

இருதயாலீஸ்வரர் கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூரில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இந்த கோவில் சுமார் 1000 ஆண்டு முதல் 2000 ஆண்டுகள் வரை பழமையான கோவிலாகும்.
மூலவர் இருதயாலீஸ்வரர், தாயார் மரகதாம்பிகை இருவரும் அருள்பாலிக்கிறார்கள். இருதய நோய் உள்ளவர்கள் இங்கு திங்கட்கிழமை தோறும் வந்து வழிபட்டு பூரண குணம் அடைகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
இத்தலம், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான பூசலார் நாயனார் அவதரித்த தலமாகும். சிவனின் மூலஸ்தானத்திலேயே பூசலார் நாயனாரின் சிலை இருப்பது இந்த கோவிலில் உள்ள தனி சிறப்பாகும்.
பூசலார் இறைவனை தன் இதயத்தில் வைத்து பூஜித்து கோவில் கட்டியதால் இதயம் தொடர்பான நோய்க்கு இங்கு வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்த நிலையில் கோவிலில் சந்நிதிகள், விமானங்கள் உள்ளிட்டவை சீரமைப்பு, புதுப்பித்தல் உள்ளிட்ட திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து நாளை (ஜனவரி 28-ம் தேதி) காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
ராஜகோபால சுவாமி திருக்கோவில்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமையான ராஜகோபால சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரைப்போல, இந்த ஆலயம் இருப்பதால் இத்திருத்தலத்தையும் ‘தட்சிண துவாரகை’ என்கிறார்கள். பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் உற்சவம் நடக்கும் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். 23 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ள இந்த கோவிலில் ராஜகோபாலசாமி, வண்துவராபதி மன்னன், வித்யா ராஜகோபாலன் என அழைக்கப்படுகிறார்.
இந்த ஆலய மூலவரின் திருநாமம், ‘வாமதேவப் பெருமாள்.’ உற்சவரின் திருநாமம்தான் ‘ராஜகோபால சுவாமி.’ தாயாரின் திருநாமம் ‘செங்கமலத் தாயார்’ என்பதாகும்.
மாடு மேய்க்கும் திருக்கோலத்தில் கிருஷ்ணராக கட்சி தருகிறார். மூலவர் பரவாசுதேவ பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். அதேபோல செண்பகலட்சுமி தாயார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
இந்தக் கோவில் 16 கோபுரங்களுடன் 7 தூண்கள், 24 சன்னிதிகள், ஏழு மண்டபங்கள், ஒன்பது புனித தீர்த்தங்களை உள்ளடக்கி பரந்து விரிந்து கிடக்கிறது.
பழமையான இந்த கோவில் முதன்முதலில் 10ஆம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் சோழ மன்னர்கள் மூன்றாம் ராஜராஜ சோழன், மூன்றாம் ராஜேந்திர சோழன் ஆகியோரால் கட்டப்பட்டது, பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்களால் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த கோவிலில் கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்த நிலையில், கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்த நிலையில் ரூ.80 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வந்தது.
ராஜகோபுரங்களை புதுப்பிக்கும் பணிகள் உள்பட பல்வேறு திருப்பணிகள் நடந்தன. கோவிலின் முன்புறம் முழுவதும் பேவர் பிளாக் கற்கள் கொண்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது. உட்புற வளாகத்திலும் கருங்கல் கொண்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள், சன்னதிகளுக்கு புது வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன.
இந்நிலையில் புனரமைப்பு பணிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து நாளை (ஜனவரி 28-ம்தேதி) காலை 9.30 மணிக்கு கோபுரங்களுக்கும் கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் 25-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று கோவில் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக, பாமணி ஆற்றில் இருந்து 81 கலசங்களில் புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
15 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற உள்ளதால் மன்னார்குடி மட்டுமல்லாது சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.