ஒரு நாள் அரங்கன் திருமஞ்சனத்திற்காக நீர் கொண்டு செல்ல பொற்குடத்துடன் காவிரிக்கு வந்தார் பட்டர் லோகசாரங்கர். அங்கு வழியை மறைத்துக்கொண்டு, அரங்கன் நினைவில் தன்னை மறந்த நிலையில் நின்று கொண்டிருந்த திருப்பாணரை விலகும்படிச் சொன்னார் பட்டர். மெய்மறந்த பாணருக்கு, பட்டர் சொன்னது செவியில் ஏறவில்லை. இதனால் கோபமுற்ற லோகசாரங்கர் ஒரு கல்லை எடுத்து வீச, அது திருப்பாணரின் நெற்றியில் பட்டு குருதி பெருகிறது. உடனே அவருக்கு உணர்வும் வருகிறது. ‘அரங்கன் திருமஞ்சனத்தை தடை செய்து விட்டேனோ’ என்று பதறிய பாணர் அங்கிருந்து உடனே நகர்ந்தார்.
அதையடுத்து, நீரை முகர்ந்து கொண்டு சன்னிதிக்கு திரும்பிய லோகசாரங்கர், அரங்கனின் நெற்றியிலிருந்து செந்நீர் பெருகி வழிவதைக் கண்டு மனம் பதைத்தார். ஏதும் செய்ய இயலாமல் விதிர் விதிர்த்தார்.
‘பல காலமாக நம்மைப் பாடி வருகின்ற பாணன் புறம்பே நிற்க பார்த்திருக்கலாமோ’ என்று எண்ணிய எம்பெருமான், அன்றிரவு பட்டரின் கனவில் தோன்றி, ‘பட்டரே, எம் அன்பனை இழி குலத்தவன் என்று எண்ணாது, உன் தோளில் ஏற்றி எம்முன் கொணர்க’ என்கிறான். அதிகாலையிலேயே காவிரிக் கரைக்குச் சென்ற பட்டர், அரங்கனின் கட்டளையை நிறைவேற்றுகிறார்.
வையமளந்தானை கண்ணாரப் பருகிய பாணர், அவன் திருவடி முதல் திருமுடி வரை ஒவ்வொரு அவயங்களாகக் கண்டு குளிர்ந்து மனம் உருகிப் பாடிய பத்து பாசுரங்களே அமலனாதிப்ரான்.
‘கமல பாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே’
‘சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென் சிந்தனையே’
‘உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே’
என்று ஒவ்வொரு அங்கமாகக் கண்டு பாடியபோது பரவசித்து மகிழ்ந்த பரந்தாமன், பத்தாம் பாசுரத்தைக் கேட்டு திடுக்கிட்டான்.
‘பிறவியெடுத்து இத்தனை காலம் காணாமல் கழித்த எம்பெருமானே தொடேம் தூரத்தில் நின்று சேவித்தாயிற்று . என் அமுதனை கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே. நான் பிறவி எடுத்ததன் பலன் முடிந்தது. இனி என் கண்களுக்கு வேலை இல்லை. அவை எனக்கு தேவையில்லை’ என்று தீர்மானமாகச் சொல்ல, தீர்த்தன் திடுக்கிட்டான்.
‘இதற்காகவா லோகசாரங்கரை அவர் தோள் மேல் பாணரை சுமந்து வரச் சொன்னோம். இனி எனக்குக் கண்களே தேவையில்லை என்று சொன்னவரை அந்தகனாய் வெளியே அனுப்பவா? அது தனக்குத் தகுமா? பக்கத்தில் இருந்து பாணருக்காய் இன்று பரிந்துரைத்த பத்மாவதிக்கு என்ன பதில் சொல்வது? இன்னும் தன்னருகே வருமாறு பாணரை அழைத்த எம்பெருமான், அவரை திருப்பாணாழ்வாராக்கித் தன்னோடு ஜோதியில் இணைத்துக் கொண்டான்.