இந்திய அளவில் பிரபலமான திருப்பதி லட்டு சென்னையில் கிடைக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! ஆனால் இதுதான் உண்மை. சென்னையில் திருப்பதி லட்டு எங்கு கிடைக்கும் என்ற வழிகாட்டுதலை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.
ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வழிபடுவது என்றால் பலருக்கும் பிடிக்கும். அதிலும் மலைக் கோயில்களுக்குச் செல்ல பக்தர்கள் அதிக ஆர்வத்துடன் செல்வார்கள். அப்படி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் ஆன்மீகத் திருத்தலங்களில் ஒன்று தான் திருப்பதி மலையில் இருக்கும் வெங்கடாசலபதி ஆலயம். இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு வருவதால், தினந்தோறும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதும். திருப்பதி மலையே ஒரு சிறப்பு என்றால், இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு அதை விடச் சிறப்பு. திருப்பதி லட்டு என்றாலே அதற்கு ஒரு தனிப்பெயர் உண்டு. லட்டு பிடிக்காத நபர்கள் கூட திருப்பதி லட்டுவை உண்ணாமல் இருக்க மாட்டார்கள். குறைந்தபட்சம் ஒரு லட்டுவின் விலை ரூ.50-லிருந்து ஆரம்பமாகும். லட்டுவின் எடைக்கு ஏற்ப இதன் விலை ரூ.100 மற்றும் ரூ.200 என்ற அளவில் விற்கப்படுகிறது.
திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள், அங்கு செல்பவர்களிடம் பணம் கொடுத்து லட்டு வாங்கி வாருங்கள் என்று சொல்வதும் உண்டு.
திருப்பதி லட்டு வாங்க திருப்பதிக்கே தான் செல்ல வேண்டுமா என்ன! சென்னையில் கூட திருப்பதி லட்டுவை வாங்க முடியும். ஆனால் தினமும் வாங்க முடியாது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் திருப்பதி லட்டு கிடைக்கும். இந்த இடம் எங்கு இருக்கிறது என்று உங்கள் மனம் ஆவலோடு கேட்கிறதா?
சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கிமீ தொலைவில் திருப்பதியின் கிளைக் கோயிலான திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெருமாள் கோயில் உள்ளது. திருப்பதிக்கு செல்ல முடியாத பெருமாள் பக்தர்கள், இங்கு வந்து பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். புரட்டாசி மாதம் என்றால், இங்கும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இத்திருக்கோயிலில் தான் சனிக்கிழமைகளில் மட்டும் திருப்பதி லட்டு வழங்கப்படுகிறது. ஒரு பக்தருக்கு 2 லட்டுகள் மட்டும் ரூ.100-க்கு வழங்கப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், திருப்பதி லட்டு சனிக்கிழமையில் காலையில் மட்டுமே கிடைக்கும். மாலையில் சென்றால் கிடைக்காது. சனிக்கிழமை தோறும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே திருப்பதியில் இருந்து இங்கு லட்டுகள் கொண்டு வரப்படுகின்றன. இவை காலியாகும் பட்சத்தில் அதோடு அடுத்த சனிக்கிழமை தான் லட்டு வாங்க முடியும்.
பக்தர்களே இது உங்களுக்கு லட்டு போன்ற இனிப்பான தகவல் அல்லவா இது! இனி உங்களுக்கு லட்டு தேவை எனில், சனிக்கிழமை அன்று தவறாமல் சென்னை தியாகராய நகருக்குச் சென்று பெருமாளை தரிசித்து விட்டு, சுவையான லட்டுவை வாங்கிக் கொள்ளுங்கள்.