
யார் இந்த திருக்கச்சி நம்பிகள்?
பெருமாளுடன் பேசுகின்ற வாய்ப்பைப் பெற்றவராகிய திருக்கச்சி நம்பிகள், 1009-ஆம் ஆண்டு வீரராகவர், கமலாயர் தம்பதிகளுக்கு நான்காவதாகப் பிறந்தவர். இயற்பெயர் கஜேந்திர தாசர் ஆகும்.
கஜேந்திரதாசர் திருமாலின் மீது பக்தி கொண்டவராய் வளர்ந்து வந்தார். அவரது சகோதரர்கள் மூவரும் பொருளீட்டுவதில் விருப்பத்துடன் இருந்தார்கள். ஆனால், கஜேந்திரதாசருக்கு பொருளீட்ட விருப்பமில்லை. மனமெல்லாம் பெருமாளையே எண்ணியிருந்தது.
ஒருநாள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த திருக்கச்சிநம்பிகளின் கனவில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் வந்து, "கஜேந்திரதாசரே! நந்தவனம் அமைத்து, பூக்களைப் பறித்து மாலையாக்கி தினமும் எனக்கு புஷ்ப கைங்கர்யம் செய்வாயாக! உனக்கு எம் அருளைப் பூரணமாகத் தந்தோம்!" என்று ஆணையிட்டார்.
பூவிருந்தவல்லியில் தந்தை கொடுத்த நிலத்தில் நந்தவனம் அமைத்தார் திருக்கச்சிநம்பி. பூக்களைப் பறித்து மாலையாக்கி, நடந்தே காஞ்சிபுரம் சென்று வரதராஜருக்கு மாலை அணிவித்து அழகுபார்த்தார்.
சில காலம் சென்றபின், பூவிருந்தவல்லிக்கு வராமல், காஞ்சிபுரத்திலேயே தங்கி ஆலவட்டம் என்னும் விசிறி சேவையினை பெருமாளுக்கு செய்தார். திருக்கச்சி நம்பிகளின் மேலான தூயபக்தியை கண்டு, பெருமாளே நம்பிகளுடன் பேச ஆரம்பித்துவிட்டார்.
பெருமாளின் பெருமையைக் கூறும் வகையில், 'தேவராஜ அஷ்டகம்' என்கிற கிரந்தத்தை கஜேந்திரதாசர் அருளினார். பரம ஸாத்வீகராக இருந்து தனது தொண்டுகளை இடை விடாமல் செய்து வந்தார்.
கஜேந்திரதாசரை சிறப்பிக்கும் வகையில், வைணவர்கள் இவரைத் திருக்கச்சிநம்பிகள் (கச்சி-காஞ்சி) என அழைக்கலாயினர்.
கஜேந்திரதாசரை, இராமானுஜர் குருவாக எண்ணினார். ஒரு சமயம், இராமானுஜர், திருக்கச்சி நம்பிகளை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கவும், அந்த உணவின் மிச்சத்தை உண்ணவும் எண்ணுகிறார். இதை அறிந்த திருக்கச்சி நம்பிகள் இந்த எண்ணம் வர்ணாசிரம தர்மத்திற்கு விரோதமானது எனக் கூறுகிறார். ஆனால் இராமானுஜரின் விருப்பமே முதன்மையாக இருந்ததால், வர்ணாசிரமத்தினைப் புறந்தள்ளி, இராமானுஜரின் வீட்டில் உணவருந்தினார் திருக்கச்சி நம்பி எனக் கூறப்படுகிறது.
தினமும் காஞ்சிக்குச் சென்று கைங்கர்யம் செய்துவந்த திருக்கச்சி நம்பிகளுக்கு முதுமையின் காரணமாக ஏற்பட்ட தள்ளாமைக் கண்டு வருந்தினார் பெருமாள். உடனே, திருக்கச்சி நம்பிகளுடைய வீட்டிலேயே வைணவ திவ்யதேசங்களில் முதன்மையாகப் போற்றப்படும் திருவரங்கம், திருமலை, திருக்கச்சி (காஞ்சி) ஆகிய தலங்களில்தான் உறைகின்ற காட்சிகளைக் கொடுத்து, முக்தியும் அருளினார் பெருமாள்.
அந்த இடமே, இன்று பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகில் திருக்கச்சி நம்பிகள் சமேத வரதராசப்பெருமாள் கோயில் என வழிபாட்டில் இருந்து வருகிறது.
மாசி மாதம் மிருகசீர்ஷ நட்சத்திரம் அன்று திருக்கச்சி நம்பிகள் அவதரித்ததால், அனைத்து வைணவ ஆலயங்களிலும், பூந்தமல்லியிலும் நம்பிகளுடைய உற்சவம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.
(இவ்வருடம் நம்பிகள் அவதரித்த மிருகசீர்ஷ நட்சத்திரம், வெள்ளிக்கிழமை 7/3/2025 அன்று கொண்டாடப்படுகிறது.)