
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம்
கோனைப் பாடேலோர் எம்பாவாய்
"பெண்ணே, உன் அழகுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. மான் போலத்தான் நளினமாக நீ நடக்கின்றாய், ஆனால் பேச்சுத் தவறக்கூடாது என்ற நற்பண்பைக் கடைபிடிக்கின்றாயோ? நேற்று நீ எங்களிடம் என்ன சொன்னாய்? ‘எம்பெருமானைத் தரிசிக்க நாம் அனைவரும் அதிகாலையிலேயே செல்வோம், சரியா? என்னடா இவள் இப்படிச் சொல்கிறாளே என்று காலைத் தூக்கத்தின் சுகத்தை எண்ணித் திகைக்கிறீர்களா, கவலைப்படாதீர்கள். உங்கள் ஒவ்வொருவரையும் நானே வந்து எழுப்புகிறேன், போதுமா?‘ என்றெல்லாம் பக்தி வீரம் பேசினாயே, என்னாவாயிற்று?