திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சிறப்புகள் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்!

அம்பிகையின் தவம், தாடங்க மகிமை மற்றும் நீர் லிங்கத்தின் ரகசியங்களை அறிய சிறப்புத் தொகுப்பு.
அகிலாண்டேஸ்வரி கோவில் - Thiruvanaikaval Temple
அகிலாண்டேஸ்வரி கோவில் - Thiruvanaikaval Temple
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி-ஜம்புகேஸ்வரர் ஆலயம் பஞ்சபூதத் தலங்களில் நீர் தலமாக விளங்குகிறது. ஆடி மாதத்தில் அம்பிகை ஈசனிடம் தவம் இருந்ததாக ஐதீகம் உள்ளதால், ஐந்து வெள்ளிக்கிழமைகளும் ஊஞ்சல் உற்சவம், தங்கப் பாவாடை தரிசனம், ஆடித் தெப்பத் திருவிழா போன்றவை கொண்டாடப்படுகின்றன. கல்வி, ஞானம், தைரியம் வேண்டி பக்தர்கள் திரளுகின்றனர்.

ஆடி மாதம் முழுவதும் அம்பிகை ஈசனிடம் தவம் இருந்ததாக ஐதீகம் உள்ளதால், சிறப்பு வழிபாடுகள், வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவம் மற்றும் தங்கப் பாவாடை தரிசனம் ஆகியவை மிக முக்கியமாக கொண்டாடப்படுகின்றன. அம்பாள் ஞானம் பெற ஈசனிடம் உபதேசம் பெற்று தவம் புரிந்த தலம் என்பதால், ஆடி மாதத்தில் இவளை வணங்கிட கல்வி, ஞானம் மற்றும் தைரியம் பெருகும் என்பது நம்பிக்கை.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில் என்பது பஞ்சபூதத் தலங்களில் நீர் தலமாகும். இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரியின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் அப்புலிங்கம் (நீர் லிங்கம்) என்றும், அம்மன் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

மூலவர் ஜம்முகேஸ்வரர்

உற்சவர் சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்

அம்பிகை அகிலாண்டேஸ்வரி

தல விருட்சம் வெண் நாவல்

தீர்த்தம் நவ தீர்த்தங்கள், காவேரி

ஆகம முறை சைவாகமம், ஸ்ரீ வித்யா வைதீக பூஜை

தல சிறப்பு:

தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 60வது தலமாகும். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடமாகும். சிவாலயங்களில் இத்தலத்து இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மூலவர் அமைந்துள்ள கருவறையில் எப்போதும் நீர் சுரந்துகொண்டே இருக்கும். யானை மற்றும் சிலந்தி வழிபட்டுப்பேறு பெற்ற தலம் இது.

அம்பிகை அகிலாண்டேஸ்வரி ஆரம்பத்தில் இங்கு உக்கிரமாக இருந்ததால் ஆதிசங்கரர் அம்பிகைக்கு எதிரில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து தாடங்கம் (காதணி) அணிவித்து சாந்தப்படுத்தினார். தாடங்கம் என்பது காதில் அணியும் அணிகலன். ஆதிசங்கரர் இரண்டு தாடங்கம்களை ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு அணிவித்துள்ளார். இன்றும் இந்த அம்பிகையின் காதுகளில் மகிமை பொருந்திய தாடங்கம் உள்ளது.

அதன் பின்னரே அம்பாள் சாந்தமானதாகவும், உக்ரமான தாயை விநாயகர் மற்றும் முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில் அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

அகிலாண்டேஸ்வரி கோவில் - Thiruvanaikaval Temple
அகிலாண்டேஸ்வரி கோவில் - Thiruvanaikaval TempleAI Image

தல பெருமை

திருநீற்றான் மதில்:

மதுரையைப் போலவே இத்தலத்திலும் சிவபெருமான் சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தி உளளார். இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே ஒரு சித்தரைப்போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீற்றைக் கூலியாகக் கொடுத்ததாக தல வரலாறு கூறுகிறது.

பணியாளர்களின் உழைப்புக்கு ஏற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள். சிவன் விபூதி சித்தராக வந்து பிரகாரம் கட்டும் வேலையை முடித்ததால் பிரகாரம் 'விபூதி பிரகாரம்' என்று அழைக்கப்படுகிறது. விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது.

இதையும் படியுங்கள்:
சோழர்கள் வழிபட்ட உக்கிர காளி கோயில்கள்: அறியப்படாத ரகசியங்களும் வரலாற்று அற்புதங்களும்!
அகிலாண்டேஸ்வரி கோவில் - Thiruvanaikaval Temple

மாணவி அம்பாள்:

அகிலத்தைக் காக்கும் அம்பிகையாக அகிலாண்டேஸ்வரி அருளும் இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சி காலத்தில் அம்பிகை பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அம்பாள் அணிந்த புடைவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சந்நிதிக்கு திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்த நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாகவே பாவித்து பக்தர்கள் அவரை வணங்குகின்றனர்.

ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல்:

ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. 9 துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியாகத்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல் மனிதன் தன் உடலில் உள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்யவேண்டும் என்பதை உணர்த்துவதாக கூறப்படுகிறது.

சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் சரஸ்வதி நின்ற நிலையில் வீணையில்லாமல் காட்சி தருகிறாள். குபேரன் பூஜித்த குபேர லிங்கம், ஜம்பு தீர்த்தக்கரையில் உள்ளது. ஆனி பௌர்ணமியில் இந்த குபேர லிங்கத்திற்கு முக்கனி அபிஷேகம் நடைபெறுகிறது. ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர், ஜேஷ்டா தேவியுடன் கூடிய சனீஸ்வரர் ஆகியோரும் இத்தலத்தில் வீற்றிருக்கின்றனர்.

சிவனை வேண்டி அம்பாள் தவம் இருந்தபொழுது அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், பள்ளியறை பூஜை போன்றவை கிடையாது. ஆனால் இங்கு பள்ளியறை உள்ளது. இந்தப் பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர் மீனாட்சி இருவரும் செல்கின்றனர். சிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவதில்லை.

இதையும் படியுங்கள்:
சுவாமிமலை தங்க கவசம் வைரவேல் தரிசனம்! காணக் கண் கோடி வேண்டும்!
அகிலாண்டேஸ்வரி கோவில் - Thiruvanaikaval Temple

வேண்டுதல்கள்:

கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கவும், தடைப்படுகின்ற திருமணங்கள் நடைபெறவும், விவசாயம் செழிக்கவும், தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்கும் இங்கு வேண்டி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

திருவிழாக்கள்:

ஆடி மாதத்தில் 5 வெள்ளிக்கிழமைகளும் சிறப்பாக கொண்டாடப்படும். ஆடித் தெப்பத் திருவிழா, நவராத்திரி, தை தெப்பம், பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம், தேர்த் திருவிழா, பஞ்சப்பிரகார திருவிழா ஆகிய விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.

கோவில் திறந்திருக்கும் நேரம்:

காலை 5:30 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையிலும் திறந்திருக்கும். வெள்ளிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் திருவானைக்காவல் தலத்தின் ஆன்மீக ரகசியங்களை முழுமையாக உணர்ந்து, ஆடி மாதத்தில் இறைவனை எவ்வாறு முறைப்படி வழிபட்டு மன அமைதி, தெளிவான கல்வி அறிவு, தொழில் வளர்ச்சி மற்றும் குடும்ப ஒற்றுமையைப் பெறலாம் என்ற தெளிவான ஆன்மீக வழிகாட்டுதலை அடைவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com