திருக்கோவிலூர் வைபவம்!

Thirukoviloor Vaibhavam
Thirukoviloor Vaibhavam

ன்னிரு ஆழ்வார்களில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் என்று  அழைக்கப்படுகிறார்கள். காஞ்சிபுரத்தில் திருவெஃக்காவில் ஒரு பொய்கையில் தாமரைப் பூவிலிருந்து அவதரித்தவர் பொய்கையாழ்வார். மாமல்லையில் குருக்கத்திப் பூவிலிருந்து அவதரித்தவர் பூதத்தாழ்வார். மயிலையில் ஓர் கிணற்றுக்குள் செவ்வல்லிப் பூவிலிருந்து அவதரித்தவர் பேயாழ்வார். மூன்று ஆழ்வார்களும் தமிழ்நாட்டில் பெண்னை ஆற்றங்கரையில் அமைந்த திருக்கோவிலூர் எனும் ஊரில் சந்தித்துக் கொண்டபோது சுவையான ஒரு அதிசயச் சம்பவம் நிகழ்ந்தது.

ஒருநாள் திருக்கோவிலூரில் பெரும் மழை பெய்து கொண்டிருந்தது.  பொய்கையாழ்வார் அச்சமயம் அந்த ஊரில் இருந்தார். மழையில் நனையத் தொடங்கிய பொய்கையாழ்வார் அருகில் இருந்த மிருகண்டு முனிவரின் குடிலுக்குச் சென்று அவரிடம் அங்கே தங்கிக்கொள்ள அனுமதி கேட்டார். குடிலுக்கு அருகில் ஒரு சிறிய இடைக்கழி இருந்தது. அங்கு ஒருவர் மட்டுமே தங்கும் அளவிற்கு இடமிருந்தது.  அந்த இடத்தில் தங்கிக்கொள்ளுமாறு முனிவர் கூற பொய்கையாழ்வார் அந்த இடைக்கழியில் தங்கிக்கொண்டார். சிறிது நேரத்தில் அந்த இடத்தில் படுத்துக்கொண்டார்.

மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. அந்த சமயத்தில் பூதத்தாழ்வார் அப்பகுதிக்கு வந்தார். அவர் அவ்விடத்தில் சிறிது நேரம் தங்கிச்செல்ல பொய்கையாழ்வாரிடம் அனுமதி  கேட்டார். அந்த இடைக்கழியில் ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம். உடனே பொய்கையாழ்வார் எழுந்து, “இந்த இடத்தில் ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம். வாருங்கள்.  நாம் இருவரும் அமர்ந்து கொள்ளுவோம்” என்றார்.

பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு ஸ்ரீமந் நாராயணனின் பெருமைகளைப் பற்றிப் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் பேயாழ்வார் அங்கு வந்து தங்க இடம் வேண்டினார். உடனே பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் அவரை அழைத்தார்கள்.

“வாருங்கள். இந்த இடத்தில் ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம். மூவர் நிற்கலாம்.  நாம் மூவரும் இந்த இடத்தில் நின்று கொள்ளுவோம்.”

இதையும் படியுங்கள்:
அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?
Thirukoviloor Vaibhavam

அந்த இடம் இருளில் மூழ்கிக் கிடந்தது. ஒருவருடைய முகம் மற்றவருக்குத் தெரியவில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் மூவரும் அந்த இடத்தில் நின்றபடி திருமாலின் பெருமைகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் அந்த இடத்தில் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. மூவர் மட்டுமே நிற்கக்கூடிய இடத்தில் நான்காவதாக யாராவது வந்து நின்றால் இட நெருக்கடி ஏற்படுமே அதுபோல ஒரு இட நெருக்கடி ஏற்பட்டது. இதை உணர்ந்த மூவரும் யோசித்தார்கள்.

“நான்காவதாய் இந்த இடத்தில் யாரோ வந்து நிற்பதைப் போலத் தோன்றுகிறது” என ஒருவர் சொல்ல, மற்ற இருவரும் ஆமோதித்தார்கள்.

“நம்முடைய அனுமதி பெறாமல் இங்கு ஒருவரும் வர வாய்ப்பில்லை. ஆனாலும் நான்காவதாய் இந்த இடத்தில் யாரோ ஒருவர் வந்திருப்பதாய்த்தான் தோன்றுகிறது.”

இதை உறுதி செய்ய விரும்பிய பொய்கையாழ்வார் உலகத்தை ஒரு விளக்காய் நினைத்துக் கடலை அவ்விளக்கில் நெய்யாய் ஊற்றி கதிரவனைத் திரியாய் அமைத்து ஒரு விளக்கை ஏற்றினார்.

‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று’

இவரைப் பின்பற்றி பூதத்தாழ்வார் அன்பை விளக்காய் அமைத்து அதில் ஆர்வத்தை நெய்யாய் ஊற்றி அதில் தன்னுடைய தூய சிந்தனையை திரியாக அமைத்து ஒரு ஞானவிளக்கை ஏற்றினார்.

‘அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புறு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்’

இவ்விரு விளக்குகளின் மூலமாக வந்திருப்பது யார் என்பதை பேயாழ்வார் உணர்ந்தார். திருமாலே தங்களுடன் நிற்கிறார் என்பதை அறிந்தார். உடனே ஆனந்தக் கூத்தாடினார்.

‘திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிச்சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று’

பேயாழ்வாரின் மேற்காணும் பாடலின் வாயிலாக வந்திருப்பது ஸ்ரீமந் நாராயணனே என்பதை உணர்ந்த அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள். பின்னர் பெருமாள் மூவருக்கும் காட்சி தந்து அருள்புரிந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com