருப்பவர் என்று பொருள். எவரொருவர் தண்ணீரில் இருப்பிடத்தைக் கொண்டிருக்கிறாரோ, அவருக்கு நாராயணன் என்று பெயர். பெருமாள் அந்தப் பாற்கடலையே தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டவர். அவர் ஆதிசேஷன் நாகத்தின் மேல் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார்.
உலகின் படைத்தலுக்கும், காத்தலுக்கும், அழித்தலுக்கும் காரணம் அவர்தான். இதற்கு முன்னால் எப்போது உலகம் அழிந்ததோ அப்போது இவ்வுலகத்தில் வெறும் தண்ணீர் மட்டும்தான் இருந்தது. அப்பொழுது பெருமாள் ஆதிசேஷனை தனது படுக்கையாக்கிக் கொண்டு சமுத்திரத்தின் மத்தியில் அமர்ந்திருந்தார். இந்த நிலையில் உள்ள பெருமாளே நாராயணன் என்று அழைக்கப்பட்டார். பின்பு அவர் படைக்கும் தொழிலை மீண்டும் தொடங்கியபோதுதான் பெருமாளின் தொப்புள் கொடியிலிருந்து தோன்றிய தாமரையின் மீது அமர்ந்திருக்கும் பிரம்மாவைப் படைத்தார். அதற்குப் பிறகுதான் மறுபடியும் உலகத்தில் மற்ற உயிர்களும் படைக்கபட்டன.
அடுத்தபடியாக வேங்கடாசலபதி என்பதன் பொருளைப் பார்க்கலாம். இந்தப் பெயர் வேங்கடம் என்ற மலை பெயரிலிருந்து உருவானது. வேம் என்றால் பாவம், கடம் என்றால் போக்குபவர். வேங்கடமலை என்றால் பாவங்களை அகற்றும் மலை என்று பொருள். அசலம் என்றால் அசையாதது, பதி என்றால் இறைவன். வேங்கடாசலபதி என்றால் வேங்கட மலையில் நம் பாவங்களைப் போக்குவதற்காக பகவான் மகாவிஷ்ணு அசையாமல் அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்று பொருள். வேங்கடேஸ்வரன் என்றும் இவரை அழைப்பார்கள். பாவங்களைப் போக்கும் ஈஸ்வரன் என்று பொருள். இந்த வேங்கடாசலபதியை ஏழுமலையான் என்றும் கூறுவார்கள்.
கடல் மட்டத்தில் இருந்து 853 மீட்டர் உயரத்தில் உள்ள திருமலைக்குச் செல்லும்போது சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய 7 மலைகளைக் கடந்து செல்வதால் இந்த வேங்கடாசலபதியை ஏழுமலையான் என்றும் அழைக்கிறார்கள்.