பூமியின் இதயமாக விளங்கி வரும் திருவண்ணாமலை திருத்தலத்தில் மலையே சிவபெருமானின் அருவ ஸ்வரூபம் என்று கூறப்படுகிறது. இந்த மலையை தரிசிப்பதும், கிரிவலம் செய்வதும் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இதில்
ஸ்ரீ ரமண மகரிஷியும், ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளும் சமகாலத்தில் திருவண்ணாமலையில் வசித்து அருள்பாலித்தவர்கள். ரமண மகரிஷிகள் பாதாள லிங்கக் கோயிலில் தவம் இருந்தபோது உலகிற்கு அடையாளம் காட்டியவர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்தான்.
சத்குரு என்பவர் மானிடப் பிறவி எடுத்தபோதிலும் தன்னுடைய உத்தமமான வாழ்க்கை முறையாலும் செயல்களாலும் தெய்வீகத்தன்மை அடையப் பெற்றவர். அத்தகைய சத்குருக்களில் முக்கியமானவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து சித்தியடைந்த அருணை ஜோதி ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். வந்தவாசி தாலுகாவிலுள்ள வழூர் என்னும் சிற்றூரில் மரகதம் அம்மையார் காமகோடி வரதராஜ சாஸ்திரிகள் தம்பதிக்கு மகனாய் காமகோடி சேஷாத்ரி சாஸ்திரி 1870ம் ஆண்டு ஜனவரி 22ம் நாள் சனிக்கிழமை ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்தார். காமகோடி சாஸ்திரி என்பது இவரது குடும்பப் பெயர்.
தனது பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இவ்வுலகை நீத்து மறைந்து விட்டவுடன், வேறு பந்தம் ஒன்றும் இல்லாததால் சேஷாத்ரிக்கு இவ்வுலகக் கட்டிலிருந்து விடுதலையான உணர்வு மேலிட்டது. தனது தாயார் இறக்கும் தருவாயில், ‘அருணாசல, அருணாசல, அருணாசல!’ என்று மூன்று முறை கூறிய வார்த்தைகள் இவர் உள்ளத்தைத் துளைத்து அங்கே குடியேறியது. அவர் திருவண்ணாமலைக்கே வந்து சேர்ந்தார்.
‘இந்தத் திருவண்ணாமலையில் மூன்று பித்தர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?’ என்பார் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் பக்தர்களைப் பார்த்து வேடிக்கையாக. ‘ஒண்ணு ரமணர், ரெண்டாவது நான், மூணாவது அந்த அருணாசலேஸ்வரர்’ என்று கூறி சிரிப்பார்.
ஏற்கெனவே வேதாந்த விசாரங்களைக் கற்றுத் தேறிய சேஷாத்ரிக்கு தினசரி பயிற்சியும், தியானமும் ஆத்ம பலத்தை மென்மேலும் கூட்டின. மற்றவர்களையும் ஜபம் செய்யத் தூண்டினார்.
ஒரு பித்தனைப் போல திருவண்ணாமலையில் சுற்றித் திரிந்த ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளை வணங்கியவர்களுக்கும், தொழுதவர்களுக்கும் அவரின் பார்வையே பல வியாதிகளை, பாதிப்புகளை அவர்களிடமிருந்து விரட்டியது. ‘தங்கக்கை சுவாமிகள்’ என்று பெயர் பெற்ற அவர் எந்த கடைக்குள் நுழைந்தாலும் அங்கே வியாபாரம் செழித்தோங்கியது. அவர் 'தங்கக்கை' பட்ட இடமெல்லாம் செல்வ வளம் தழைத்தது. திருவண்ணாமலையில் வாழ்ந்து அங்கேயே இவர் ஸித்தியானார்.
திருவண்ணாமலையில் வாழ்ந்த அவரே கிரிவலத்தின் சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர். அவர் தன்னிடம் தரிசனத்திற்காக வந்த எல்லோரையும் கிரிவலம் செய்யத் தூண்டி அதைச் செய்ய வைத்தார். கிரிவலம் செய்பவர்கள் இந்த மலையையே பார்வதி பரமேஸ்வர ஸ்வரூபமாகக் கருதி மிகுந்த பக்தி சிரத்தையுடன் வலம் வருவார்கள்.
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகிய திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய வேண்டும் என்று சொன்னாலே போதுமாம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விடுமாம். கிரிவலம் வருபவர்களின் காலடி தூசு ஒருவர் மேல் பட்டாலே போதுமாம் அவரைப் பிடித்த அத்தனை தோஷங்களும் நீங்கி விடும் என்று அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை மார்கழி மாத கிருஷ்ணபட்ச நவமியன்று (ஹஸ்தம்) 24.12.2024 அன்று அனுசரிக்கப்படுகிறது. சுவாமிகள் பிறந்த ஊரான வழூரில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. தற்பொழுது அங்கே ஆராதனை உத்ஸவங்கள் நடைபெறுகின்றன.