
ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப
பாரொருகால் வந்து அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்