
தேரோட்டம் (Ratha Yatra) என்பது பல மதங்களிலும் பல தெய்வங்களின் சிலையை அதற்காக உருவாக்கப்பட்ட தேரில் வைத்து பக்தர்கள் பலர் சேர்ந்து ஊர்வலமாக இழுத்து வரும் ஒரு விழாவாகும். இந்துக் கோவில்களில் இந்த விழா காலம்காலமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மரத்தால் மிகப்பெரிய அளவில் தேர்களை அழகுற அமைத்து அதன் மீது தெய்வ திருஉருவங்களை வைத்து வீதிகளில் பவனி வரச்செய்து பெருவிழாவாக எடுக்கும் மரபு தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
சோழ மன்னர்களும், அவர்களுக்கு பிறகு விஜயநகர அரசர்களும் பல தேர்களை செய்து அளித்ததற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன. தேரோட்டம் அல்லது தேர்த்திருவிழா என்று அழைக்கப்படும் இந்த விழா ஆண்டுதோறும் கோவில்களில் நடக்கும் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாக அமைகின்றது. கோவில்களைப் பொறுத்துப் 10 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை தொடர்ச்சியாக நடைபெறும் திருவிழாக்களில் இறுதி நாளில் தேரோட்டத் திருவிழா இடம்பெறுவது வழக்கம்.
பங்குனி மாதம் தொடங்கி விட்டாலே கோவில்களில் திருவிழாக்களுக்கும், தேர்த்திருவிழாவுக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம், நெல்லையப்பர் கோவில் தேரோட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் போன்ற சிறப்பு வாய்ந்த தேரோட்டங்கள் முக்கிய இடம் பிடித்திருந்தாலும் திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் அவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைத்தது போல் சிறப்பு வாய்ந்தது.
நான்கு குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள், தேரின் நான்கு புறங்களிலும் கட்டப்படும் அலங்கார தட்டிகள் என 350 டன் எடையில் அலங்கரிக்கப்பட்ட தேர், திருவாரூர் நான்கு வீதிகளிலும் அசைந்தாடி திரும்பும் அழகை காண கண் கோடி வேண்டும் என பக்தர்கள் மெய்சிலிர்க்கிறார்கள்.
திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் தோன்றிய வரலாற்றினை கணக்கிட முடியாத மிகவும் பழமை வாய்ந்த தலமாகவும் திகழ்வது போலவே இந்த கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்கு சொந்தமானது. தியாகராஜர் விண்ணில் இருந்து பூமிக்கு வருகை தந்தபோது அவருடன் பல்வேறு பூஜை சாமான்கள் கொண்டு வரப்பட்டதாகவும், அதிலும் அவர் அமர்ந்து வந்த தேர் தான் ஆழித்தேர் என்றும் வரலாறு கூறுகிறது.
முந்தைய காலத்தில் இந்த தேரானது தானாக நகர்ந்ததாகவும் இறைவனின் அருளால் இயங்கியதாகவும் கூறப்படுகிறது. இத்தேரானது மரத்தால் செய்யப்பட்டு பல்வேறு சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின்போது ஆழித்தேரோட்டம் நடைபெறும்.
ஆழி என்றால் கடல். கடல் போன்ற பெரிய தேர் என்பதை குறிக்கவே ஆழித்தேர் என்று அழைக்கப்படுகிறது. திருவாரூரில் பழங்காலத்தில் இருந்து ஆழித்தேரோட்டம் நடந்ததற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன. கி.பி.1748-ம் ஆண்டு நிகழ்ந்த தேர்திருவிழா பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல் கி.பி.1765-ம் ஆண்டு தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய மன்னர் 2-ம் துளஜா அப்போது நடைபெற்ற திருவாரூர் தேரோட்டத்தில் கலந்து கொண்டதாக ஆவண குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அழித்தேர் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடி. ஆனால் விமானம், தேர் கலசம், தேர் சிலை வரை அலங்கரிக்கப்பட்ட பகுதி என 48 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறது ஆழித்தேர். அதேபோல் அலங்கரிக்கப்படாத ஆழத்தேரின் எடை 220 டன் ஆகும். ஆனால் தேரில் வைக்கப்படும் பனஞ்சப்பைகள், கயிறு, அலங்கார துணி, இது தவிர தேரின் முன்புறம் கட்டப்படும் நான்கு குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள், தேரின் நான்கு புறங்களிலும் கட்டப்படும் அலங்கார தட்டிகள் என் அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் மொத்த எடை 350 டன் கொண்டதாக அதிகரிக்கும்.
இந்த தேரில் சுமார் 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட நான்கு வடங்கள் தேரில் பொருத்தப்பட்டு, தேரை தள்ளுவதற்கு பொக்லின் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான ஆழித்தேரில் தியாகராஜர் வீற்றிருந்து வலம் வருவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பலமணிநேரம் காத்திருப்பார்கள்.
பிரசித்திப்பெற்ற ஆழித்தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி அளவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தொடங்கியது. ஆழித்தேருடன் அழகுற அலங்கரிக்கப்பட்ட விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கமலாம்பாள், தேர்கள் வலம் வருவதால் ஒரே நேரத்தில் 5 தேர்களை தரிசித்த பேறு திருவாரூர் மக்களுக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இத்திருத்தேரினை பல்லாயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து இழுக்கும்பொழுது ‘ஆரூரா, தியாகேசா’ என்ற சரண கோஷங்கள் விண்ணுலகை அதிர வைக்கும். திருத்தேர் ஓடி வரும்போது நான்கு குதிரைகள் கம்பீரமாக தேரினை இழுத்து வருவது போல தோற்றம் அளிக்கும். இந்த தேரோட்டத்தை காண உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள்.