நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை தப்பித்தவறிக் கூட பிறருக்கு தானமாக வழங்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு செய்தால் நம் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாட்சம் போய்விடும் என்று சொல்லப்படுகிறது. இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தானம் செய்வது நல்ல விஷயமாக இருந்தாலும், நமக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் இருக்க வேண்டும். நம்முடைய சாஸ்திரத்தில் சில நேரங்களுக்கு பிறகு சில பொருட்களை யாருக்கும் தானம் செய்யக் கூடாது என்று சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதை நாம் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
நாம் சமைக்கக்கூடிய சமையல் பாத்திரத்தை யாருக்கும் தானம் செய்யக் கூடாது. ஏனெனில், அதில்தான் மகாவிஷ்ணு வாசம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் அந்த பாத்திரத்தை யாருக்கும் நாம் தானமும் செய்யக் கூடாது. மேலும், அதை தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும். இதனால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் அதிகரிக்கும்.
நம் வீட்டை தூய்மை செய்யப் பயன்படுத்தும் துடைப்பம் மற்றும் முறத்தை யாருக்கும் தானம் செய்யக்கூடாது. தூய்மை செய்யக்கூடிய முக்கியமான பொருட்கள் மகாலக்ஷ்மிக்கு பிடித்தமானதாகும். எந்த ஒரு வீடு தூய்மையாகவும், நறுமணத்துடனும் இருக்கிறதோ அந்த வீட்டில் மகாலக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்கும். எனவே, துடைப்பம் மற்றும் முறத்தை தானம் செய்தால் மகாலக்ஷ்மியையே தானம் செய்ததற்கு சமமாகி விடும்.
மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டில் இருக்கும் வெள்ளை நிற பொருட்களை தானம் செய்யக்கூடாது. அரிசி, உப்பு, பால் போன்ற பொருட்களை தானமாகத் தரக் கூடாது. ஒருவேளை அந்தப் பொருட்களை தானமாகக் கொடுக்க வேண்டும் என்றால், குறைந்த அளவு ரூபாயை பெற்றுக்கொண்டுதான் கொடுக்க வேண்டும்.
நம்முடைய தங்க நகைகளை யாருக்கும் தானமாக தரக் கூடாது. தங்க நகையில் மகாவிஷ்ணு, குபேரர், லக்ஷ்மி தேவி வாசம் செய்கிறார்கள். அதுவும் திருமணமான பெண்கள் அவர்கள் பயன்படுத்தும் தங்க நகைகளை தானம் செய்வதன் மூலம் வீட்டில் உள்ள ஐஸ்வர்யம் குறைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. எனவே, இந்தப் பொருட்களை யார் வந்து கடனாகக் கேட்டாலும், கண்டிப்பாக தானம் செய்யக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.