

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் உள்ள தங்க கோபுரத்திற்கு நாளை (பிப்ரவரி 6-ந் தேதி) காலை கும்பாபிஷேகம் விழா நடக்க உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாாரயண பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவில் வரலாற்று சிறப்புமிக்க வைணவத் திருத்தலமாகும். இந்த கோவிலில் உள்ள பெருமாள் வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பாக நின்ற, அமர்ந்த, கிடந்த, நடந்த என நான்கு நிலைகளில் காட்சி தருகிறார். இத்தலம் ராமானுஜர் "ஓம் நமோ நாராயணாய" எனும் மந்திரத்தை அனைவருக்கும் போதித்த இடமாக சிறப்பிக்கப்படுகிறது.
சௌமிய நாராயண பெருமாள் (பகவான்), ஸ்ரீ திருமாமகள் தாயாருடன் அருள்பாலிக்கிறார். மூலவர் சௌமிய நாராயண பெருமாள், பிரம்மா, சிவபெருமான் மற்றும் தேவர்கள் அசுரர்களை அழிக்க மகாவிஷ்ணுவை சந்திக்க "கோஷ்டியாக" (கூட்டமாக) கூடியதால் இத்தலம் திருகோஷ்டியூர் என பெயர் பெற்றதாக வரலாறு கூறுகிறது.
இக்கோவில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. தரைத்தளத்தில் நர்த்தன கிருஷ்ணன் கோலாத்திலும் (நடனமாடும் கிருஷ்ணர்), முதல் தளத்தில் சயன நாராயண பெருமாள் கோலத்திலும் (அனந்த சயனத்தில்), இரண்டாம் தளத்தில் உபேந்திர பெருமாள் கோலத்திலும் (நின்ற கோலம்), மூன்றாம் தளத்தில் பரமபத நாதர் கோலத்திலும் (அமர்ந்த கோலம்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார்.
இந்நிலையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இக்கோவிலில் உள்ள அஷ்டாங்க விமானத்தின் (மூலஸ்தான கோபுரம்) முதல் நிலைக்கு தங்கக்கவசம் பொருத்தும் திருப்பணி பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் அந்த பணி முடிவடைந்துள்ளது. இந்த திருப்பணியை தேவஸ்தானம், இந்து அறிநிலையத்துறை, சவுமிய நாராயண பெருமாள் சாரிடபிள் டிரஸ்ட் ஆகியவை செய்து வருகின்றனர்.
இந்த பணியில் தங்கத்தகடு வேயப்பட்ட விமானத்தில் முதல்நிலையின் உச்சியில் தங்க கலசத்துடன் பத்மம், மகா பத்மம், கண்ணாடி சட்டம், பண்டியல் தகடு, விமானத்தின் எட்டு திசைகளிலும் எட்டு கந்தர்வ கன்னிகள், நாசித் தலைகள், படிச்சட்டம் ஆகியவை வேயப்பட்டுள்ளது. அஷ்டாங்க விமானத்தில் 3600 சதுர அடிக்கு தாமிரத்தகடு அடித்து கவசம் செய்யப்பட்டுள்ளது.
இத்திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளை தங்க விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (வியாழக்கிழமை) 6, 7-வது கால யாகசாலை பூஜையும், நாளை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6-ம்தேதி) அதிகாலை சிறப்பு ஹோமமும், யாகசாலையில் இருந்து கடம்புறப்பாடு நடக்க உள்ளது.
அதனை தொடர்நது காலை 9.26 முதல் 10.18 மணிக்குள் மூலஸ்தானத்தில் அமைக்கப்பட்ட தங்கவிமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து பெரும் திரளான மக்கள் வருவார்கள் என்பதால் கோவிலில் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.