தர்ப்பை புல்லால் வளரும் அம்மன் விக்கிரகம்: சமயபுரம் மாரியம்மன் காட்டிய ஆகாச அற்புதம்!

Samayapuram Mariamman
Samayapuram Mariamman
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருநாரையூர் ஆகாச மாரியம்மன்  கோவில். ஆனால் இந்தக்கோவிலில் ஆகாச மாரியம்மனுக்கு திருவுருவத் திருமேனி கிடையாது. தீப ஒளியாக மட்டுமே இந்த தேவி காட்சி தருகிறார். சமயபுரம் மாரியம்மனே இந்த கோவிலில் அருவமாக இருந்த ஆட்சி செய்கிறாள். இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் அமாவாசையை அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்கி, பதிமூன்று நாட்களுக்கு திருவிழா மிகச்சிறப்பாக விழா நடைபெறுகிறது.

அப்போது சமயபுரம் மாரியம்மன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து, திருவிழாவுக்கு என்று செய்யப்படும் விக்கிரகத்தில் சேர்ந்து தரிசனம் கொடுப்பதாக ஐதீகம்.

இந்த அம்மன் உருவம் தர்ப்பையால் உருவாக்கப்பட்டு வெள்ளியால் செய்யப்பட்ட கண், காது, மூக்கு போன்றவற்றால் அலங்கரிக்கப்படுகிறது. அந்த நேரத்தில்  இந்த ஊர் மக்கள் அளிக்கும் கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களைக் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்கிறார்கள்.. இதன் பின்னணியில் உள்ள கதை.

முற்காலத்தில் வாழ்ந்த கவுரவ குல கவரை செட்டியார்கள் குதிரை மீது வளையல் வைத்து நாள்கணக்கில் பல ஊர்களுக்கும் சென்று வளையல் வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் சக்தி திருத்தலமான சமயபுரத்தில் பங்குனி பெருவிழாவில் வணிகம் செய்தனர். ஒருமுறை சமயபுரம் கோவிலுக்கு வந்து இரவு தங்கினர். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, ​​சமயபுரம் மாரியம்மன் இளம்பெண் வடிவம் எடுத்து வியாபாரி ஒருவரின் கனவில் தோன்றினாள். வியாபாரி அவள் கைகளுக்கு கண்ணாடி வளையல்களை  அடுக்க ஆரம்பித்தார். ஆனால் வளையல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக உடைந்தது. வியாபாரி குழப்பமடைந்து, இளம்பெண்ணின் கைகளை அலங்கரிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்.

வியாபாரி , 'தாயே, வளையல்கள் அனைத்தும் உடைந்து விடுகிறதே. உனக்குத் தகுந்த வளையல்கள் போடவேண்டும் என்றால் தயவுசெய்து நீ எங்கள் ஊருக்கு வா. இரண்டு கைகள் நிறைய வளையல்களைப் போட்டு விடுகிறேன். உனக்கு முல்லை, மல்லிகை மலர்களைச் சூட்டுகிறேன். எங்கள் ஊருக்கு வா தாயே!' என்று அன்புடன் வேண்டினார்.

இதையும் படியுங்கள்:
முத்து முத்தாய் முகம் வியர்க்கும் அதிசய அம்மன்! இதன் ரகசியம் தெரியுமா?
Samayapuram Mariamman

அதற்கு அந்த இளம்பெண், 'உங்கள் ஊருக்கு வந்தால்தான் வளையல் போடுவாயா? இப்போதே உங்கள் ஊர்காரர்களிடம் எழுந்தருள்கிறேன்' என்று சொல்லிவிட்டு மறைந்தாள். வியாபாரி கனவு கலைந்து எழுந்தார். அருகில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வளையல்கள் அனைத்தும் உடைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தவிர, அவருடன் வந்திருந்த மற்ற வியாபாரிகளுக்கு அம்மை போட்டிருப்பதையும் கண்டார். இது சமயபுரத்தாளின் சோதனை என்பதை அறிந்த அவர், 'எங்களை மன்னித்துவிடு தாயே' என்று கோவிலை நோக்கிக் கைகூப்பினார்.

விடிந்ததும் காலையில் கோவில் குருக்கள் அந்த வியாபாரியிடம்,’ஐயா, வெளியூரிலிருந்து வந்திருக்கும் வளையல் வியாபாரி தாங்கள்தானே? இந்தாருங்கள் பொற்காசு. உடைந்த வளையல்களுக்கு உரிய தொகை. இதை உங்களிடம் சமயபுரத்தாள் கொடுக்கச் சொன்னாள்' என்றார். மேலும், அம்மை கண்டவர்களுக்கு மாரியம்மன் பிரசாதமாக குங்குமத்தை நெற்றியில் பூசினார் குருக்கள். அம்மை கண்டவர்கள் உடனே குணமடைந்து எழுந்தார்கள்.

கனவில் வளையல் போட்டுக்கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்துகொண்ட அவர், மற்றவர்களிடம் கூறவே, அவர்கள் அனைவரும் தங்களுக்கும் அன்னை காட்சி தரவேண்டும் என்று வேண்டினார்கள். அதை ஏற்று அன்னை ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் காட்சி தந்து அருளாசி வழங்கினாள். அன்னையை தரிசித்த வியாபாரிகள், 'தாயே, எங்கள் ஊருக்கு வந்து அருளவேண்டும்' என்று மனமுருக வேண்டினார்கள். அதனை ஏற்ற சமயபுரத்தாள் சொன்னதுபோல் ஒவ்வொரு வருடமும் திருநாரையூர் தலம் வந்து, பத்து நாட்களுக்குத் தங்கி அலங்காரத்துடன் காட்சி தந்து அருள்புரிகிறாள் என்பது ஐதீகம்.

இந்த விழா தற்பொழுது பத்து நாள்களுக்கு மேல் நடந்து பதிமூன்றாம் நாள் நின்ற கோலத்தில் தேரில் சமயபுரத்திற்கு எழுந்தருள்வதுடன் விழா நிறைவு பெறுகிறது. அச்சமயம் அம்மன் கையில் வெள்ளிக்குடம் கொடுத்து வீதியுலா நடைபெறும். இதன்மூலம், அம்மன் சமயபுரம் செல்கிறாள் என்பது ஐதீகம். இக்கோவிலில், ஆண்டுக்கு 10 நாட்கள் தவிர, அம்மன் உருவமற்றவராக அதாவது சூட்சும ரூபத்தில் இருக்கிறார். விளக்கு மட்டுமே அம்மன் என்று வழிபடப்படுகிறது.  

இதையும் படியுங்கள்:
ஒரே சங்கு வடிவ ஸ்ரீ வல்லப சேத்திரம்: திருவாழ் மார்பன், இரட்டை கொடிமரம், மழலை பாக்கியம் அருளும் அதிசய தலம்!
Samayapuram Mariamman

வைகாசி அமாவாசைக்குப் பிறகு, உள்ளூர் மக்கள் தர்ப்பை புல்லைப் பயன்படுத்தி அம்மன் சிலையை உருவாக்கி, மல்லிகைப் பூக்கள் மற்றும் கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கின்றனர். உடையக்கூடிய தர்ப்பை புல்லால் அம்மன் உருவாகும் கோவிலை நாம் வேறு எங்கும் காண முடியாது. ஒவ்வொரு நாளும் புதிதாக தர்ப்பை புல் சேர்க்கப்படும், இதனால் வடிவம் படிப்படியாக வளரும். மற்றும் அலங்காரங்களும் தினமும் மாற்றப்படும். லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன் போன்ற பல்வேறு வடிவங்களில் அவள் சித்தரிக்கப் படுகிறாள், கடைசி நாளில் ராஜ ராஜேஸ்வரி வடிவத்தில் உச்சம் பெறுகிறாள்.

தஞ்சை மாவட்டத்தில் நோய் தீர்க்கும் அம்மன் கோவில்கள் பல இருந்தாலும் அம்மை நோய் தீர்க்கும் முக்கிய ஆலயமாக நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இதனால் இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com