திருவாரூர் ஆழித்தேரும் அதிசயங்களும்!

Thiruvarur Aazhi Ther
Thiruvarur Aazhi Ther

திருவாரூர் ஆழித்தேர் 96 அடி உயரமும் 400 டன் எடையும் கொண்டது. இதன் கலசத்தில் இரண்டு வெள்ளிக் குடைகள் அமைக்கப்பட்டிருக்கும் தேர் கலசத்தில் வெள்ளிக் குடை இருப்பதை திருவாரூரை தவிர, வேறு எங்கும் காண முடியாது.

ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்தத் தேரில் 64 தூண்களும், நான்கு குதிரைகளும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த 64 தூண்களும் 64 கலைகளையும், நான்கு குதிரைகள் நான்கு வேதங்களையும் குறிப்பதாக ஐதீகம்.

அசுரர்களுடன் நடந்த போரில் இந்திரன் வெற்றி பெறுவதற்கு முசுகுந்த சக்ரவர்த்தி உதவினார். அவருக்குப் பரிசாக ஏழுவித அதிசயமான மூர்த்தங்களை வழங்கினான் இந்திரன். இந்த மூர்த்தங்களைக் கொண்டு செல்வதற்காக தேவலோகத்தைச் சேர்ந்த சிற்பியான மயன் என்பவரால் உருவாக்கப்பட்டதுதான் ஆழித்தேர்.

பாற்கடலில் உருவான தேவ தாருக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கடல் போன்ற தேர் என்பதால் இதற்கு, ‘ஆழித் தேர்’ என பெயர்.

இந்த பிரம்மாண்ட தேர் பிரம்ம தேவரால் ஸ்தாபனம் செய்யப்பட்டது. திருமால் வணங்கிய இந்தத் தேரின் குதிரைகளாக அஷ்டதிக்பாலர்கள் மாறியதாகவும் தேர்க்கால் அச்சாக தேவர்கள் மாறியதாகவும் தேரின் அடித்தட்டாக காலதேவனே அமர்ந்ததாகவும் தல புராணம் கூறுகிறது.

முசுகுந்த சக்ரவர்த்தியின் உத்தரவின்பேரில் தேர் பவனி வரும் நான்கு மாட வீதிகளில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பூக்களை வாரி இறைத்து இந்த தேவலோக தேர் வரவேற்கப்பட்டதாக ஐதீகம். இதனை நினைவுபடுத்தும் விதமாக திருவாரூர் மாவட்ட வீதிகள், ‘பொன்பரப்பி திருவீதிகள்’ என அழைக்கப்படுகின்றன.

Thiruvarur Aazhi Ther
Thiruvarur Aazhi Ther

தற்போதுள்ள திருவாரூர் தேரானது 96 அடி உயரமும் 31 அடி அகலமும் 300 டன் எடையும் கொண்ட எண் கோண வடிவத்தில் ஆனது. முற்றிலுமாக அலங்கரிக்கப்பட்ட பிறகு இதன் எடை 400 டன்னாக இருக்கும்.

பூதப்பார், சிறு உறுதலம், பெரிய உறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் என ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்தத் தேரின் நான்காவது அடுக்கில்தான் தியாகராஜ பெருமான் வீற்றிருப்பார்.

குந்தியாலம், கொடியாலம், பாம்பு பாலம் உட்பட மொத்தம் 92 அலங்காரங்கள் இந்தத் தேருக்குச் செய்யப்படும்.

தமிழில், ‘தேர்’ என்று வழங்கப்படும் சொல் வடமொழியில் ரதம் என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பிரம்மோத்ஸவ பெருவிழா ஆரம்பம்!
Thiruvarur Aazhi Ther

பல டன் மூங்கில்கள், 500 கிலோ வண்ணத்துணிகள், 50 கழிறுகள், 5 டன் பனை மரக்கட்டைகள் இழுப்பதற்கு நாலு பெரிய வடங்கள் ஆகியவை இந்தத் தேரை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. தேரை இழுக்க பயன்படுத்தப்படும் ஒரு வடம் 425 அடி நீளம் கொண்டது. அழகிய சிற்பங்கள், வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்தத் தேர் அலங்கரிக்கப்படும்.

ஆழித்தேரை வடம் பிடித்து இழுப்பதால் கயிலையில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆழித்தேரில் தியாகராஜ சுவாமி ஆடி அசைந்து வரும்போது, ‘ஆரூரா… தியாகேசா’ என மக்கள் கோஷமிடுவார்கள்.

ஆழித் தேர் திருவிழாவுக்கு மறுநாள் தேர் அசைந்து சென்ற வீதிகளில் பெண்கள் விழுந்து வணங்கி தங்களின் வேண்டுதல்களை தியாகராஜ பெருமானிடம் முறையிடுவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு, ‘தேர் தடம் பார்த்தல்’ என்று பெயர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com