

இந்த ஆண்டு மார்கழி மாதம் 11-ம் நாள் (25-1-2026) ஞாயிற்றுக்கிழமை ரத சப்தமி நாள் ஆகும். இந்த வருடம் ரதசப்தமி சூரிய பகவபனுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமை வருவது மிகவும் விசேஷமானதாகும்.
அமாவாசைக்குப் பிறகு வரும் 7-வது நாளை திதியை 'சப்தமி' என்றும் தை அமாவாசைக்குப் பிறகு வரும் சப்தமியானது 'ரத சப்தமி' என்று அழைக்கப்படுகிறது. இது சூரியன் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. எனவே இந்த நாளை 'சூரிய ஜெயந்தி' என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் சூரிய பகவானை வழிபட்டால் பலவிதமான நன்மைகளை பெறலாம்.
ரதசப்தமி திருவிழா நாடு முழுவதும் உள்ள பொருமாள் கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது போலவே திருப்பதியிலும் உற்சவமாக நடைபெறும். ஒரே நாளில் ஏழு விதமான வாகனங்களில் பெருமாளை தரிசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
மகர மாத சுக்ல பட்ச சப்தமி நாளில் ‘சூரிய ஜெயந்தி’ எனப்படும் ரத சப்தமி புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா வரும் 25-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
ரதசப்தமியையொட்டி திருப்பதி கோவிலில் காலை, இரவு பல்வேறு வாகனச் சேவைகள் நடக்கின்றன. மொத்தம் 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடனும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
வாகன சேவைகள் விவரம்..
* 25-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. அன்று காலை 6.45 மணியளவில் சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளும் உக்ர சீனிவாச மூர்த்திக்கு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
* காலை 9 மணி முதல் 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதி உலா நடக்கிறது.
* காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
* மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா நடக்கிறது.
* மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
* மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடக்கிறது.
* மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.
* இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
ரத சப்தமி விழாவையொட்டி 25-ந்தேதி கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ஆகிய ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள், வி.ஐ.பி. புரோட்டோக்கால் முக்கியஸ்தர்களை தவிர அனைத்து வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரத சப்தமியையொட்டி திருப்பதியில் 24 முதல் 26-ந்தேதி வரை இலவச தரிசன பக்தர்களுக்கான டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப் பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. ஞாயிற்று மற்றும் திங்கள் கிழமை விடுமுறை நாளாக இருப்பதாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காமல் இருக்கும் என்பதாலும் இந்த மூன்று நாட்கள் ஸ்லாட் டோக்கன்கள் ரத்து செய்வதாக அறிவிக்கப் பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்தனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்
அதேபோல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ரதசப்தமி விழாவை முன்னிட்டு அன்றைய தினம் 7 வாகனங்களில் உற்சவர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
* அன்றைய தினம் காலை 7 மணியில் இருந்து 8 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா,
* காலை 8 மணியில் இருந்து 9.30 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா,
* காலை 10 மணியில் இருந்து 11 மணிவரை குதிரை வாகன வீதிஉலா,
* காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணிவரை கருட வாகன வீதிஉலா,
* மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலா,
* மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா,
* இரவு 8.30 மணியில் இருந்து இரவு 9.30 மணிவரை கஜ வாகன வீதிஉலா நடைபெற உள்ளது.
ரதசப்தமி விழாவில் அன்று கோவிலில் நடக்க இருந்த கல்யாணோற்சவம், குங்குமார்ச்சனை, பிரேக் தரிசனம், ஊஞ்சல் சேவை, வேத ஆசீர்வாதம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில்
அதேபோல் திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வரும் 25-ம்தேதி ரதசப்தமியை முன்னிட்டு அன்றைய தினம் உற்சவர் கோவிந்தராஜசாமி தனித்தும் உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் சூரிய பிரபை, ஹம்ச, அனுமந்த, பெரிய சேஷ, முத்துப்பந்தல், சர்வ பூபால, கருட வாகனம் என ஏழு விதமான வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.