
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் சுவாரசியமான அவதாரம் என்றால் அது கிருஷ்ணாவதாரம்தான். கண்ணன் என்றாலே மகிழ்ச்சி. ஒவ்வொரு அவதாரத்திலும் மகாவிஷ்ணு ஒரு அசுரனை வதைக்கவே அவதரிப்பார். ஆனால், கிருஷ்ணாவதாரத்தில் ஏராளமான அசுரர்களை வதைத்தார். ஸ்ரீ கிருஷ்ணர் மகிழ்வின் அடையாளம். வட இந்தியாவில் கிருஷ்ணன் என்றால் தமிழகத்தில் கண்ணன். கண்ணன் மட்டுமல்ல, மாமாயன். கள்ளர்களின் தலைவனாக அழகர்மலையில் வீற்றிருப்பவனும் அவனே. முல்லை நிலக் கடவுள். மகாபாரதம் தமிழகத்தில் நடந்தது என்றும் சிலர் கூறுவர். அது உண்மையா என்பதை உறுதிப்படுத்த முடியாது.
சிதம்பரம் அருகே ஒரு ஊரின் பெயர், ‘மதுரா வடுகத்திருமேடு.’ பக்கத்து ஊரின் பெயர் கவரப்பட்டு. முன்பு கெளரவப்பட்டு என்று அழைக்கப்பட்டது. சற்று தள்ளி நந்தவனம் என்ற இடம் உண்டு. அங்குள்ள ஆற்றைக் கடந்தால் சந்திரமலை, அதற்கடுத்து சிறிது தொலைவில் அண்ணாமலைநகர் பாசுபதேஸ்வரர் கோயில். அங்குதான் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றான் என்று கூறுவர். பாரதத்தில் வரும் அரவான் பலி நிகழ்ச்சி திருவிழாவாக இங்கே ஒவ்வொரு வருடமும் நடைபெறும். அதன் அருகில் உள்ள ஊரின் பெயர் திருவேட்களம். பாரதப் போர் நிகழ்ந்த இடம் என்று கூறுகிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்ததும் கடும் மழையும் புயலும் அடித்த வேளையில் சிறைக் கதவுகள் தானாகத் திறக்க, கை விலங்குகள் அறுபட, யமுனை நதி வழிவிட, வசுதேவர் கூடையில் கண்ணனை சுமந்து கோகுலம் சென்றார். ஆதிசேஷன் கண்ணன் நனையாமல் குடை பிடித்து சென்றார். அனைத்தும் நடந்தேற மீண்டும் சிறைக்குள் வசுதேவர் வர, இடையில் நடந்த அனைத்தையும் மறக்கச் செய்தார் மகாவிஷ்ணு.
ஆயர் குல மக்களின் கோகுலத்தில் கண்ணனை, நந்தகோபரின் மனைவி யசோதை மிகுந்த அன்புடன் வளர்த்தாள். கிருஷ்ணனோடு அங்கே பலராமனும் வளர்ந்தார். கண்ணனை விஷப்பால் கொடுத்து கொல்ல அழகிய வடிவில் பூதனா அரக்கி வந்தாள். கண்ணனோ. அவள் உயிரையும் சேர்த்துக் குடித்தார். கண்ணனுக்கு பால் கொடுத்ததால் விஷமாகினும் பேறு பெற்று வைகுண்டம் அடைந்தாள். அடுத்ததாக, த்ருணாவர்த்தன் என்ற பறக்கும் கொடிய அரக்கன் கண்ணனை தூக்கிக் கொண்டு பறந்தான். அசுரனை கொன்றுவிட்டு அவன் உடல் மேல் ஒன்றும் அறியாததை போல் விளையாடினான் கண்ணன். கன்றுக்குட்டியாக வந்த வத்ஸாசுரனையும், வாத்தாக வந்த பகாசுரனையும், நாகமாக வந்த அகாசுரனையும் கொன்றார் கண்ணன். காளிங்கன் மீது நடனம் ஆடி கொட்டம் அடக்கினார். கோவர்த்தன மலையை தூக்கி இந்திரனின் செருக்கை அழித்தார் கிருஷ்ணன்.
ஒரு சமயம் கண்ணன் மண்ணை அள்ளித் தின்ன, யசோதை அவன் வாயை திறந்தாள். அதில் உலகமே தெரிய வியந்தாள். கண்ணன் கோகுலத்தில் வெண்ணை திருடுவது வழக்கம். ஒரு நாள் கண்ணனின் சேட்டைகள் அதிகமானதால் உரலோடு சேர்த்துக் கட்டப்பட்டான். கட்டிய உரலோடு வீதியெங்கும் ஓடிய கண்ணன், இரு மரங்களை உடைத்து நவகூவரன், மணிக்ரீவன் ஆகியோருக்கு சாபவிமோசனம் அளித்தார்.
கண்ணனுக்கு தொடர்ச்சியாக அரக்கர்களால் தொல்லைகள் வந்ததால் கோகுலத்தை விட்டு ஊரோடு பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தார் நந்தகோபன். கண்ணனின் அற்புதங்களைக் கண்டு ஆயர்கள் வியந்தாலும், கண்ணனை பாலகனாக நினைத்தே அன்பைப் பொழிந்தனர். கோபியர்கள் கண்ணன் மீது மையல் கொள்ள, ராதையின் மீது மட்டும் கண்ணன் காதல் கொண்டான்.
பாரதப் போரில் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தார் கண்ணன். கண்ணன் தம் மீது பக்தி கொண்ட எவரையும் கைவிட்டதில்லை. அது கோபியரோ, திரௌபதியோ, அர்ஜுனனோ, சுதாமாவோ, ருக்மிணியோ எவரையும் அவன் கைவிடவில்லை.