திருவாய்மொழியும் திருவிண்ணகரப்பனும்!

Sri Oppiliyappan
ஸ்ரீ ஒப்பிலியப்பன்

ழ்வார்களிலே தலைவனாகப் போற்றப்படும் ஸ்வாமி நம்மாழ்வாரின் அவதார நன்னாள் வைகாசி விசாகம். ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்றே போற்றப்படும் ஸ்வாமி நம்மாழ்வார், பல திவ்ய தேச பெருமாள்கள் மீதும் தித்திக்கும் பாசுரங்களை அருளி இருக்கிறார். திருவிண்ணகரம் என்றே போற்றப்படும் கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயிலில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஒப்பிலியப்பன் மீது அருளிச் செய்துள்ள பத்து பாசுரங்கள் (ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி), நம் கண் முன்னே ஒப்பிலியப்பனையே கொண்டு வந்து சேர்த்து விடும்.

‘நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை
செல்வம் மல்கு குடி திருவிண்ணகர் கண்டேனே’ (6.3.1)

என்கிற முதல் பாசுரத்தில், ‘சேராததை சேர்த்து, பொருந்தாததை பொருந்த செய்யும் தன்மை கொண்டு ஒப்பில்லா பெருமையோடு விளங்கும் ஒப்பிலியப்பனின் ஒப்பற்ற குணத்தை புகழ்ந்து பேசுகிறார். வறுமையையும், செல்வத்தையும் கொடுத்து பாவ செயல்கள் செய்தவர்களை நரகத்தில் தள்ளும் அதே பெருமாள்தான் புண்ணியம் செய்தவர்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறான். பகைவனை நண்பனாக ஆக்குபவனும் அப்பெருமானே. அதேபோல,  தவறு புரிந்தால் நண்பனை பகைவனாக மாற்றக்கூடிய தன்மை படைத்தவனும் அவன் ஒருவனே. விடமும் அமுதமுமாய் என்று நாம் செய்த பாவங்களுக்கெல்லாம் பிராயச்சித்தமாக திருமாலின் திருவடியை நாம் சரணடையும்போது அந்த பாவங்களுக்கெல்லாம் விஷமாக இருந்து நம்மை பாவ கூட்டங்களிலிருந்து விடுவிப்பவனே, பக்தர்களுக்கு ஆரா அமுதமாய் நின்று கைங்கர்ய செல்வம் மிகுதியாய் உள்ள, செல்வம் மிகு குடி திருவிண்ணகர் கண்டேனே என்று அப்படிப்பட்ட திருவிண்ணகரத்திலே அருள்புரிகிறான்’ என்கிறார் நம்மாழ்வார்.

இரண்டாம் பாசுரத்தில், ஐம்புலன்களால் கிடைக்கக்கூடிய இன்பங்களையும், துன்பங்களையும் ஒப்பிலியப்பன் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறான். நமக்கு ஏற்படும் குழப்பங்களில் தெளிவும் ஏற்பட காரணமாக இருப்பவனும் அவனே.  நிறைய பாவங்கள் புரிந்தவர்களை தக்கப்படி தண்டனைகள் கொடுத்து திருத்துபவனும் இப்பெருமானே அதேபோல நற்காரியங்கள் செய்தவர்களுக்கு தன் அனுக்ரஹத்தையே பிரசாதமாக பரிசாக வழங்கி அவர்களை வாழ்க்கையில் பிரகாசிக்க செய்பவனும் இந்த ஒப்பிலியப்பனே. ‘தழலும் நிழலுமாய்’ என்று பெருமாளை விட்டு  பக்தர்களாகிய நாம் பிரிந்திருக்கும்போது பகவானைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் நமக்கு அதுவே வெப்பம் போல நம்மை வாட்டும். கோயிலுக்கு சென்று அவனது தரிசனத்தை நாம் பெறும்போது அதுவே நிழலில் நிற்பதை போல குளுமையான ஆனந்தத்தை நமக்கு தரவல்லது என்று சொல்லும் ஆழ்வார், அப்படிப்பட்ட பெருமாள் கண்டுகொள்வதற்கு அரியதான திருவிண்ணகரத்தில் நின்று அருள்பாலிக்கிறான் என்றே பாசுரம் இடுகிறார்.

எண்ணமாய் மறப்பாய் என்று நமக்குள் ஒரு ஞாபகத்தை விதைப்பவனும் அவனே, மறதியை கொடுப்பவனும் திருவிண்ணகரை சேர்ந்த பிரானே. கருமை, வெளுமையுமாய், மெய், பொய், இளமை, முதுமை, புதுமை, பழைமையுமாய் (6.3.5.) கருமை நிறம் கொண்ட கண்ணனாக அவதாரம் புரிந்த அதே பெருமாள்தானே வெளீர் நிறம் கொண்ட பலராமனாகவும் அவதாரம் செய்தான். எனவே, கருமை, வெளுமையாய் இருப்பவனும் இதோ இந்த பெருமாளே என்று  ஒப்பிலியப்பனாக  காட்சி கொடுக்கும் பெருமாளை சொல்லும் நம்மாழ்வார், உண்மையாகவும் பொய்மையாகவும் இருக்கும் இதே பெருமாள் அன்றோ  பூமாதேவியை  திருமணம் செய்து கொள்வதற்காக முதியவனாகவும் வந்தான்.

இளமை, முதுமை, புதுமை, பழைமை என இவ்வுலகில் உள்ள அனைத்தையுமே தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இவ்வுலகோரை காத்துக் கொண்டிருக்கிறான் திருவிண்ணகரில் அருள்புரியும் ஒப்பிலியப்பன் என்று ஐந்தாம் பாசுரத்தில் வியக்கிறார் நம்மாழ்வார்.

இதையும் படியுங்கள்:
எதற்கும் பயப்படுபவரா நீங்கள்? அதற்கான காரணங்கள் தெரிஞ்சுக்கணுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
Sri Oppiliyappan

விண்ணோர் சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் வியத்தகு விஷயங்களை, வேறுபாடுகள் நிறைந்த விஷயங்களை ஒன்றாக சேர்த்து விந்தை புரிந்து கொண்டிருக்கிறான் என்று ஒப்பிலியப்பனின் ஒப்பில்லா தன்மைகளை பாடிக்கொண்டே வந்த நம்மாழ்வாரை பார்த்து அந்த பகவானே திருவாய் மலர்ந்து, ‘நம்மாழ்வாரே யாம் உமக்கு என்னென்னவாக இருக்கிறோம்’ என்று சொல்லி பாசுரங்கள் இடுவீரோ?’ என்று கேட்க , அப்போது மலர்ந்ததுதான் உயிரான, உயர்வான ஒன்பதாவது பாசுரம்.

‘என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன் அப்பன் மணி அப்பன் முத்தப்பன் என் அப்பனுமாய்
மின்னப்பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே’

எனக்கு நன்மை செய்து தந்தையாக இருந்து, எனக்கு பாசம் காட்டி வளர்ப்பதில் வளர்ப்பு தாயாக இருந்து (எனக்காய் இகுளாய்) என்னை பெற்றெடுத்த அன்னையாகவும் அவனே இருக்கிறான்.  தங்கமாய், முத்தாய், திருவிண்ணகரப்பனுமாய் காட்சி கொடுத்து கொண்டிருப்பவன் இப்பெருமானே என்று ஒப்பிலியப்பனின்பெருமையை தம் ஒன்பதாவது பாசுரத்தில் பாடி பரவசமடைகிறார் நம்மாழ்வார்.

தன் ஒப்பார் இல் அப்பன் இந்த ஒப்பிலியப்பனே என்று நமக்கெல்லாம் காட்டி தந்திருக்கிறார் நம்மாழ்வார். திருவிண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே என்று இந்த ஒப்பிலியப்பனின் திருவடிகளில் இன்றே இப்பொழுதே சரணாகதி செய்து விடுங்கள். நம் துன்பங்களை எல்லாம் நீக்கக்கூடிய திருவடி இப்பெருமாளின் திருவடிகளே என்று காட்டிக் கொடுத்த நம்மாழ்வாரின் திருநட்சத்திர திருநாளன்று அவ்வாழ்வாரையும் அவர் காட்டிக்கொடுத்த பெருமாளின் திருவடியையும் சரண் புகுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com