திருப்பரங்கிரி, சுவாமிநாதபுரம், சத்தியகிரி, சமந்தவனம் இவையெல்லாம் என்ன என்கிறீர்களா? முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தின் வேறு பெயர்கள்தான். ஆதிசங்கரர் கூறிய ஷன்மதங்களான சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், கானாபத்யம், சவுரம் எனும் ஐந்து மதங்களின் தெய்வங்களை ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும் அமைப்பு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தவிர வேறு எங்குமில்லை.
மற்ற கோயில்களைப் போல திருச்சுற்று பிராகாரங்கள் திருப்பரங்குன்றத்தில் கிடையாது. கோயிலுக்குள் சென்றால் மேலே மேலே என்று ஏறிச் சென்று கொண்டிருக்க வேண்டியதுதான். சிவபெருமானே இங்கு மலை வடிவமாக அருள்வதாலும் இது குடவறை கோயில் என்பதாலும் இங்கு பிராகாரம் இல்லை. ஒரு காலத்தில் திருப்பரங்குன்றம் சிவன் கோயிலாகவே இருந்துள்ளது. இப்போதும் இங்கு மூலவர் சிவன்தான். இவரை சத்திகிரீஸ்வரர் என்று அழைக்கிறார்கள். தெய்வானை முருகன் திருமணம் இங்கு நடந்ததால் சுப்பிரமணிய சுவாமி கோயிலானது.
திருப்பரங்குன்றம் கோயில் விழாக்களின்போது சிவனுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், வீதியுலா செல்வது முருகப்பெருமான்தான். இவர் சிவ அம்சமானவர் என்பதால் இலரை, ‘சோம சுப்பிரமணியம்’ என்றும் அழைக்கிறார்கள். இக்கோயில் மகா மண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர் அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். அருகில் இரட்டை விநாயகர்கள் உள்ளனர்.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் மலைமேல் குமரர் என்று அழைக்கப்படும் முருகப்பெருமான் தனிச் சன்னிதியும், காசிக்கு நிகரான கங்கை தீர்த்தக் குளமும் அமைந்துள்ளன. இங்கு மட்டுமே வித்தியாசமாக வெள்ளை நிறத்தில் மயில்களைக் காணலாம்.
‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று வாதாடிய தெய்வீகப் புலவர் நக்கீரரை கருமுகி என்கிற பூதம் தொட்டு அவரது தவத்தை கலைத்த பாவ விமோசனத்தை போக்கிடுவதற்காகவே முருகப்பெருமான் தனது திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு பாறையைப் பிளந்து மலை உச்சியில் காசிக்கு நிகரான கங்கை தீர்த்தத்தை உருவாக்கினார். அந்தத் தீர்த்தம்தான் இன்றளவும் வற்றாத புனிதத் தீர்த்த குளமாக இருந்து வருகின்றது. இத்தகைய வரலாற்று புராணத்தை நினைவூட்டும் விதமாகத்தான் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மலை மேல் குமரனுக்கு வேல் எடுக்கும் திருவிழா நடைபெறுவது என்பது வழக்கத்தில் உள்ளது.
அன்று காலை 9 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கருவறையில் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கத்திலான வேல் எடுத்து பல்லக்கில் வைத்து நகரின் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றது. பின்னர் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படுகின்றது.
பிறகு முருகப்பெருமானால் உருவாக்கப்பட்ட தீர்த்தக் குளத்தில் அந்த வேலுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து மலை மேல் குமரன் சன்னிதியில் குமரருக்கும், வேலுக்கும் அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறும். அதன் பிறகு மாலையில் மலை உச்சியில் இருந்து வேல் எடுத்து வரப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, சகல பூஜையும் சர்வ அலங்காரமும், தீபாரதனையும் நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து இரவில் பூப்பல்லாக்கில் வேல் எடுத்து நகர்வலம் சென்று இருப்பிடம் செல்லப்படுகின்றது. அன்று கோயில் கருவறை முருகப்பெருமானுக்கு அபிஷேகம் ஏதும் நடைபெறாது.