

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தங்கத்தேரோட்டமும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவும் நாளை தொடங்குகிறது. மேலும் எந்தெந்த நாட்களின் என்னென்ன விழாக்கள் நடைபெற உள்ளன என்பது குறித்து விரிவாக இந்த பகுதியில் அறிந்து கொள்ளலாம்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், ஆந்திராவின் திருப்பதிக்கு அருகே உள்ள மிகவும் புகழ்பெற்ற வைணவத் தலமாகும். கீழ்த் திருப்பதியில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் திருச்சானூர் அமைந்துள்ளது. இக்கோவிலில் மகாலட்சுமியின் அம்சமான பத்மாவதி தேவி (அலர்மேல் மங்கை) அருள்பாலிக்கிறார். திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பதற்கு முன், இக்கோவிலுக்குச் சென்று தாயாரை வணங்கிய பிறகே திருமலைக்குச் செல்லவேண்டும் என்பது ஐதீகம். இங்கு கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பஞ்சமி தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது.
பிருகு முனிவர் திருமாலின் மார்பில் உதைத்ததால் கோபமடைந்து வைகுண்டத்தை விட்டு வெளியேறிய மகாலட்சுமி, பூலோகத்தில் ஆகாசராஜனின் மகளாக பத்மசரோவரம் குளத்தில் தாமரையில் அவதரித்து, பின் ஸ்ரீனிவாசனை (வெங்கடாசலபதி) மணந்தார் என்பது தல வரலாறு.
திருச்சானூர் பத்மாவதி தாயார் தலம், பக்தர்களுக்கு செல்வ வளம் மற்றும் சுகங்களை வாரி வழங்குவதாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா கொண்டாடப்பட்டாலும், சித்திரை மாதத்தில் வரும் வசந்த உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அந்த வகையில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்த உற்சவத்தை முன்னிட்டு நாளை மே 1-ம்தேதி தங்கத்தேரோட்டம் நடக்கிறது. தாயார் தங்கத் தேரில் எழுந்தருளியதும் காலை 9.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தங்கத்தேரில் கம்பீரமாக அமர்ந்த நிலையில் தாயார், கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள்.
மேலும் இதனையொட்டி இன்று முதல் (ஏப்ரல் 30) மே 2-ந்தேதி வரை கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகளான கல்யாணோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
108 திவ்ய தேசங்களில் ஒன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோவில். பெருமாளின் திருநாமங்களில் ஒன்று பார்த்தசாரதி என்பது. கருவறையில், நின்ற திருக்கோலத்தில் பெருமாள் மீசையுடன் கம்பீரமாகக் காட்சி தரும் திருத்தலம் இது. இந்தத் தலத்தில், வருடம் முழுவதுமே விழாக்கள் களைகட்டும்.
தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் இத்திருக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தவண்ணம் இருப்பார்கள். குறிப்பாக சனிக்கிழமை, ஏகாதசி, மார்கழி மாதங்களில் பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். அதேபோல் ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி உற்சவம், சொர்க்கவாசல் திறப்பு வெகு விமர்சையாக நடைபெறும். லட்சக் கணக்கான மக்கள் அந்த நாளில் வந்து பெருமாளை தரிசனம் செய்வார்கள்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பார்த்தசாரதி சாமிக்கு சித்திரை மாதம் வெகு விமரிசையாக பிரம்மோற்சம் நடத்துவது வழக்கம். அந்த வகையில், பார்த்தசாரதி பெருமாள் சித்திரை பிரம்மோற்சவம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வரும் 10-ம்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழா, ஆண்டுதோறும் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பிறமோற்சவ விழா, நாளை தொடங்கி, 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிரமோற்சவம் நடைபெறும் 10 நாட்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமிக்கு விலையுயர்ந்த ஆபரணங்கள் சாத்தப்பட்டு கருட வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை போன்ற வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காலையிலும், மாலையிலும் பெரிய வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை 3-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு கோபுர வாசல் தரிசனமும், இரவு அம்ச வாகன புறப்பாடும் நடக்கிறது.
4-ந்தேதி சூரிய பிரபை வாகன சேவையும், 5-ந்தேதி நாச்சியார் திருக்கோலமும், அனுமந்த வாகன புறப்பாடும் நடக்கிறது.
மே 7-ந்தேதி மிகவும் சிறப்பு வாய்ந்த திருத்தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து தேரோட்டம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். அதனை தொடர்ந்து அன்றைய தினம் இரவு 9 மணிக்கு தோட்ட திருமஞ்சனம் நடக்கிறது.
9-ந்தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரியும் இரவு கொடியிறக்கமும் நடக்கிறது.
10-ந்தேதி இரவு 10 மணிக்கு சிறிய திருத்தேர் நிகழ்வுடன் இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.