இந்த ஆண்டு ஏழுமலையானுக்கு இருமுறை பிரம்மோற்சவம்! தயாராவோம் பக்தர்களே!

சிறப்பு உற்சவங்களின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
tirupati bramorchavam
tirupati bramorchavam
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

ஆந்திர மாநிலத்தில் திருமலை மலை மீது அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் உலகப் பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமாகும். இது ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் திருப்பதி மாவட்டம் மற்றும் திருமலை பகுதியில், பழங்கால வேங்கடம் அல்லது வேங்கடமலை என அறியப்பட்ட ஏழு மலைகளின் (ஏழுமலை) ஒருங்கிணைந்த பகுதியில் அமைந்துள்ளது.

இத்தலத்தின் முதன்மை தெய்வம் திருவேங்கட முடையான் என்றும், ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் வணங்கப்படும் தாயார் அழகிய பத்மாமணியம்மை அல்லது பத்மாவதி நாச்சியார் ஆவார்.

இந்தப் பகுதி சேஷமலை, கருமுகில் மலை அல்லது கருடமலை, நீலமலைன, அஞ்சனமலை, எருமைமலை அல்லது விருசபமலை, மாயோன்மலை அல்லது நாராயணமலை, வேங்கடமலை என ஏழு மலைகளால் சூழப்பட்டிருப்பதனால், இத்தலம் "ஏழுமலை" என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த வேங்கடமலை சுமார் 3,200 அடி உயரமுடையதும், 10.33 சதுர மைல்கள் பரப்பளவுடையதும் ஆகும். இக்கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இக்கோவில் இந்தியாவிலேயே அதிக வருமானம் தரும் கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.

இதையும் படியுங்கள்:
திருப்பதி, திருச்சானூர் கோவில்களில் வரும் 25-ந்தேதி ரத சப்தமி விழா: 7 வாகனங்களில் உற்சவர் வீதி உலா!
tirupati bramorchavam

கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றுவரை எள்ளளவும் குறைந்தபாடில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் பாலாஜியை தரிசனம் செய்ய தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் 48 மணிநேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலையில் உள்ளனர்.

திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் திருவிழா என்றாலும் இங்கு நடக்கும் பிரம்மோற்சவ திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் மிக முக்கியமான 9 நாள் திருவிழாவாகும்.

இதற்கிடையே திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடக்க உள்ளது. அதில் வருகிற செப்டம்பர் மாதம் 15 முதல் 23-ந்தேதி வரை 9 நாட்கள் 'சாலகட்ல' எனப்படும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவும், அக்டோபர் மாதம் 12 முதல் 20-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் பக்தர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். ஏனெனில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வாகனச் சேவை மற்றும் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் இந்தாண்டு 2 பிரம்மோற்சவம் எனும்போது கேட்கவே வேண்டாம். பக்தர்கள் வெள்ளத்தில் திருப்பதி பெருமாள் மிதந்து வரப்போகிறார். அந்த கண்கொள்ள காட்சியை காண கண்கோடி வேண்டும்.

அதனை தொடர்ந்து வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக செப்டம்பர் 19-ந்தேதி இரவு கருட சேவை, 22-ந்தேதி தேரோட்டம், 23-ந்தேதி சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

அதேபோல் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அக்டோபர் மாதம் 16-ந்தேதி கருட சேவை, 17-ந்தேதி புஷ்பக வாகன வீதிஉலா, 19-ந்தேதி தங்கத்தேரோட்டம், 20-ந்தேதி காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்க உள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக வருகிற 30 முதல் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர வசந்த உற்சவம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வசந்த உற்சவத்தின் மூன்று நாட்களிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.

மேலும் வசந்த உற்சவத்தை முன்னிட்டு வருகிற 30 முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை 3 நாட்கள் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் 31-ந்தேதி அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சிறப்பு உற்சவங்களின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
திருப்பதி பெருமாளின் அண்ணன் வீற்றிருக்கும் கோவில் எங்குள்ளது தெரியுமா?
tirupati bramorchavam

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் திருப்பதி பயணத்தைத் திட்டமிடுமாறு கோவில் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com