பக்தர்களின் கவனத்திற்கு: திருச்செந்தூர் முருகன் கோவில் பூஜை நேர மாற்றங்கள் மற்றும் சித்திரை 1 நிகழ்வுகள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ்ப்புத்தாண்டு சித்திரை 1-ந்தேதியை முன்னிட்டு பூஜை காலம் மாற்றப்பட்டுள்ளது.
Tiruchendur Murugan Temple
Tiruchendur Murugan Temple
Published on

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் படை வீடு அனைத்தும் மலைகளில் அமைந்திருக்க இத்திருத்தலம் மட்டும் கடலோரத்தில் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். சூரபத்மனை வென்ற தலமான இது, 'செந்தில்நாதர்' வீற்றிருக்கும், மிகவும் புனிதமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்கரைத் தலம்.

இக்கோவில் 9 நிலைகளைக் கொண்ட, 157 அடி உயர ராஜகோபுரத்தைக் கொண்டுள்ளது. சூரபத்மனை வதம் செய்த தலம், பழமையான திராவிடக் கட்டிடக்கலை, நாழிக்கிணறு, ஸ்கந்த சஷ்டி திருவிழா ஆகியவை இக்கோவிலின் சிறப்பம்சங்களாகும். மூலவர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் இந்த ஆலயம், சுமார் 2,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. தமிழகத்தின் 4-வது ISO சான்றிதழ் பெற்ற கோவில் இதுவாகும்.

இத்தலத்தில் அருள் பிரசாதமாக இலை விபூதி வழங்கப்பட்டு வருகிறது. ஆதிசங்கரர் இந்த இலைவிபூதியின் மகிமையால் வயிற்றுவலி நீங்கப்பெற்று திருச்செந்தூர் சுப்ரமணிய புஜங்கம் பாடினார். இத்தகைய சிறப்பு பெற்ற முருகப்பெருமானின் திருச்சீரலைவாய் என்று போற்றப்படுகிறது. பின்னர் திருச்செந்தூர் என அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பக்தர்களுக்கு எச்சரிக்கை..! திருச்செந்தூர் கோவிலில் இதை செய்யவே கூடாது..!!மீறினால் வழக்கு பதிவு..!
Tiruchendur Murugan Temple

திருச்செந்தூர் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் அமைந்துள்ளது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மேற்கு கோபுரம் சுவாமிக்கு எதிரே, கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. கந்தசஷ்டி திருவிழா நடைபெறும் போதும், முருகன் திருக் கல்யாணத்தின்போதும் நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் மேல ராஜா கோபுர வாசல் திறக்கப்படும். ஆனால் அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ஆறு நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகிறார்கள்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை 1ம் தேதி முதல் பங்குனி 30ம் தேதி வரை 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

பொதுவாக காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

இந்நிலையில் தமிழ்ப்புத்தாண்டு சித்திரை 1-ந்தேதியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை காலம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாரானையும் நடைபெற உள்ளது.

பின்னர் காலை 8 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு அன்னாபிஷேகம், உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.

வரும் ஏப்ரல் 14ம்தேதி(நாளை) தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. மிதுனத்தில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1-ம் நாள் ஆகும்.

இதையும் படியுங்கள்:
தீராத நோய் தீர்க்கும் 'வேத' இலை: திருச்செந்தூர் பிரசாத ரகசியங்கள்!
Tiruchendur Murugan Temple

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சித்திரை 1ம் தேதி முதல் பங்குனி 30ம் தேதி வரை 12 மாதங்களும் திருவிழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை விவரக்குறிப்பேடு என்ற பெயரில் நூலாக வெளியிடுவது வழக்கம். அதன்படி நாளை தமிழ் புத்தாண்டு பராபவ வருடத்தை முன்னிட்டு கோவில் கலையரங்கில் விவரக்குறிப்பேடு வெளியிடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com