சமீபத்திய புவியியல் ஆய்வு முடிவுகள், அமெரிக்காவின் கடற்கரைப் பகுதிகளை சூறையாடும் மிகப்பெரிய சுனாமி அலைகளைப் பற்றி எச்சரிக்கிறது. வட அமெரிக்காவில் காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலம் (CSZ) என்று அழைக்கப்படும் மிகப்பெரிய ஆபத்தான பிளவுக் கோடு ஒன்று உள்ளது. இது வடக்கு கலிபோர்னியாவிலிருந்து வான்கூவர் தீவு வரை சுமார் 965 கிமீ தூரம் நீளம் கொண்டது. இந்த பிளவுக் கோடு வட அமெரிக்க தட்டுக்கு அடியில் ஜுவான் டி ஃபுகா தட்டை அழுத்தி, பூகம்பத்தை ஏற்படுத்தும் பெரிய டெக்டோனிக் அழுத்தத்தை உண்டாக்குகிறது.
இந்த அழுத்தம் மிகப்பெரிய பூகம்பத்தை தூண்டி விட்டு, அமெரிக்க எல்லையில் உள்ள பசிபிக் பெருங்கடல் கடற்கரைகளை தாக்கி அழிக்க கூடும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அப்போது உருவாகும் சுனாமி அலைகள் மிகப்பெரிய அளவில் பலநூறு அடிகள் உயரத்தில் வந்து தாக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் வர்ஜீனியா டெக்கின் உள்ள புவியியல் ஆராய்ச்சியாளர்கள், டினா துரா தலைமையில் ஒரு புவியியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அடுத்த 50 ஆண்டுகளுக்குள் காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் 8.0 ரிக்டர் அளவில் ஒரு பூகம்பம் வர 15% வரை வாய்ப்பு உள்ளதாக கண்டுபிடித்தனர்.
வர்ஜீனியா டெக் ஆராய்ச்சி குழுவின் முடிவின் படி, வட அமெரிக்காவின் மிகவும் ஆபத்தான பிளவுக் கோடான காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் பல நூற்றாண்டுகளாக, கடல்சார்ந்த ஜுவான் டி ஃபுகா தட்டு, வட அமெரிக்க தட்டுக்கு அடியில் தள்ளப்படுகிறது. இதனால் ஏற்படும் டெக்டானிக் அழுத்தத்தின் விளைவால் ஒரு பெரிய பூகம்பம் உருவாகலாம். இதனால் தொடர்ச்சியான நிலநடுக்கம் ஏற்பட்டு, ஜுவான் டி ஃபுகா தட்டில் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும்.
இதனால் கடல் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். கடலுக்கு அடியில் ஏற்படும் பூகம்பம் பெரிய கொந்தளிப்புகளை உருவாக்கி அதன் தொடர்ச்சியாக, மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டு கடற்கரையோரத்தில் வசிக்கும் பல லட்சம் மக்களை அழிக்கும் அபாயம் உள்ளது. பிரம்மாண்ட அலைகள் தாக்குதலில் நீண்ட கடற்கரையோர பகுதியில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தும். வடக்கு ஓரிகான், தெற்கு வாஷிங்டன், மற்றும் வடக்கு கலிபோர்னியா ஆகியவை மெகா சுனாமியால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக வர்ஜீனியா டெக் ஆராய்ச்சி குழுவினர் கணித்துள்ளனர்.
மேலும், காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் உள்ள கடற்கரை பகுதிகள் நிரந்தரமாக தாழ்வை எதிர்நோக்கும், அந்தப் பகுதியில் கடல்நீர் உட்புகுந்து இடத்தினை அபகரித்துவிடும். அதேவேளையில் காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் இருந்து தொலைவில் இருப்பதால், நிலநடுக்கம் மற்றும் சுனாமி அபாயங்கள் இருந்தாலும் அலாஸ்கா மற்றும் ஹவாய் தீவுகள் ஆகியவை பெருமளவில் பாதிக்கப்படாது. ஆனாலும், குறைந்த அளவில் பாதிப்புகள் இருக்கும்.
எதிர்வர இருக்கும் சுனாமி அலைகள் பெரிய வெள்ளத்தை உண்டாக்கி கடற்கரைப் பகுதிகளை 6.5 அடி உயரம் வரை மூழ்கடித்து விடும் என்று தேசிய அறிவியல் அகாடமி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான சுனாமி அலைகள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக பறிக்க கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
இதுபோன்ற இயற்கை நிகழ்வுகள் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், கவனமாகத் தயாராக இருப்பது அபாயங்களைக் குறைக்கும்.
எதிர்வரும் இயற்கை பேரிடர்களை தடுக்க முடியாது என்றாலும், அதிலிருந்து தப்பிக்க முன் கூட்டிய பல யோசனைகளை செயல்படுத்தலாம். வெள்ளத்தைத் தாங்கும் வகையில் உள்கட்டமைப்பை ஏற்படுத்தலாம். பாதிக்கப்பட உள்ள கடற்கரைப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் குடிபெயர்தல் மிகவும் சிறப்பான ஒன்று. தொடர்ச்சியான புவியியல் ஆய்வுகளை அதிகப்படுத்துவதன் மூலம் எச்சரிக்கையுடன் இருக்கலாம்.