திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

Thirukannapuram Sowriraja Perumal
Thirukannapuram Sowriraja Perumal
Published on

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரத்தில் அமைந்த ஸ்ரீ சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது நைவேத்யம் செய்யப்படும் ஒரு பிரசாதமே, ‘முனையதரையன் பொங்கல்’ ஆகும். இந்த பிரசாதம் உருவான வரலாற்றை இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.

நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் பதினேழாவது திவ்ய தேசமாக திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் கோயில் விளங்குகிறது. மயிலாடுதுறையில் இருந்து திருப்புகலூருக்கு சென்று அங்கு ஆற்றைக் கடந்து சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். ராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டது. கருவறை மூலவர் நீலமேகப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். வழக்கமாக பெருமாள் அபய ஹஸ்த கரத்துடன் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் பெருமாள் தானம் பெறும் கோலத்தில் காட்சி தருகிறார். தாயார் கண்ணபுர நாயகி தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றார்.

முனையதரையன் என்னும் பெருமாள் பக்தர் ஒருவர் சோழ மன்னனுக்கு கப்பம் வசூல் செய்து கொடுக்கும் பணியில் இருந்தார். ஒரு சமயம் தெய்வ ஆராதனை நடைபெற முடியாத அளவுக்கு சோழநாட்டில் பஞ்சம் தலைவிரித்தாட முனையதரையன் கப்பம் வசூல் செய்த பணத்தை எடுத்து தெய்வ ஆராதனைக்கு செலவழித்துவிட்டார். முனையதரையன் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக நினைத்து அவரை மன்னர் சிறையில் அடைத்தார். சிறையில் இருந்தபோதும் அவர் பெருமாளின் திருநாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தார். அவர் மனைவியோ மனமுருகி சௌரிராஜப் பெருமாளிடம் கணவரைக் காப்பாற்றும்படி வேண்டி நின்றாள். சௌரிராஜப் பெருமாள் அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றி முனையதரையன் வசூல் செய்த பணம் தெய்வ ஆராதனைக்கு மட்டுமே செலவழிக்கப்பட்டது என்று கூறி அவரை சிறையிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

பெருமாளின் உத்தரவினை ஏற்ற மன்னர் முனையதரையனை விடுவிக்க, அவர் விடுதலையாகி இல்லம் வந்து சேர மாலை நேரமாகிவிட்டது. கணவர் வீடு திரும்பியவுடன் பெருமாளுக்கு அவர் மனைவி ஐந்து பங்கு பச்சரிசி மூன்று பங்கு பச்சைப்பயறு இரண்டு பங்கு நெய் இவற்றைக் கொண்டு பொங்கல் சமைத்து சௌரிராஜ பெருமாளை மனதில் நிறுத்தி மானசீகமாக நைவேத்யம் செய்தாள். மறு நாள் காலை வழக்கம்போல கோயிலை திறந்த பட்டர் பெருமாள் விக்ரஹம் மேனி முழுவதும் பொங்கலும் நெய்யுமாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட, பின்னர் விஷயம் வெளியே தெரிய வந்தது. அன்று முதல் இக்கோயிலில் அர்த்தஜாம பூஜையின்போது ஐந்து பங்கு அரிசி, மூன்று பங்கு முழுபச்சைப்பயறு சேர்த்து இரண்டு பங்கு நெய் சேர்த்து பொங்கல் சமைத்து பெருமாளுக்கு நைவேத்யம் செய்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கல் உப்பு - பொடி உப்பு வித்தியாசம் என்ன?
Thirukannapuram Sowriraja Perumal

முனையதரையன் பொங்கல் என்பது மருவி பேச்சுவழக்கில் ‘முனையதரன் பொங்கல்’ மற்றும் ‘முனியோதரன் பொங்கல்’ என்று தற்போது வழங்கப்படுகிறது.

கோயிலில் 5 நாழி அரிசி, 3 நாழி பருப்பு, 2 நாழி நெய் இவற்றைச் சோ்த்து இப்பொங்கல் பக்குவமாய் தயாரிக்கப்பட்டு நாள்தோறும் அர்த்தஜாமத்தில் நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஒரு நாழி என்பது ஒரு படி அளவைக் குறிக்கும்.

திருக்கண்ணபுரம் செல்பவர்கள் அவசியம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாளை தரிசனம் செய்து முனையதரன் பொங்கல் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com