
பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்ததாகும். அந்த நாள் ‘பைரவாஷ்டமி’ என்று வழங்கப்படுகிறது. அதிலும், தேய்பிறை அஷ்டமி காலபைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்புப் பெறுகிறது. சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு.
ஒரு வகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சமாவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவதைகளும் அஷ்ட பைரவிகளும் உண்டு.
ஸ்ரீ பைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து தனித்தனி அகல் எடுத்துக்கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய், இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய், மற்றொன்றில் விளக்கு எண்ணெய், அடுத்ததில் பசு நெய், அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரிமுகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்.
இந்த ஒரு அகலில் ஏற்றிய நெருப்பிலிருந்து இன்னொரு தீபம் ஏற்றக் கூடாது. தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி நல்லருள் கிட்டும். சனியினால் ஏற்படும் சங்கடங்கள் தீரவும், தோஷங்கள் நீங்கவும் சனி பகவானின் குருவான பைரவரை வணங்கலாம்.
பைரவரின் திரு உருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகி உள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழங்காலில் மகரமும், காலின் கீழ்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களின் பாவத்தை நீக்கி அருள் செய்வதால் இவருக்கு பைரவர் என்று பெயர் வந்தது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். படைத்தல், காத்தல், அழித்தல், அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
ஒவ்வொரு சிவன் கோயிலிலும் வடகிழக்கு பகுதியில் தனிச் சன்னிதியில் காலபைரவர். எழுந்தருளி இருப்பார். எந்த வித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார்.
சனி பகவானின் தாக்கம், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி தீரவும் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகவும் பைரவரை வழிபடலாம். பைரவரை தவறாது வழிபட்டால் பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.