
‘ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.’
அடியார்கள் தனித்துச் சென்று இறைவனை வழிபடுவதை விரும்ப மாட்டார்கள். எப்போதும் ஒரு திருக்கூட்டத்தோடு சென்று இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதுதான் நியதி. நந்தனார் வாழ்ந்த ஊருக்கருகிலேயே திருப்புன்கூர் இருந்ததாம். அவர் நினைத்திருந்தால் அவர் மட்டும் சென்று அத்தல இறைவனை தரிசித்துவிட்டு திரும்பி இருக்கலாம். ஆனால், சிவலோக நாதனான ஈசனை தரிசனம் செய்யப்போகிறோம். தனியாகப் போகலாமா என்று எண்ணி அங்கிருந்த சிலரை தம்மோடு அழைத்துச் சென்று ஈசனை தரிசித்துவிட்டுத் திரும்பினார் என்பதைப் பார்க்கிறோம். காரணம், அடியார் திருக்கூட்டத்தோடு இருக்கும்போது மனதை எப்போதும் இறை சிந்தனையோடு நம்மை வைத்திருக்க உதவும். எந்த ஒரு விஷத்திலும் தனித்துச் செயல்படுதல் என்பது ஏதாவதொரு குழப்பத்தில் நம்மைக் கொண்டு விட்டுவிடும் என்பது அனுபவப்பூர்வ உண்மை.