

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தென்திருப்பேரை என்ற இடத்தில் மகர நெடுங்குழைகாதர் பெருமாள் கோவில் உள்ளது.
நவ திருப்பதிகளில் ஆறாவது தலமாக கருதப்படுகிறது. மகர குண்டலங்களுடன் காட்சி அளிக்கும் பெருமாள் பூமாதேவிக்கு அருளிய ஸ்தலமாகும். சுக்கிரன் வழிபட்ட ஸ்தலமாகவும் உள்ளது.
மிக நிகரில் முகில் வண்ணன் என்ற பெயரில் உற்சவமூர்த்தி சன்னதி உள்ளது. மூலவர் மகர நெடுங்குழை காதர் என்ற பெயரில் அமர்ந்தகோலத்தில் காட்சி அளிக்கிறார்.
தாயார் பெயர் குழைக்காதுவல்லி
நாச்சியார். தீர்த்தம் சுக்கிர புஷ்கரணி சங்க தீர்த்தம். பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும் பத்தாம் நாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும். வைகாசி விசாகத்தின்போது நம்மாழ்வார்சகிதம் உற்சவர் கருட வாகனத்தில் எழுந்தருள்வார். திருநெல்வேலி திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஆழ்வார் திருநகரியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இக்கோவில் சுக்கிரனின் அம்சமாக உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யப்பட்டது. முக்காலத்தில் மகாவிஷ்ணு பூமா தேவியுடன் தனியாக பேசிக்கொண்டு இருந்தார். இதை கவனித்த ஸ்ரீதேவி தன் கணவர் பூமாதேவி உடன் அதிக நேரம் செலவிடுகிறார் என கோபித்துக்கொண்டார். இதற்கான காரணம் பூமாதேவி கரிய நிறத்துடன் காட்சியளிப்பதால்தான் அவ்வாறு விஷ்ணு அவரிடம் நெருக்கமாக இருப்பதை உணர்ந்துகொண்டார்.
அங்கு வந்து துர்வாச முனிவர் ஸ்ரீதேவி வாடியமுகத்துடன் இருப்பதை அறிந்து அவரிடம் காரணம் கேட்டார்.
அதற்கு ஸ்ரீதேவி துர்வாச முனிவரிடம் உரிய காரணத்தை கூறினார்.
சரி என்று அவளை சமாதானப்படுத்திவிட்டு வைகுண்டம் சென்றார் துர்வாச முனிவர். வைகுண்டம் சென்ற இடத்தில் பூமாதேவி துர்வாச முனிவரை கண்டும் காணாமல் இருந்தார். வரவேற்கவில்லை. இதனால் கோபம் அடைந்த துர்வாச முனிவர் உனது கரிய நிறம் மறைந்து நீ சிவப்பு நிறமாக மாறுவாய் என சாபமிட்டார். பூமாதேவி தன் தவறை உணர்ந்து துர்வாச முனிவரிடம் பரிகாரம் ஏதேனும் உண்டா என்று கேட்டார்.
அதற்கு துர்வாச முனிவர் பூமியில் தாமிரபரணி நதிக்கரையில் பத்ரி வனம் உள்ள இடத்தில் நதிக்கரையில் மூழ்கி விஷ்ணுவை வழிபட்டால் உன் சாபம் நீங்கும் என்று கூறி மறைந்து சென்றார்.
பூமாதேவியும் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று பூமிக்கு வந்து தாமிரபரணி நதிக்கரையில் மூழ்கி விஷ்ணுவை வழிபட்டார். அவர் மூழ்கி எழுந்திருக்கும்போது கையில் இரண்டு மீன் வடிவ மகர குண்டலங்களுடன் வெளிவந்தார். அதன் பின்னர் மகாவிஷ்ணு அவருக்கு காட்சியளித்தார் அவர் சாபம் நீங்கியது.
பூமாதேவி தனக்கு கிடைத்த இரண்டு மகர குண்டலங்களை மகாவிஷ்ணுவுக்கு அணிவித்தார். எனவே இங்குள்ள பெருமாள் மகர நெடுங்குழை காதர் என அழைக்கப்படுகிறார்.
மற்றொரு கதை
முற்காலத்தில் இந்தப் பகுதியை ஆண்டு வந்த சுந்தரபாண்டிய மன்னன் என்பவர் தனக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லாததால் 108 அந்தணர்களை வைத்து பூஜை செய்ய விரும்பினார். அதன்படி அக்கம் பக்கத்திலிருந்து 108 அந்தணர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் உண்மையில் 107 அந்தணர்கள் மட்டுமே இருந்தனர். மன்னர் என்னும்போது 108 அந்தணர் என காட்டியது. கடைசியாக வந்த அந்தணர் பெருமாள் என மன்னர் நினைத்துக்கொண்டார். அதன் பின்னர் பூஜை செய்து மன்னருக்கு குழந்தை பிறந்ததாக வரலாறு.
இங்குள்ள மக்கள் பெருமாளையும் தங்களின் ஒருவராக கருதுகிறார்கள். வருண பகவானுக்கும் குரு பகவானுக்கும் யார் பெரியவர் என்ற சண்டை நடந்தது. இந்த சண்டையின் முடிவில் வருணபகவான் சாபம் அடைந்தார். அந்த சாபத்தை வர்ண பகவான் இந்த இடத்தில் வந்து கழித்ததாக வரலாறு. அதேபோன்று சுக்ராச்சாரியார் மகன் பத்ரன் என்பவர் துர்வாச முனிவர் சாபத்திற்கு ஆளானார். பத்ரன் இந்த இடத்திற்கு வந்து பெருமாளை வழிபட்டதால் அவரது சாபம் நீங்கி சுபிட்சம் அடைந்தார். எனவே இங்குள்ள பெருமாளுக்கு பத்ரன் ஒரு விமானம் அமைத்துக் கொடுத்தார். அந்த விமானத்திற்கு இன்றும் பத்ர விமானம் என அழைக்கப்படுகிறது
இங்குள்ள அம்பாள் அலைமகளின் அம்சமாக கருதப்படுகிறார்.
உற்சவர் நிகரில் முகில் வண்ணன் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். கோவில் பிரகாரத்தில் பன்னிரு ஆழ்வார்கள் ராமானுஜர் கிருஷ்ணர் நரசிம்மர் சன்னதிகள் உள்ளன.
கோவில் வளாகத்தில் நந்தவனமும் வடக்கு பக்கம் பரமபத வாசலும் உள்ளது. பங்குனி திருவிழாவின்போது ஐந்தாம் நாள் வழிபாட்டில் நாத்திகனும் ஆத்திகனாகமாறுவதாக ஐதீகம் இன்றும் உள்ளது.
வைகுண்ட ஏகாதசி கருட சேவை கோகுலாஷ்டமி போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வருண பகவான் சுக்கிரன் வழிபட்ட காரணத்தால் இந்த இடம் வருண சேத்திரம் என அழைக்கப்படுகிறது. மகர நெடுங்குழை காதரை வணங்கினால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும்.