
முருகப்பெருமான் மீது வீரபாண்டிய கட்டபொம்மன் அளவு கடந்த பக்தி வைத்திருந்தான். கட்டபொம்மன் தினமும் திருச்செந்தூரில் முருகனுக்கும் பூஜை முடிந்த பிறகே தன்மதிய உணவை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். கட்டபொம்மனின் கோட்டையோ பாஞ்சாலங்குறிச்சியில்.
திருச்செந்தூரோ தொலைவில் உள்ளது. முருகனுக்கு நிவேதனத்தை தெரிந்து கொள்ளும் விதமாக திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை ஆங்காங்கே கல்மண்டபங்கள் அமைத்து உள்ளே வெண்கல மணிகளை பொருத்தினார்.
ஒவ்வொரு மண்டபத்திலும் சேவகர்களை நிறுத்தியிருந்தார். திருச்செந்தூரில் உச்சிகாலபூஜை முடிந்ததும் திருச்செந்தூர் கோவில் மணி ஒலிக்கத் தொடங்கும். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மண்டபத்திற்கு இந்த மணியோசை கேட்கும்.
இதற்காக ஆறுமுகனேரி, ஆத்தூர், ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி உட்பட பலவிதங்களில் மணிமண்டபம் அமைத்திருந்தார் கட்டபொம்மன்.
இப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு மண்டபமாக மணி ஒலித்தது இறுதியில் பாஞ்சாலக்குறிச்சி மண்டபத்தில் மணி ஒலிக்கும். மேலும் திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் கட்டபொம்மனுக்கு திருச்செந்தூர் கோவிலிலிருந்து இலை விபூதி பிரசாதத்தை குதிரை வீரர்கள் கொடுத்து விட்டுச் செல்வார்கள்.
விபூதி கிடைத்த பிறகு தான் மற்ற வேலைகளை தொடங்குவார். மேலும் முருகன் மீதுள்ள பக்தியால் தன் நெற்களஞ்சியத்திலிருந்து அன்னதானத்திற்காக பல ஆயிரம் கோட்டை நெல்லை தானமாக வழங்கினார்.
ஒரு சமயம் இவர் தன் மனைவிக்காக தங்க அட்டிகை தயாரித்தார். அன்றிரவே அவர் கனவில் தோன்றிய முருகன், 'அந்த அட்டிகையை எனக்குத் தரலாமே!' என கேட்க உடனேயே முருகனுக்கு காணிக்கையாக தந்து விட்டார்.
இன்னொரு சமயம் மாசி விழா தேரோட்டத்திற்காக தயாராக இருக்கிறது. கட்டபொம்மன் வடம் பிடிக்க வேண்டும். அவனால் வர முடியவில்லை. பக்தர் இழுக்க சிறிது தூரம் வந்து நின்று விட்டது. கட்டபொம்மனுக்குச் செய்தி போய் அவரும் வந்து தேர் வடத்தைத் தொட தேர் நகர்ந்தது. இதைப்போல் பல அற்புதங்களை கட்டபொம்மன் மூலம் அவரின் பக்தியை மெச்சி அருளியிருக்கிறார் முருகப் பெருமான்.