
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோ எம்பாவாய்
எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய தொன்மையானது என்று சொல்லப்படும் அத்தனைப் பொருட்களுக்கும் பழமையானவன் எம்பெருமான். அதுமட்டுமல்ல, இன்னும் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இப்படித்தான் இருக்கும் என்று விஞ்ஞான உலகம் கணிக்கும் புதுமைப் பொருட்களுக்கெல்லாமும் என்றென்றும் புதுமையாய் விளங்கப் போகிறவன் எங்கள் பரம்பொருளான, ஈசன். ஐயனே நாங்கள் உம்முடைய தொண்டர்கள். உம்மைத் தலைவனாக ஏற்றுக்கொண்ட அடியார்களுக்கு மட்டுமே நாங்கள் பணிவோம்; அவர்களுக்கே தொண்டு புரிவோம். சிந்தையெல்லாம் சிவமாகக் கொண்டிருக்கும் உம் அடியவர்களே எங்களுடைய சிறந்த வழிகாட்டிகள்.