

சென்னை மயிலாப்பூரில் உலகப்புகழ் பெற்ற அருள்மிகு கற்பகம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிவனின் பெயர் தமிழில் புண்ணைவனநாதர் என்று பெயரில் இருந்தது. கிபி 15ஆம் நூற்றாண்டில் புண்ணைவனநாதர் என்று பெயர் மாற்றிய பிறகு கபாலீஸ்வரர் என்று பெயர் வழங்கப்பட்டது. உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது.
இன்றைய கோவில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோவில் மிகவும் பழைமை வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வரும் ஏப்ரல் 1-ம்தேதி வரை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. பங்குனி திருவிழாவை முன்னிட்டு தினமும் சாமி, அம்பாள் வீதி உலா நடந்து வருகிறது.
பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 29-ம்தேதி (ஞாயிற்றுகிழமை) நடக்கிறது. அதனை தொடர்ந்து வரும் 30-ம்தேதி (திங்கள் கிழமை) மதியம் 3 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன், அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி மற்றும் அன்றிரவு சந்திரசேகரர் பாரி வேட்டை விழா நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் விழா நடக்கும் பொழுது மயிலாப்பூர் 4 மாடவீதிகளில் பக்தர்களின் கூட்ட நெரிசல் மிகவும் அதிகமாக இருக்கும். தேரோட்டத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் அலங்கரிக்கப்பட்ட தேர் ஒய்யாரமாக ஆடி அசைந்து வரும் அழகைக்காண கண்கோடி வேண்டும்.
ஏப்ரல் 1-ம்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா முடிவடைகிறது.
ஆழித்தேரோட்டம்
திருவாரூரில் பிரசித்திபெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. ஆழித்தேர் தமிழகத்திலுள்ள திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குரிய தேராகும். ஆழித்தேர் மிகவும் உயரமானது மற்றும் அகலமானது. இது 'திருவாரூர் தேரழகு' என்ற பழமொழிக்கு ஏற்ப, அதன் பிரம்மாண்டத்திற்காக உலகப் புகழ்பெற்றது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆழித்தேரோட்ட விழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஆழித்தேரோட்டம் வருகிற 29-ம்தேதி (ஞாயிற்றுகிழமை) வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதையொட்டி ஆழித்தேரை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆழி என்றால் கடல் என்று பொருள். கடல் போன்ற பிரமாண்டமான தேர் என்பதால் இந்த தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு.
திருவாரூர் தியாகராஜசுவாமி கோவிலுக்குரிய தேரான ஆழித்தேர் 1926-ல் முற்றிலுமாகத் தீக்கிரையானது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட பெருமுயற்சியின் காரணமாக 1930-ல் புதிய தேர் உருவாக்கம் பெற்று தேர்த் திருவிழா நடைபெற ஆரம்பித்தது. 1930-ல் வடிவமைக்கப்பட்ட தேரில் 400க்கும் மேற்பட்ட மரச்சிற்பங்கள் உள்ளன.
தற்போதுள்ள தேர் 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 300 டன் எடையும் கொண்ட எண்கோண வடிவத்தில் ஆனது. முற்றிலுமாக அலங்கரிக்கப்பட்ட பிறகு இதன் எடை 400 டன்னாக மாறும். தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை. பல கலைநயந்துடன் கூடிய வேலைப்பாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது.
இந்த பிரம்மாண்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள். அப்போது ஆழித்தேரில் தியாக சுவாமி ஆடி ஆசைந்து வரும் போது ‘ஆரூரா...தியாகேசா’ என மக்கள் விண்ணதிர கோஷமிடுவார்கள். பக்தர்களின் கோஷம், கயிலாய வாத்தியங்கள், திருமுறை முழக்கங்கள் ஆகியவற்றை கேட்கும் போது பூலோக கயிலாயமாக திருவாரூர் மாறி இருக்கும்.
திருவாரூர் ஆழித்தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருள, நான்கு மாட வீதிகளிலும் தேர் ஆடி, அசைந்து வரும் அழகை காண கண் கோடி வேண்டும் என்பார்கள். இந்த ஆழித்தேரோட்டத்தை காண உள்ளூர், திருவாரூர் மாவட்ட மக்கள் மட்டுமல்ல பல மாநிலங்களில் இருந்தும் வந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தின் கலாச்சார மற்றும் ஆன்மீக வரலாற்றில் திருவாரூர் ஆழித்தேரோட்டம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.