
கலியுகத்தின் பிரபஞ்ச அதிபதியான வேங்கடாசலபதியின் உறைவிடமான திருமலை திருப்பதி புனித யாத்திரைகள் மற்றும் விழாக்களால் எப்போதும் கலகலப்பாக இருக்கும். திருமலையில் ஒவ்வொரு நாளும் ஒரு திருவிழாவாகும். ஒரு வருடத்தில் 365 நாட்கள் உள்ளன. ஆனால், திருமலையில் ஆண்டு முழுவதும் 450க்கும் மேற்பட்ட திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? இந்தத் திருவிழாக்கள் நித்யோத்ஸவம் (தினமும்), பக்சோத்ஸவம் (பதினைந்து வாரங்கள்), மாசோத்ஸவம் (மாதாந்திரம்), சம்வோத்ஸவம் (ஆண்டு தோறும்), நட்சத்திரத் திருவிழாக்கள் (பிறந்த நட்சத்திரங்களின் அடிப்படையில்) என வகைப்படுத்தப்படுகின்றன.
கி.பி. 1542ம் ஆண்டு பொறிக்கப்பட்டு உள்ள திருமலை திருப்பதி பெருமாள் கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளில், திருப்பதி பெருமாளுக்கு தீபாவளியன்று அதிரசப்படி இரண்டு என உள்ளது. இதன் மூலம், தீபாவளி பண்டிகையன்று திருப்பதி பெருமாளுக்கு அதிரசம் படைக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனவேதான், இன்றைக்கும் தீபாவளி பண்டிகை நாட்களில் அதிரசம் செய்வது அங்கு வழக்கமாக உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேங்கடாசலபதி சன்னிதிக்கு முன்பு உள்ள தங்கவாசலுக்கு அருகே கண்டா மண்டபத்தில் ஆஸ்தான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி தீபாவளி நாளில் நடைபெறும்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி வேங்கடாஜலபதி கோயில் திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு பெருமாள் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி தருகிறார் என்பது தெரியுமா? வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் அப்படிக் காட்சி தருகிறார். வியாழக்கிழமை அன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்து அவருக்கு எளிய வஸ்திரத்தை சாத்தி மந்திர ரூபத்தில் அவரை சங்கரநாராயணர் போல மாற்றுவார்கள். அப்போது அவருக்கு வில்வ மாலை அணிவிக்கப்படுகிறது. பின்னர் ஒரு தட்டில் விபூதி மேல் கற்பூரம் வைத்து தீபாராதனை காட்டப்படுகிறது.
திருப்பதி மலைக்கு மேலே உள்ள நாராயணகிரியில், ஏழுமலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாக நம்பப்படுகிறது. 'ஸ்ரீவாரி பாதம்' என்று அழைக்கப்படும் இந்த புனிதத் தலத்தில், திருமலைவாசனின் பாதங்களே வணங்கப்படுகின்றன. திருப்பதியில் கருவறைக்கு முன்பாக இருப்பது சயன மண்டபம். இதுவரை பக்தர்கள் செல்வதற்கு அனுமதியுண்டு. ஆனால், உள்ளே போன வேகத்தில் திரும்பி விடுகிறோம். இதனால்தான்தானோ என்னவோ ஆண்டாள் ஒரு பாடலில் மனம் வெதும்பி, ‘வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட விமலன் எனக்கு உருக்காட்டான்’. என்று பாடுகிறாள். அவளுக்கே முழு உருவத்தையும் காட்டாத அந்த பெருமாள் நமக்கு எப்படி தனது முழு உருவத்தையும் காட்டுவார்.
திருப்பதியில் சக்ர தீர்த்தம் இருக்கிறது. இங்கிருந்துதான் ஏழுமலையானுக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வரப்படும். பொதுவாக, அபிஷேக நீர் கருவறையை விட்டு வெளியே வந்து ஒரு தொட்டியில் கொட்டுவது போல (கோமுகி) வடிவமைத்திருப்பார்கள். கோமுகியை, ‘பிரணாள’ என்றும் சொல்வர். இந்த நீர் கோயிலுக்கு வெளியே செல்ல ஓடை அமைத்திருப்பார்கள். ஏழுமலையான் கோயிலில் ஓடை இல்லை. அபிஷேக நீர் முக்கோடி பிரதட்சணம் என்ற பிராகாரத்தில் உள்ள ஒரு தொட்டியில் விழ, அதை மொண்டு வெளியில் கொண்டு போய் கொட்டி விடுகிறார்கள். கற்கண்டு, அரிசி, தயிர் ஏடு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட நிவேதனமும் லட்டுடன் திருப்பதி ஏழுமலையானுக்கு படைக்கப்படுகிறது. இதை ‘மாத்திரை’ என்கிறார்கள். இந்த மாத்திரை நிவேதனம் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
திருப்பதியில் வேங்கடாசலபதி உள்ள கர்ப்பக்கிரகத்திற்குள்ளேயே ராமர் உள்ளார். ஆனால், ராமர் நிமிர்ந்து நிற்காமல், தனது தலையைச் சற்றே சாய்ந்தபடி அருள்பாலிக்கிறார். புனர்பூச நட்சத்திர தினத்தன்று வெளி பிராகாரத்தில் ஊர்வலமாக வருவார் இந்த திருமலை ராமர். திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில் போக சீனிவாசர், கொலுவு சீனிவாசர், மலையப்பர், உக்கிர சீனிவாசர் என நான்கு உத்ஸவர்கள் உள்ளனர்.
மூலவரின் திருவடியில் இருப்பவர் போக சீனிவாசர். இவருக்கே பள்ளியறை பூஜை நடக்கும். தினமும் காலையில் பஞ்சாங்கம் கேட்பவர் கொலுவு சீனிவாசன். பங்காரு வாசல் எனும் தங்க வாசல் முன்பு இவர் இருக்கிறார். ஸ்ரீதேவி , பூதேவி தாயாருடன் விழா காலத்தில் வீதியுலா வருபவர் மலையப்பர். இவரை உத்ஸவ சீனிவாசர் என்பர். கார்த்திகை மாத ஏகாதசி மட்டும் சூரிய உதயத்திற்குள் பவனி வருபவர் உக்கிர சீனிவாசர்.
திருப்பதி மலை அடிவாரத்தை ‘அலிபிரி’ என்பர். இங்கு புளியமரம் ஒன்று இருந்ததால் ‘புளியடி’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. அதுவே மருவி ‘அலிபிரி’ என்றாகி விட்டது. பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் அலிபிரியில் இருந்து மலையேறுவர். இந்தப் பாதைக்கு ‘சோபன மார்க்கம்’ என்று பெயர். மலைப்பாதையில் தரிசிக்க வேண்டிய இடம் ‘ஸ்ரீ பாத மண்டபம்’ ஆகும். ஒரு சமயம் திருமலை நம்பிக்கு பெருமாளே மலையில் இருந்து இறங்கி வந்து இந்த இடத்தில் காட்சி தந்தார். அவர் பாதம் பதிந்த இடமே ‘ஸ்ரீ பாத மண்டபம்’ தற்போது இங்கு பெருமாள் கோயில் உள்ளது.