
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேவாரப் பாடல் பெற்ற திருவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில். இதை, ‘பூ கைலாசம்’ என்றும் கூறுவர். இங்கு உறையும். அம்பாள் வாழவந்த நாயகி, ஈசன் வாஞ்சிநாதர். இந்தக் கோயிலை நிர்மாணித்தவர்கள் சோழர்கள். எமன் வழிபட்ட திருத்தலமிது. இக்கோயிலில் எமனுக்கு தனிச்சன்னிதி உள்ளது. காசிக்கு நிகரான தலமாக இது கருதப்படுகிறது.
எமன் எல்லோர் உயிரையும் எடுப்பதால் எல்லோரும் அவரை வெறுப்பதால் இந்த பாபத்திலிருந்து விடுதலை வேண்டும் என சிவபெருமானை நோக்கித் தவம் செய்தார் எமன். இத்தலத்தில் எமனுக்கே முதல் வழிபாடு செய்யப்படும் என்றும், இந்தத் தலத்தை வழிபடுபவர்களுக்கு எம பயம் இருக்காது என்றும் வரமளித்தார் ஈசன்.
ஒரு சமயம் சிவபெருமான் உமையவளுடன் ரிஷப வாகனத்தில் பூமியை உலா வந்து கொண்டிருந்தார். பல திருத்தங்களை அம்பிகைக்குக் காட்டிய அவர், திருவாஞ்சியம் வந்தபோது அதன் பெருமையைச் சொன்னார். ‘காசியை விட பல மடங்கு உயர்ந்த புண்ணியம் பெற்ற இந்தத் தலத்தின் குப்த கங்கை கங்கையை விட புனிதமானது. இத்தலத்தில் ஒரு இரவு தங்கினால் கயிலாயத்தில் சிவ கணமாக இருக்கும் புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறினார். உடனே உமையவள் தானும் அத்தலத்தில் தங்க விருப்பம் கொண்டாள். எனவே, இத்தலத்து நாயகிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர் வந்தது.
ஒரு சமயம் மகாலட்சுமி தாயார், மகாவிஷ்ணுவை பிரிய, மகாவிஷ்ணு பூலோகம் வந்தார். சந்தன மரங்கள் நிறைந்த இப்பகுதியில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்து பூஜை செய்து வழிபட்டார். இதனையடுத்து, மகாலட்சுமியை பகவான் மகாவிஷ்ணுவோடு சேர்த்து வைத்தார். திருமகளோடு பகவான் வாஞ்சையோடு சேர்ந்த இடம் என்பதால் இத்தலம் திருவாஞ்சியம் ஆயிற்று. இங்கு வழிபடுவதால் கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.
துவாபர யுகம் முடிந்து, கலியுகம் தொடங்கியதும் தர்மம் அழிந்துவிடும் என்று சரஸ்வதி நதிக்கரையில் தவம் செய்த சராவா முனிவர் வருந்தினார். அப்போது திருவாஞ்சியம் என்ற வார்த்தை அசரீரியாக ஒலித்தது. திருவாஞ்சியம் நோக்கி ஓடினார். அவரை கலி துரத்தியது. ‘சிவாய நமஹ’ என்று கூறியபடியே முனிவர் வர, வாஞ்சிநாத சுவாமி கலியை தடுத்து நிறுத்தினார். கலியை தடுத்து நிறுத்தியதால் ‘கலியமங்கலம்’ என்றும் பெயர் வழங்கப்படுகிறது.
காசியில் வழங்கப்படுவது போல் திருவாஞ்சியத்திலும் காசிக்கயிறு லழங்கப்படுகிறது. காசியில் பாபமும் புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன. இத்தலத்தில் பைரவரே அவரவர் பாவங்களுக்கேற்ப தண்டனை வழங்குகிறார். ஆனால், திருவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கின்றது. அதனால் பைரவர் தண்டனை இங்கு இல்லை. பைரவர் தனது தண்டத்தை கீழே வைத்து விட்டு யோக பைரவராக இத்தலத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். பைரவரின் நாய் வாகனமும் இங்கு இல்லை.
சந்தன மரத்தை தல விருட்சமாகக் கொண்ட இக்கோயில், கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. இக்கோயிலுக்கு வரும் முன்பு குப்தகங்கையில் நீராடி, கரை விநாயகரை வழிபட வேண்டும். பின்னர் தனிச்சன்னிதியில் அருளும் எமதர்மராஜனை வழிபட வேண்டும். பிறகே வாஞ்சிநாதர் மற்றும் வாழவந்த நாயகி, மங்களாம்பிகையை தரிசனம் செய்ய வேண்டும். இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராகு-கேதுவுக்கு பாலாபிஷேகம் சேர்த்தால் திருமணத்தடை அகலும் என்பது நம்பிக்கை. வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு தனது ஒளியை இழந்து சூரியன், இத்தல குப்தகங்கையில் நீராடி மீண்டும் ஒளியைப் பெற்றாம் என இத்தல வரலாறு கூறுகிறது.