மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை ஒரே சொரூபத்தில் வழிபட வேண்டுமா? ஸ்ரீ தத்தாத்ரேய பகவானை வழிபட்டால் மூவரையும் வழிபட்ட பலன் பெறலாம். நம்பிக்கையுடன் வழிபடுவோருக்கு அனைத்து ஸித்திகளையும் அருளும் தத்தாத்ரேயர் யார்? எதற்காக இந்த அவதாரம்?
அத்ரி முனிவருக்கும் அனசூயா தேவிக்கும் பிறந்தவர்தான் தத்தாத்ரேயர். அத்ரி முனிவர் உலக மாயைகளுக்கு அப்பாற்பட்டவர். மனைவி, பொன், பிள்ளை என்ற மூன்றிலும் பற்றற்றவர். காமம், குரோதம், லோகம் என்ற மூன்று தீய குணங்களையும் விலக்கியவர்.
இவர் மனைவி அனசூயை. அசூயை என்றால் பொறாமை. அனசூயா என்றால் பொறாமையற்றவர் எனப் பொருள். மகாபதிவிரதையான இவர் பொறாமையற்றவர் என்பதை குறிக்கிறது இவரது பெயர். இந்தத் தம்பதி தங்களுக்கு இணையற்ற குணங்கள் கொண்ட ஒரு மகன் பிறக்க வேண்டும் எனக் கடும் தவம் இயற்றினர். காலம் கனிந்தபோது நாரதர் அனசூயையிடம் வந்து இரும்புக் கடலைகளைத் தந்து வறுத்துத் தருமாறு வேண்டினார்.
நாரதர் கலகம் எப்போதும் நன்மையைத்தானே தரும்? பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவரும் இரும்புக் கடலையை தங்களால் வறுக்க முடியாது என்று சொன்னபின்தான் அனசூயையின் கற்பின் திறத்தை உலகுக்கு உணர்த்த நாரதர் இந்தத் திருவிளையாடலை நடத்தினார். இதனைக் கண்ட முப்பெரும் தேவியர் அனசூயை மீது சிறிதே பொறாமை கொண்டு அவரை சோதிக்க எண்ணி தமது கணவன்மார்களை அனசூயையிடம் சென்று பிட்சை பெறுமாறு வேண்டினர். கூடவே, ஒரு நிபந்தனையும் விதித்தனர்.
அந்த நிபந்தனையின்படி அம்மூவரும் அனசூயையிடம் சென்று, ‘ஆடையின்றி பிச்சை இட வேண்டும்’ என நிர்பந்தப்படுத்தினர். வந்திருப்பது முப்பெரும் தெய்வங்களே என உணர்ந்த அனசூயை செய்வதறியாது தனது பதியை மனதால் வணங்கி, மூவரையும் நோக்க அவர்கள் மூவரும் சிறு குழந்தைகளாயினர். மூவரையும் ஒருசேர அணைத்து தூக்க மூன்று தலைகளும் ஆறு கரங்களும் இரு கால்களும் கொண்ட ஒரு குழந்தையாக உருவெடுத்த அத்தெய்வங்களுக்கு உணவு பறிமாறி மகிழ்ந்தார்.
அனசூயையின் கற்பின் பெருமை உணர்ந்த முப்பெரும் தேவியரும் தங்கள் தவறை மன்னித்துத் தங்கள் கணவன்மார்களை தங்களிடம் மீண்டும் பழையபடி ஒப்படைக்கும்படி வேண்டினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அனசூயையும் மும்பெரும் கடவுளரையும் பழையபடி மாற்றி அவர்களிடம் ஒப்படைத்தார்.
சரீர அபிமானமற்ற அவதூத நிலை என்பது பெரும் ஞானிகளால் மட்டுமே சாத்தியம். அத்தகைய அவதூதராக விளங்கும் தத்தாத்ரேயர் அருளிய, ‘தத்தகீதை’ அரிய பொக்கிஷமாக உள்ளது. குழந்தைப் பேறு அருளும் தெய்வமாக இவர் திகழ்கிறார்.