சில விஷயங்கள் நம்புவதற்கு சற்று சிரமமாகவே இருக்கும். ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும். பலவிதமான விநோதங்கள் நிறைந்ததுதான் நாம் வாழும் இந்த உலகம். அவற்றில் ஒன்றுதான் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் கோமாளி மீன்கள். இந்தப் பதிவில் அதுபோன்ற கோமாளி மீன்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
கோமாளி மீன் (Clown Fish) கடலில் வாழும் ஒரு சிறிய வண்ணமயமான கடல் மீனாகும். இதன் உயிரியல் பெயர் ஆம்பிபிரியானினே (Amphiprioninae) என்பதாகும். இவை இந்தியப் பெருங்கடல், செங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளின் நீரில் பவளப் பாறைகள் நிறைந்த பகுதிகளில் அனிமோன்கள் எனும் விஷத்தன்மை உடைய ஒருவகை கடல் தாவரங்களை நம்பி வாழ்கின்றன. வெள்ளை நிறக் கோடுகள் மற்றும் கறுப்பு முனைகளுடன் கூடிய பிரகாசமான ஆரஞ்சு நிற உடலைக் கொண்டுள்ளன. மொத்தம் முப்பது வகையான கோமாளி மீன்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
கோமாளி மீன்கள் கடலில் வாழும் கடல் தாவரமான அனிமோன் எனப்படும் கடல் சாமந்திக்குள் பெரும்பாலும் வசிக்கிறன. இதனால் இவை அனிமோன் மீன்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை கடற் சாமந்தி உண்ணும் உணவின் மீதியையும் அவற்றின் மீதுள்ள ஒட்டுண்ணிகளையும் சாப்பிட்டு வளர்கின்றன. மேலும், இவை ஆல்கா மற்றும் பிளாங்க்டனையும் உண்டு வாழ்கின்றன. அனிமோனும் கோமாளி மீனும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றன.
கோமாளி மீன்கள் பிறக்கும்போது அனைத்துமே ஆண் இனமாகவே பிறக்கின்றன. குழுவிலுள்ள ஒரு பெரிய கோமாளி மீனானது பெண்ணாக மாறும். ஒரு முறை பெண்ணாக மாறினால் அவற்றால் மீண்டும் ஆணாக மாற்றமடைய முடியாது. கோமாளி மீன்கள் அதிகபட்சமாக பதினெட்டு சென்டி மீட்டர் வரை வளரக் கூடியவை. ஒரு பெண் கோமாளி மீன்கள் ஒரு முறைக்கு ஆயிரம் முட்டைகள் வரை இடுகின்றன. இவை பவளப்பாறைப் பகுதிகளில் உள்ள இடுக்குகளில் முட்டைகளை இடுகின்றன. இந்த முட்டைகளை குஞ்சு பொரிக்கும் வரை ஆண் கோமாளி மீன்கள் பாதுகாக்கின்றன.
கோமாளி மீன்கள் கண்கவர் வண்ணங்களில் காட்சியளிப்பதால் இவற்றால் கவரப்பட்டு அருகில் வரும் சிறு உயிர்களை அனிமோன் தனது உணவாக்கிக் கொள்கிறது. மேலும், விஷத்தன்மை உடைய அனிமோனில் இவை வசிப்பதால் இவற்றை எதிரிகள் நெருங்குவதில்லை.
அனிமோன்கள் விஷத்தன்மை உடையவை. அனிமோன்களை நம்பி வாழ்வதன் காரணமாக அதன் விஷத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கோமாளி மீன்கள் சளி போன்ற திரவத்தை உற்பத்தி செய்து தங்களைச் சுற்றி ஒரு கவசம்போல உருவாக்கிக் கொள்கின்றன. இந்தத் திரவக் கவசமானது அனிமோன்களின் விஷத்தன்மையிலிருந்து கோமாளி மீன்களைப் பாதுகாக்கின்றன.
கோமாளி மீன்கள் ஒருவித விநோத சப்தத்தின் மூலம் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ளுகின்றன. இவை பொதுவாக எட்டு ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. வெதுவெதுப்பான கடல் நீருக்குள் வாழும் கோமாளி மீன்கள் மெதுவாகவே நீந்துகின்றன. இவை ஜோடியாகவும் சிறு சிறு குழுக்களாகவும் வாழும் இயல்புடையன.
கடலில் வாழும் பெரிய வகை மீன்கள், சுறாக்கள், ஈல் போன்றவையே இவற்றின் பிரதான எதிரிகளாகும். கோமாளி மீன்கள் அளவில் சிறிய மீன்களாக இருப்பதன் காரணமாகவும் இவை கூட்டம் கூட்டமாக நீந்துவதாலும் பெரிய வகை மீன்கள் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான கோமாளி மீன்களை விழுங்கி விடுகின்றன.