அவ்வையார் நோன்பு ஆடி மாதத்தில் ஏதாவது ஒரு செவ்வாய்க்கிழமையில் கடைபிடிக்கப்படும் விரதமாகும். இந்த நோன்பை கடைபிடித்தால் செல்வ செழிப்புடனும் வாழ்வதுடன், பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. இந்த நோன்பினை கடைபிடிக்கும் பெண்கள் அனைவரும் ஒரு மூத்த சுமங்கலியின் வீட்டில் ஒன்று கூட வேண்டும். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுவதால் அன்று மாலை ஆறுமணி அளவில் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பச்சரிசி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். பிறகு அங்கேயே பச்சரிசியை ஊற வைக்க வேண்டும்.
பூஜைக்கு ஒவ்வொருவரும் இரண்டு தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு தீபத்திற்கு நல்லெண்ணெய் மற்றும் பூஜை செலவுக்காக ஒரு தொகையை கொடுக்க வேண்டும். பிறகு ஒன்பது மணி அளவில் ஊறிய அரிசியை அவரவர் கொடுத்த அரிசிக்கு ஏற்ப மாவு பெற்று தனித்தனியாக தண்ணீர் விட்டு உப்பு போடாமல் பிசைந்து மாவில் விளக்கு, பழத்தட்டு, பிள்ளையார், அடை போன்று விதவிதமாக செய்து இட்லி கொப்பரையில் வேக வைத்து அவரவர்கள் கொண்டு வந்த பாத்திரத்தில் வைக்க வேண்டும். கொழுக்கட்டை செய்த விளக்கில் எண்ணெய் விட்டு திரியிட்டு விளக்கேற்றி அவரவர்கள் பாத்திரத்தில் வைக்க வேண்டும். பூஜையில் புங்க இலை, அரளி இலை, புளிய இலை ஆகியவை இடம்பெற வேண்டும். அதற்குப்பின் மூத்த சுமங்கலிப் பெண் ஔவையார் நோன்பு பற்றிய கதையை மற்றவர்க்குச் சொல்லுவார்.
ஒரு ஊரில் நான்கு அண்ணன் தம்பிகளுடன் ஒரு தங்கை வாழ்ந்து வந்தாள். இந்த தங்கையின் நான்கு சகோதரர்களும் காட்டில் விறகு வெட்டி நகர் பகுதியில் விற்று அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை ஓட்டி வந்தார்கள். ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு அவ்வையார் என்ற வயதான மூதாட்டி பிச்சை கேட்டு வந்தார். அப்பொழுது அந்தத் தங்கையானவள், ‘பாட்டி நாங்களோ மிகவும் வறுமையில் இருக்கிறோம். என் சகோதரர்கள் காட்டில் விறகு வெட்டி அதை விற்று பணம் கொண்டு வந்தால்தான் இன்றைய பொழுது போகும். உங்களுக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை’ என்று வருத்தத்துடன் கூறினாள்.
‘வருத்தப்படாதே. நான் சொல்லும் விரதத்தை நீ கடைபிடித்தால் உங்கள் வாழ்வு செழிப்போடு வளம் பெறும். இந்த நோன்பின் பூஜையை ஆண்கள் பார்க்கக் கூடாது’ என்று நோன்பின் விரதத்தைக் கூறினார்.
அவ்வையார் சொன்னது போல தங்கையானவன் விரதம் இருந்து பூஜை செய்யும்போது அவளது சகோதரர்கள் ஒளிந்து இருந்து பார்த்ததால் அவர்களின் கண் பார்வை மங்க ஆரம்பித்தது. எனவேதான் இந்த நோன்பில் ஆண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்பது வரலாறு. பூஜையில் சமர்ப்பித்த கொழுக்கட்டைகளை ஆண்கள் சாப்பிடக்கூடாது. இந்த நோன்பின் பலனால் அந்தப் பெண்ணின் குடும்பம் செல்வச் செழிப்புடன் வளர, தனது சகோதரியை ராஜகுமாரன் போன்ற வசதி படைத்தவனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். அதன்பின் அவளது நான்கு சகோதரர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. தனது அண்ணிகளிடம் அந்தப் பெண் அவ்வையார் நோன்பினை கடைபிடிக்கச் சொன்னாள்.
சில மாதங்கள் சென்றன. செல்வச் செழிப்புடன் வாழ்ந்த சகோதரர்களை மீண்டும் வறுமை பீடித்தது. விறகு வெட்டி வாழ்க்கை நடத்துவதை அறிந்த அவர்களின் தங்கை தனது அண்ணிகளிடம், ‘அவ்வையார் விரதம் கடைபிடிக்கிறீர்களா?’ என்று கேட்க அவர்களும், ‘நோன்பை கடைபிடிப்பதாகவும் ஆனால், உப்பு இல்லாத கொழுக்கட்டைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமுள்ள ஒரு பாறையில் கொட்டி விட்டோம்’ என்றார்கள். அண்ணிகள் சொன்னதைக் கேட்ட தங்கை, அந்தப் பாறைக்குச் சென்று பார்க்கும்போது அவளின் அண்ணிகள் கொட்டிய கொழுக்கட்டைகள் தங்கக்குடை பிடித்து ஒளி வீசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவற்றை அப்படியே பாறையிலிருந்து எடுத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்து தனது அண்ணிகளிடம் கொடுத்தாள். மீண்டும் சிரமம் பார்க்காமல் விரதம் கடைபிடிக்கும்படி கூறினாள். அவர்களும் அதன்படியே முறையாக விரதம் கடைபிடித்து செல்வ சிறப்புடன் வாழ்ந்தார்கள்.
இந்தக் கதையைச் சொல்லி முடித்த பிறகு தேங்காய் உடைத்து அனைவரின் பாத்திரத்தில் இருக்கும் கொழுக்கட்டைகள் சிலவற்றை பூஜைக்கு எடுத்துக் கொடுத்துவிட்டு பூஜை முடிந்ததும் அனைவரும் சாப்பிட்டு அவரவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும். பூஜை நடந்த வீட்டில் உள்ள பெண்கள் விடியற்காலை நான்கு மணிக்கு அந்த இடத்தை சுத்தம் செய்து அனைத்தையும் ஒரு குடத்தில் போட்டு கிணற்றில் கொட்ட வேண்டும். மீதமுள்ள கொழுக்கட்டைகளை ஆண்கள் கண்ணில் காட்டாமல் காலை ஒன்பது மணிக்குள் சாப்பிட வேண்டும். இந்த நோன்பினை பெண்கள் கடைபிடித்தால் நீண்ட ஆயுளும் செல்வச் செழிப்பும் தீர்க்க சுமங்கலி பாக்கியமும் கிடைக்கும் என்பர். இதனையே ஔவையார் நோன்பு என்கிறார்கள்.
இந்த அவ்வையார் நோன்பு திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பெண்கள் செய்வார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அம்மன் கோயிலில் திருமணத் தடை தோஷம் நீங்கவும், குழந்தைப் பேறு கிடைக்கவும் விதவிதமான கொழுக்கட்டைகளை படைத்து வழிபடுவது வழக்கம்.
இந்த நோன்பை கடைபிடிப்பதால் கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, குடும்பம் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையும் நிலைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்மார்கள் நீண்ட ஆயுள் பெறுவார்கள். ஆடிச் செவ்வாய்களில் மணமாகாத பெண்கள் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் கூடும். கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், சனி தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகளும் செவ்வாய் தோஷத்தினால் பெண்களுக்கு ஏற்படும் திருமண தடைகளும் நீங்கும்.