
சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில், 60-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. இந்த கோயிலில் கோபுரங்களும், மண்டபங்களும் தென்னிந்தியக் கோவில் கட்டடக் கலைக்கே உரிய நுட்பமான சிற்பக் கலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திர வரதர் மற்றும் யோக நரசிம்மர் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். அதனால் இத்தலம் ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது தனிச்சிறப்பு.
மகத்துவம் வாய்ந்த மார்கழியில் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏதாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி 10-ந்தேதி நடக்க உள்ளதால் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் பக்தர்கள் சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்றும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
1,500 கட்டணச் சீட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும். மேலும், முதலில் வரும் 500 நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சொர்க்கவாசல் தரிசனம் செய்ய கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள். சொர்க்கவாசல் நிகழ்வுக்கு பிறகு நடக்கும் தரிசன நிகழ்வுக்கு சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி அன்று முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும் கோவிலின் பின்கோபுர வாசல் வழியாக சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கோவிலின் சுற்றுப்புறங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 32 கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட உள்ளன.