முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடு திருத்தணிகை. இக்கோயிலில் அருளும் முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (சூலம்) இடக்கையை தொடையில் வைத்து ஞான சக்திதரராகக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் தமது திருக்கரத்தில் வைத்திருக்கும் வேல் இக்கோயில் முருகனிடம் கிடையாது. அலங்காரம் செய்யும்போது மட்டுமே வேல், சேவல் கொடியோடு காட்சி அளிப்பார்.
முருகப்பெருமான் சூரர்களை சம்ஹாரம் செய்து இத்தலத்தில் கோபம் தணிந்து சாந்தமாகக் காட்சி தந்த தலமென்பதால் இக்கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. இதற்குப் பதிலாக சூரசம்ஹார தினத்தன்று முருகனை குளிர்விக்க ஆயிரம் கிலோ பூக்களால் புஷ்பாஞ்சலி செய்வார்கள்
இத்தலத்தில் முருகன் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். இந்திரன் தனது மகள் தெய்வானையை முருகனுக்கு மணமுடித்தபோது ஐராவதம் எனும் தேவலோக யானையை பரிசாகக் கொடுத்தார். இந்த யானையைக் கொடுத்ததால் தேவ லோகத்தில் வளம் குறைந்தமையால் இங்கு முருகன் யானையின் பார்வையை தேவ லோகம் பார்த்து திருப்பி இருக்கும்படி கூற, யானையும் தேவலோகத்தைப் பார்த்தபடி காட்சி தருகிறது.
திருத்தணிகை கோயில் கருவறையின் பின்புறச் சுவரில் குழந்தை வடிவில் ஆதி பாலசுப்பிரமணியர், கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு மார்கழியில் குளிரும் என்பதால் வெந்நீரால் அபிஷேகம் நடைபெறும். இக்கோயிலில் விநாயகர் யானை ரூபத்தில் வள்ளியை பயமுறுத்திய ஆபத்சகாய விநாயகராகக் காட்சி தருகிறார்.
வருடத்தின் 365 நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளுடன் அமைந்துள்ளது இக்கோயில் படிக்கட்டுகள். ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாள் இரவு இம்மலைக் கோயில் படிகளுக்கு பூஜை செய்வர். ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்து ஒரு திருப்புகழ் பாடி வழிபட்ட பிறகு நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜையும், ஆங்கிலப் புத்தாண்டில் 1008 பால் குடம் எடுத்தவர்களின் பாலில் விசேஷ அபிஷேகமும் நடைபெறும்.
ஆடி கிருத்திகையன்று பத்து லட்சம் காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்கள். முருகப்பெருமானை இந்திரன் ஆடி கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதால் இங்கு ஆடி கிருத்திகை விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்திரன் கல்கார புஷ்பம் எனும் மலரை முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலம் என்பதால் இங்கு மலர் காவடி எடுப்பது மிகவும் விசேஷம்.
இந்த ஆலயத்தில் வழங்கப்படும் விபூதி, சந்தனம் ஆகிய பிரசாதங்கள் தீராத வியாதிகளை தீர்க்கும் என்பது ஐதீகம். முருகனுக்கு, இந்திரன் காணிக்கையாகக் கொடுத்த சந்தனக் கல்லில் அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே இவருக்கு சாத்தப்படுகிறது. இதனை பக்தர்கள் நெற்றியில் வைக்காமல் நீரில் கரைத்து குடிப்பார்கள். இதனால் பல நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. விழாக் காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் கிடைக்கும்.
திருத்தணி முருகனை மும்மூர்த்திகள் மட்டுமின்றி, நந்தி தேவர், வாசுகி நாகம், அகத்திய முனிவர் ஆகியோரும் வழிபட்டுள்ளனர். பெருமாள் ஆலயங்களைப் போலவே முருகன் திருப்பாதத்தை (சடாரி) பக்தர்கள் தலையில் வைத்து சாத்துவது இக்கோயிலின் தனிச்சிறப்பு.
இக்கோயிலில் பக்தர்கள் எடுக்கும் காவடி வித்தியாசமானது. பெரிய நீண்ட குச்சியில் ஒரு முனையில் பூக்களும், மற்றொரு முனையில் அர்ச்சனைப் பொருள்களும் கட்டி காவடி எடுப்பது இங்கு மட்டுமே உள்ள சிறப்பு.
இந்திரன் இத்தலத்தில் சுனை ஒன்றை ஏற்படுத்தினான். இன்றும் அந்த இந்திர நீலச் சுனையின் தீர்த்தமே அபிஷேகத்திற்கு பயன்படுகிறது. பக்தர்களுக்கு இதில் குளிக்க அனுமதி இல்லை.
திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும் என நினைத்தாலோ, அந்த திசை நோக்கி தொழுதாலோ, நோய் நொடிகள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆடிக் கிருத்திகையில் திருத்தணிகை ஆலயம் சென்று முருகனை வழிபட்டு நோய் நொடிகள் நீங்கி அருள் பெறுவோம்.