மார்கழி பிறந்து விட்டால் இசை நிகழ்ச்சிகள் கலைகட்டத் தொடங்கி விடும். அதில் மும்மூர்த்திகளில் முக்கியமானவராகக் கருதப்படும் தியாகையர் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுபவர்களாகிய தியாகையர், முத்துசாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் இயற்றி இசையமைத்த பாடல்கள்தான் மார்கழி இசை விழாவில் இடம்பெறும். அதிலும் பக்தியில் ஊறிய தியாகையர் கீர்த்தனைகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. பெரும்பாலான பாடல்களை ஸ்ரீராமபிரான் குறித்தே இவர் எழுதி உள்ளார். ஸ்ரீ ராமபிரானை இவர் நேரில் கண்டதாக நம்பிக்கை உண்டு என்றாலும், சிவபெருமான் குறித்த பாடல்களையும் இவர் எழுதி இருக்கிறார் என்கிறார்கள்.
1767ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி திருவாரூரில் ராம பிரம்மம் சீத்தம்மாள் தம்பதிக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தவர் தியாகராஜர். இவரது பூர்வீகம் ஆந்திராவில் உள்ள காகர் லா என்ற கிராமம் என்றாலும், பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் உள்ள திருவாரூருக்கு இடம் பெயர்ந்து அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்கியது அவர்களின் குடும்பம். இவரது தந்தை ராமாயணம் உபன்யாசம் செய்பவர். தாய் சீத்தம்மாள் வீணை கலைஞர்.
தந்தையின் ராமாயண சொற்பொழிவு ஆற்றலும், தாயின் இசை மேதமையும் இயல்பாகவே இசை உணர்வை தியாகராஜருக்கு ஏற்படுத்தி விட்டது. ஓர் உண்மையான பக்தன் எப்படி பத்தி செலுத்த வேண்டும் என்பதற்கு அவர் ஒரு உதாரணமாகத் திகழ்ந்தார் என்கிறது அவரது கர்நாடக சமஸ்கிருத சங்கீதங்கள்.
திருவையாறு ஆராதனை ஜனவரி மாதத்தில் திருவையாறு, தஞ்சாவூர், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அவரது சமாதி அருகே கிட்டத்தட்ட அத்தனை இசைக்கலைஞர்களும் சென்று பாடுவது வழக்கம். முக்கியமாக, தியாகையர் இயற்றிய பஞ்சரத்தின கீர்த்தனைகளை அனைத்து கலைஞர்களும் பாடக் கேட்பது சுகமான அனுபவம்.
தியாகராஜர் 1847ல் முக்கி அடைந்தார். இதற்கு முன்பாக அவர் சன்னியாசி ஆகிவிட்டார். அவர் முக்தி பெற்றவுடன், அவருக்கு காவிரி நதிக்கரையில் சமாதி அமைத்து, அங்கு ஒரு சிறிய நினைவகம் உருவாக்கப்பட்டது.1903ல் தியாகையரின் சீடர்களான உமையாள்புரம் கிருஷ்ணா பாகவதர் மற்றும் சுதந்தர பாகவதர் திருவையாறு வந்தபோது இந்த சமாதியை புதுப்பித்தனர்.
அவரது நினைவு நாளை நினைவு கூறும் வகையில் இசைக் கலைஞர்கள் அங்கு வந்து அவர் இயற்றிய பஞ்சரத்தன கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துவது தொடங்கியது. இது 1905ல் இருந்து தொடங்கியது என்று கூறுகிறார்கள். அஞ்சலி நிகழ்ச்சி என்றாலும் இசை கலைஞர்கள் இதில் உற்சாகமாகவும், ஆத்மார்த்தமாகவும் கலந்து கொள்வது பக்திப் பரவசமாக இருக்கும்.