

இந்து மத வழிபாட்டில் பலவிதமான விரத முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை வழிபடுபவர்கள் கடைபிடிக்கும் முக்கியமான ஒரு விரதம் கந்தசஷ்டி விரதம். கந்தசஷ்டி விழாவானது, ஐப்பசி மாத அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் நெற்றிப் பொறியில் இருந்து அவதரித்த முருகப்பெருமான், சூரபத்மனை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றதன் அடையாளமாக இந்த விரத விழா கொண்டாடப்படுகிறது.
சூரபத்மன் என்ற அசுரன், தேவர்களை கொடுமைபடுத்தி வந்தான். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் தனது ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகியவற்றை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக் கண்ணிலிருந்து பிரகாசமான ஜோதி பிழம்பு தோன்றியது. அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியாததால் வாயு பகவான் ஏந்திச் சென்று கங்கையில் இட, அதை கங்கையாலும் தாங்க முடியாத காரணத்தினால் அக்னி பகவான் அதை எடுத்துச் சென்று சரவணப் பொய்கை தாமரை மலர்களில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாக மாறின. பார்வதி தேவி பாசத்துடன் அக்குழந்தைகளை ஒன்றாக வாரிச் சேர்த்து அணைக்க ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் முருகப்பெருமான் அவதரித்தார்.
சகல சக்திகளுடனும், பரிவாரங்களுடனும் முருகன் சூரபத்மனை அழிக்க புறப்பட்டுச் சென்றார். சூரபத்மனுடன் முருகப்பெருமான் போரிட்டார். மகா வல்லமை பெற்ற சூரபத்மன் பல வடிவங்களை எடுத்து முருகனை வெல்ல முயன்றான். ஆனால், சூரபத்மன் இறுதியாக எடுத்த வடிவமான மாமரத்தினை முருகப்பெருமான் வேல் கொண்டு இரண்டாகப் பிளந்தார். சூரபத்மனை வதம் செய்து முடித்தார். நம்மிடம் உள்ள தீய குணங்களை மனதிலிருந்து அகற்றி, நற்குணங்களைப் பெற இவ்விரதமானது, முருக பக்தர்களால் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது.
கந்தசஷ்டி விரதத்தைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடைபெறும். இந்நிகழ்வைக் காண திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இது மட்டுமின்றி, பழனி, திருப்போரூர் முதலான பல முருகப்பெருமானின் தலங்களிலும் இந்நிகழ்வு நடைபெறும். இதன் பின்னர் முருகனின் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
கந்தசஷ்டி விரதத்தை கடைபிடிக்கும் நடைமுறைகளைப் பற்றி இனி தெரிந்து கொள்ளலாம்.
விரதம் தொடங்கும் நாளன்று அதிகாலை எழுந்து நீராடி முருகப்பெருமானை மனதார வழிபட வேண்டும். காலை, மாலை இரு வேளைகளும் நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். விரத நாட்களில் கந்தசஷ்டி கவசம், கந்தர் அநுபூதி, கந்தகுரு கவசம், சண்முகக் கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் முதலான துதிகளை பாராயணம் செய்தால் மிகுந்த பலனைத் தரும். முடிந்தவர்கள் விரதமிருக்கும் நாட்களில் தினமும் அருகில் உள்ள முருகப்பெருமானின் தலத்திற்குச் சென்ற வழிபடுவது நல்லது.
கந்தசஷ்டி விரதத்தின்போது தினமும் ஒரு வேளை உணவு உண்ண வேண்டும். சஷ்டி நாளன்று உண்ணாமல் விரதம் கடைபிடிக்க வேண்டும். இடையில் பால் மற்றும் பழங்களை அருந்தலாம். காபி, தேநீர் போன்ற பானங்களை அருந்தக் கூடாது.
அசைவ உணவினை இந்த விரதத்தின்போது கட்டாயம் தவிர்க்க வேண்டும். சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எக்காரணம் கொண்டும் அசைவ உணவு சாப்பிடக் கூடாது. ஓட்டல் உணவுகளையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்த எளிய உணவுகளையே சாப்பிட வேண்டும்.
சூரசம்ஹாரம் அன்று அதிகாலை எழுந்து குளித்து பூஜையறையில் விளக்கேற்றி முருகப்பெருமானை மனதார வணங்க வேண்டும். முடிந்தவர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியை முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
கந்தசஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் நல்ல முறையில் நடந்தேறும். முருகப்பெருமானின் அருள் உங்களை ஒரு கவசம் போல உடனிருந்து காக்கும்.