

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா 15 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
பங்குனி திருவிழா நாட்களில் தினமும் காலையிலும் இரவிலும் வாகன வீதி உலா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் அன்று ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வும், இரண்டாம் தேதி சூரசம்ஹாரமும், மூன்றாம் தேதி முருகப்பெருமானுக்குத் தங்க கிரீடம் சூட்டி நவரத்தினங்களால் செங்கோல் வழங்கும் பட்டாபிஷேகமும் நடைபெற்றது.
திருவிழாவின் முத்தாய்ப்பாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் 4 -ம்தேதி முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதற்கு மறுநாள் 14 ம் நாளில் பங்குனி தேரோட்டம் நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் தனி அடையாளம் அவரது வேல்தான். இதனை தவிர்த்து மயில் வாகனமும், சேவல் கொடியும் அவரை எளிதில் அடையாளம் காட்டும்.சில ஆலயங்களில் அவருக்கு ஆடு வாகனம், சில நேரங்களில் யானை வாகனத்தில் கூட முருகப்பெருமான் காட்சி தருகிறார். ஆனால், எங்கும் இல்லாத வகையில் கையில் வேல் இன்றி தராசுடன் முருகப்பெருமானின் சிற்பம் திருப்பரங்குன்றம் தேரில் உள்ளதை காணலாம்.
இந்த வைரத்தேரில் எண்ணற்ற சிற்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் இந்த முருகன் தராசை பிடித்த கோலம். இந்த தேர் திருமலை நாயக்கரின் காலத்தில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புராணகாலத்தில் இந்த கோயில் தேர் அரிச்சந்திர மகாராஜா வழங்கியதாக சொல்லப்படுகிறது.
அந்நாளில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலைக்கு தென் புறத்தில் இருந்தது. அப்போது இந்த பகுதி 'தராசுக்கார பூமி' என்று அழைக்கப்பட்டதாம். அந்தளவிற்கு திருப்பரங்குன்றம் பகுதி அந்நாளில் நீதி நேர்மையை நிலைநாட்டும் நகரமாக இருந்துள்ளது. அப்போது இங்கு குடிகொண்டுள்ள முருகப்பெருமான் நீதியை வழங்கும் தெய்வமாக விளக்கியிருக்கிறார். அதனை நினைவூட்டும் வகையில்தான் திருப்பரங்குன்றம் தேரில் முருகப்பெருமான் கையில் தராசை பிடித்து இருக்கின்றார் என்கிறார்கள். இந்த கோலத்தை வேறு எங்கும் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் பிரதான தேர், கோவில் வாசல் முன்பு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த பெரிய வைரத்தேரில் உள்ள விநாயகர், பெருமாள், சிவபெருமான், கருப்பணசுவாமி, தராசு முருகப் பெருமானுக்கு பூஜை, தீபாராதனை முடிந்தே பங்குனி உத்திரம் விழா ஆரம்பமாகிறது. ஓவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழாவின் 14-வது நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க 3 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள கிரிவலப்பாதையில் தேர் வலம் வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
முருகப்பெருமான் தனது தேவியர் தெய்வானையுடன், மலையைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில், முருகப் பெருமானுக்கு வெட்டிவேர் மாலை அணிவித்து, தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவது தனிச்சிறப்பு.
இத்தகைய பழம் பெருமை வாய்ந்த தேரை வடம் பிடிப்பதற்காக திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள 38 கிராம ஊராட்சிகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள், நாட்டாண்மைகாரர்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கப்படுவதும் பாரம்பரிய பழக்க வழக்கமாக தொன்று தொட்டு வருகிறது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா' என்று கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தேரின் வடத்தை பிடித்து இழுப்பர். சிறிய சட்டத்தேரில் எழுந்தருளிய விநாயகர் பெருமான் முன்னே செல்ல, அதை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் செல்வர். இதையடுத்து சட்டத்தேரும், பெரிய தேரும் ஒன்றன்பின் ஒன்றாக கிரிவல பாதையில் ஆடி, அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து செல்லும். அப்போது பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக வாழைப் பழங்களை சூறைவிட்டு முருகப்பெருமானை வழிபடுவர்.