
கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைப் பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்
அன்புத் தோழியே, எங்களுக்கு முன்னாலேயே உன்னைத் துயிலெழுப்ப இயற்கையே வந்து விட்டதே! ஆமாம், சேவல் கூவுகிறது, புள்ளினங்கள் கீச்சிடுகின்றன, அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து ‘ஸ ரி க ம ப த நி‘ என்ற சப்த ஸ்வரங்களுடன் இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன, அதோ, நம் ஈசன் கோயில் கொண்டிருக்கும் அண்ணாமலை திருக்கோயிலிலிருந்து வெண் சங்குகள் முழங்குகின்றன. பொழுது புலர்ந்ததை உணர்த்திடும் இத்தனை இனிய கீதங்கள் நாங்கள் வருமுன்னாலிருந்தே ஒலித்துக் கொண்டிருக்கின்றனவே!