இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவும் வாழ்க்கை முறை!

Heart health
Heart health
Published on

ரு மனிதனின் இதயம் சிறப்பாக செயல்பட சமச்சீரான திட்டமிடப்பட்ட உணவு முறை, இலகுவான வாழ்க்கை முறை மற்றும் சீரான உடற்பயிற்சிகள் அவசியம். இவற்றை முறையாகக் கடைப்பிடித்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக செயல்பட்டு மனிதனும் நீண்ட ஆயுளோடு வாழலாம்.

சமச்சீர் உணவு: இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான தேவை கொலஸ்ட்ரால் அளவு குறைவாகவும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் இதய அபாயத்தை குறைக்கவும் உதவும் உணவு வகைகள். கீரை, முட்டைகோஸ் போன்ற இலைக் காய்கள் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றம் கொண்டவை. இவை கொழுப்பின் அளவை குறைக்க உதவுகின்றன.

கொட்டைகள், விதைகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் வகைகள், வெண்ணெய் பழங்கள், பெர்ரிப் பழங்கள், ஸ்ட்ராபெரி போன்றவையும், முழு தானியங்களான பழுப்பு அரிசி, குயினோவா போன்றவற்றில் நார்ச்சத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. ஆலிவ் எண்ணெயில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால் இவை இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.

உடற்பயிற்சிகள்: ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உடற்பயிற்சிகள் அவசியம். அதிலும் கார்டியோ பயிற்சிகள் என சொல்லப்படும் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ஓட்டம் போன்றவை இரத்த ஓட்டத்தை அதிகரித்து ட்ரை கிளிசரைடுகளை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

யோகா: உடலில் நெகிழ்வுத்தன்மை மற்றும் சமநிலையை மேம்படுத்த யோகா உதவுகிறது. நடைப்பயிற்சி எளிதான மற்றும் பயன் தரக்கூடிய உடற்பயிற்சியான இது, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு வித்திடுகிறது.

இலகுவான வாழ்க்கை முறை: சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சிகள் எடுத்துக் கொண்டாலும் வாழ்க்கை முறை டென்ஷன் இன்றி இலகுவாக இருந்தால்தான் இதயம் சிறப்பாக வேலை செய்யும்.

சிரிப்பு: எத்தனை வேலைப் பளு இருந்தாலும் அவற்றுக்கு இடையே வாய்விட்டு சிரிப்பது இதயத்திற்கு நல்லது. மேலும், சிரிப்பு மன அழுத்தத்தை குறைக்கும். மனநிலையை மேம்படுத்தும். மகிழ்ச்சியான உணர்வுகளை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
பிபிம்பாப் ரைஸ் பௌல் என்றால் என்னவென்று தெரியுமா?
Heart health

நிம்மதி: போதும் என்ற உணர்வும் நிம்மதியான வாழ்க்கையும் இருந்தால் இதயம் இலகுவாக இயங்கும். இலக்கை நோக்கிப் பயணித்தாலும் சீரான முன்னேற்றமே நல்லது என்ற கோட்பாட்டை கடைபிடிக்க வேண்டும். விரைவில் வெற்றி பெற வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை ஓட்டப்பந்தயம் ஆக்கிக்கொள்ளக் கூடாது. எதிலும் நிதானமும் பொறுமையும் மிகவும் அவசியம். குடும்பம், நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து இருப்பது தனிமை உணர்வை குறைக்க உதவும். மனதில் பாரங்களை சுமந்து கொண்டிருக்காமல், அவற்றை நெருக்கமானவரிடம் வெளிப்படுத்தி விடவேண்டும்.

மைண்ட் ஃபுல்னஸ் பயிற்சிகள்: தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம் போன்ற மைண்ட் ஃபுல்னஸ் பயிற்சிகள் மன அழுத்தத்தை குறைக்கவும், மனநல மேம்பாட்டிற்கும் உதவும். இவற்றை தினமும் செய்ய வேண்டும்.

தூக்கம்: ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க போதுமான தூக்கம் அவசியம். தினமும் இரவு 7லிருந்து 8 மணி நேர தூக்கத்தை இலக்காக வைத்துக் கொண்டு உறங்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை: எண்ணெயில் பொரித்து வறுக்கப்பட்ட உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளக் கூடாது. பேக்கரி ஐட்டங்கள், மைதா, பரோட்டா போன்ற உணவுகள் இதயத்திற்கு ஆபத்தை விளைவிப்பன. மீண்டும் மீண்டும் சூடுபடுத்திய எண்ணெயில் செய்த பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களை தொடக்கூடாது.

புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதை போன்ற தீய பழக்கங்களை அறவே கைவிட வேண்டும். உடல் பருமன் இதயத்திற்கு நல்லதல்ல. உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டும். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com