பொதுவாக, சாதாரண மனிதர்கள் ஒரு நாளில் உட்கொள்ளும் சரிவிகித உணவு விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகளுக்குப் பொருந்தி வராது. ஏனெனில், அவர்கள் மேற்கொள்ளும் தினசரி பயிற்சிகளின் அடிப்படையிலும் போட்டிகளில் பங்கேற்க தேவையான சக்தி வாய்ந்த உடற்கட்டுடன் ஸ்டெமினாவும் பெற்று உடலைப் பராமரிக்கவும் கூடுதல் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அவர்களின் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அப்படிப்பட்ட உணவுகளில் காஃபின் அடங்கிய காபி தவிர, இயற்கையான முறையில் கிடைக்கக் கூடிய 5 வகை முதன்மையான சூப்பர் உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. குயினோவா: குயினோவாவில் உடலுக்குத் தேவையான அமினோ ஆசிட்களைத் தரக்கூடிய முழுமையான புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது. இது தவிர உடலுக்குத் தொடர்ந்து சக்தி அளிக்கக்கூடிய காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்களும் இதில் அதிகம் உள்ளன.
2. பீட்ரூட்: பீட்ரூட்டில் நைட்ரேட்ஸ் அதிகம் உள்ளன. இவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து உடலுக்கு ஆக்ஸிஜன் குறைவின்றிக் கிடைக்க உதவி புரியும். இதனால் விளையாட்டு வீரர்களின் சகிப்புத் தன்மையும் திறமையின் வெளிப்பாடும் மேம்படும்.
3. சியா விதைகள்: ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் நார்ச்சத்தும் சியா விதைகளில் அதிகம். இவை பயிற்சிகளின்போது உடலில் நீரேற்றமும் சக்தியின் அளவும் குறையாமல் பாதுகாக்க உதவும்.
4. ஸ்வீட் பொட்டட்டோ: ஸ்வீட் பொட்டட்டோவில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாமல் உடலுக்குத் தேவையான சக்தியை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்க உதவும்.
5. பெரி வகைப் பழங்கள்: ஸ்ட்ரா பெரி, ப்ளூ பெரி, பிளாக் பெரி போன்ற பெரி வகைப் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை சிதைவுற்ற தசைகளை சீரமைக்க உதவும். மேலும், அதிகளவு உடற்பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது உடலை சோர்வடையாமல் பாதுகாக்கவும் இவ்வகைப் பழங்கள் உதவி புரியும்.
மேற்கூறிய 5 வகை உணவுகளை விளையாட்டு வீரர்கள் தவறாமல் தினசரி உட்கொண்டு வந்தால் அவற்றிலிருந்து கிடைக்கும் சக்தி அவர்களைப் போட்டிகளில் பங்கேற்று சிறந்த முறையில் செயல் திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற உதவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.