அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?

Why is the garland of betel leaves for Hanuman?
Why is the garland of betel leaves for Hanuman?
Published on

னுமன் சிறந்த ஸ்ரீராம பக்தர். எந்த இடத்தில், ‘ராம’ நாமம் ஒலிக்கிறதோ அங்கே நிச்சயம் ஆஞ்சனேயப் பெருமான் இருப்பார் என்பது ஐதீகம். மிகுந்த பராக்கிரமசாலியும், வரப்பிரசாதியுமான கடவுள் இவர். அனுமனை பக்தியோடும், நம்பிக்கையோடும் பூஜிக்கும் பக்தர்களின் மனக்குழப்பங்கள், நோய்கள் தீர்ந்து, பணக்கஷ்டங்கள் விலகும்.

அனுமனை தரிசிக்க ஏற்ற நாட்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகள் ஆகும். என்றும் சிரஞ்சீவியாய் இந்த பூமியில் இருப்பவர் ஆஞ்சனேய சுவாமிகள். ஆஞ்சனேயருக்கு வடை மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்வது வழக்கம்.

அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?

அசுரன் ராவணன், சீதா தேவியை தூக்கிச் சென்று, அசோக வனத்தில் சிறை வைத்திருந்தபோது அனுமன் சீதையை சந்தித்தார். ஸ்ரீராமரின் கணையாழியை கொடுத்து சீதா தேவியிடம் இருந்து சூடாமணியைப் பெற்றார். அப்போது சீதா தேவி மனம் மகிழ்ந்து அனுமனை ஆசீர்வதிக்க எண்ணினார். அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வெற்றிலைக் கொடி படர்ந்திருந்ததைப் பார்த்தார். சில வெற்றிலைகளைப் பறித்து, அனுமனின் தலையில் போட்டு, ’இந்த இலை உனக்கு வெற்றியை தரட்டும்’ என ஆசீர்வதித்தார்.

அதன் காரணமாகவே தாங்கள் நினைக்கும் காரியங்கள் வெற்றி பெற வேண்டும் என்று பக்தர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகின்றனர். சுப காரியங்களில் வெற்றிலை தாம்பூலம் வைத்துக் கொடுப்பது, திருமணங்களில் மணமக்களை ஆசீர்வதிப்பதற்கு வெற்றிலையில் பணம் வைத்துக் கொடுப்பது என்பது நடைமுறையில் இருக்கிறது.

வடை மாலை சாத்துவதன் காரணத்தை அறிவோமா?

அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல தோற்றமளித்த சூரியன், குழந்தை அனுமனை மிகவும் கவர்ந்து விட்டது. அடுத்த கணமே சூரியனைக் கையில் பிடிக்க எண்ணி, வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.

இதையும் படியுங்கள்:
கந்த சஷ்டியில் முருகனால் வதம் செய்யப்பட்ட சூரபத்மன் பிறப்பு பற்றி தெரியுமா?
Why is the garland of betel leaves for Hanuman?

அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. அனுமனிடம் தோற்றுப்போன ராகு பகவான், அவருக்கு ஒரு உறுதிமொழி கொடுத்தார்.

தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ, அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். இந்த உணவுப் பண்டம் தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் ராகு பகவான் சொன்னார்.

அதனால்தான் உளுந்தினால் ஆன வடைகளைத் தயாரித்து மாலையாக்கி அனுமனுக்கு சாத்தி வழிபாடு நடைபெறுகிறது. இதனால் ராகு தோஷம் நிவர்த்தி ஆவதுடன், அனுமனின் அருள் கிடைத்து, நாம் நினைத்த காரியமும் ஜயமாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com