அவனின்றி (கடவுளின்றி) எதையும் அடைய முடியாது. மனிதர்களே, கடவுளிடம் அடைக்கலமாகுங்கள். அவரிடம் சரணடையுங்கள். அப்போதுதான் அவர் கருணையோடு முக்தி பாதையைத் திறப்பார்.
* பூவை கையிலெடுத்து வாசனையை அறிவது போல, கல்லில் சந்தனக் கட்டையை தேய்த்தால் மணத்தை முகர்வது போல, கடவுளைப் பற்றி எப்போதும் நினைப்பதால் ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படும்.
* திருப்தியை தவிர பெரிய செல்வமும் இல்லை, பொறுமையை விட மேலான குணமும் இல்லை.
* நீ என்றுமே தனியாக இல்லை. இதை ஒருபோதும் மறவாதே. இறைவன் உன்னுடன் இருக்கிறான். உனக்கு உதவி செய்தவண்ணம் உன்னை வழிநடத்தியவாறு அவன் என்றுமே உன்னுடன் உள்ளான். உன்னை ஒருநாளும் கைவிடாத அணுக்கத் தோழன் அவன். அவனது அன்பு உனக்கு ஆறுதலும் வலிமையை அளிக்கவல்லது. நீ அவனை நம்பு. நம்பினால் உனக்காக அவன் அனைத்தையும் செய்வான்.
* நமது தேவைகள் அனைத்தும் ஈடேறுவதற்கு நாம் தெய்வத்தையே சார்ந்து இருக்க வேண்டும். அவனிடம்தான் நாம் அனைத்தையும் எதிர்பார்க்க வேண்டும்.
* இறைவனின் ஒளியிலே நாம் அனைத்தையும் பார்க்க வேண்டும். இறைவனின் ஞானத்திலே அனைத்தையும் அறிய வேண்டும். இறைவனின் சங்கல்பத்திலே அனுமதி பெற வேண்டும்.
* ஒவ்வொன்றும் கடவுளின் விருப்பப்படிதான் நடைபெறுகிறது என்றாலும், மனிதர்கள் உழைத்தே தீர வேண்டும். ஏனென்றால், கடவுள் தமது கருணையை மனிதனின் உழைப்பின் மூலமே அவனுக்கு வழங்குகிறார். ஒருவர் இந்த வாழ்க்கையில் பெரும் எல்லாவித வசதிகளும் அவரது முன்வினை பயனாலேயேய அமைகின்றன. இந்த பிறவியில் செய்யும் நல்ல வினைகளின் மூலம் கடந்த பிறவியில் செய்த தீய வினைகளையெல்லாம் கூட மாற்றி அமைக்க முடியும்.
* எந்த மானிடப் பிறவியை நீ நேசித்தாலும் அதற்காக வருந்தத்தான் நேரிடும். எவன் ஒருவன் இறைவனிடம் மட்டுமே அன்பு செலுத்துகிறானோ அவனே உண்மையில் பாக்கியசாலி. கடவுளை நேசிப்பதால் எவ்விதத் துன்பமும் ஏற்படுவதில்லை.
* இறைவனைத் தவிர மற்றவற்றில் மனம் செலுத்தும்போது அவற்றின் நிலையாமையை நினைத்துப் பார். இறைவனின் புனிதத் திருவடிகளில் சரணடைவாயாக. மனிதப் பிறவி துன்பங்கள் நிறைந்தது. எனவே, எதையும் தாங்கிக் கொள்வதே சிறந்தது. இறைவனின் நாமத்தை ஜபம் செய்துகொண்டே துன்பங்களை பொறுமையாக சகித்துக்கொள்.
* இறைவனை எப்போதும் நினைவில் நிறுத்தி அவரை உணர்ந்துகொள்ளும் ஆற்றலை தந்தருளும்படி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
* மனதில் சிறு ஆசையைக் கூட வைத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தர வேண்டியதை கடவுள் சரியான நேரத்தில் தந்து விடுவார்.
* ஒரு பொருள் மிகவும் அற்புதமாய் இருந்தபோதிலும், ஒருவர் அதை இகழ்ந்து பேசலாகாது. நீங்கள் ஒரு பொருளை மதித்தால் அதுவும் உங்களை மதிக்கும். ஒரு சாதாரண காரியத்தையும் ஒருவர் மிக்க மரியாதையுடன் செய்ய வேண்டும். முதலில் நீ உண்ணுதல் எதையும் இறைவனுக்கு சமர்ப்பணம் செய். சமர்ப்பிக்காத உணவை ஒரு நாளும் உண்ணக்கூடாது. உன் உணவு எப்படியோ அப்படியே உன் இரத்தமும். தூய்மையான உணவின் மூலம் தூய இரத்தத்தையும் தூய மனதையும் பலத்தையும் பெறுகிறாய். தூய மனம் பிரேம பக்தியை உண்டாக்குகிறது.
* வாழ்வின் லட்சியம் இறைவனைக் காண்பதும் எப்போதும் அவன் நினைவில் மூழ்கிக் கிடப்பதுமேயாகும்.