

சோழர்களின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தை மையமாகக் கொண்டு, இராஜேந்திர சோழன் கலிங்கப் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக நான்கு திசைகளிலும் காளி கோயில்களை நிறுவிய வரலாறு, அரியலூர், இடைக்கட்டு, சலுப்பை, சுண்ணாம்பு குழி, உறையூர், திருவக்கரை, சிறுவாச்சூர், பாவடி, தில்லை போன்ற தலங்களின் சிறப்பு வழிபாடுகள், கிரக தோஷ நிவாரண நம்பிக்கைகள், சோழர் காலக் கட்டிடக் கலை, பக்தி மரபுகள் ஆகியவற்றை விரிவாகச் சித்தரிக்கிறது.
ராஜேந்திர சோழன் நிறுவிய எல்லைக் காளி கோயில்கள்:
கங்கைகொண்ட சோழபுரத்தை இராசேந்திர சோழன் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தபோது, கலிங்கப் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கலைச் சின்னங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்டு ஊரின் நான்கு எல்லைகளிலும் காளி கோயில்களை அமைத்தான். இராஜேந்திர சோழன் காலத்தில்தான் நாட்டின் நான்கு திசைகளிலும் காளி உருவங்கள் அமைக்கப்பட்டது.
அதில் ஒரு பகுதிதான் கிழக்கில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள செங்கமேடு கிராமத்தில், முதலாம் இராஜேந்திர சோழனால் 11-ஆம் நூற்றாண்டில் கலிங்கப் போரின் வெற்றியைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட புகழ்பெற்ற காளி சிற்பம் உள்ளது.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள இடைக்கட்டு என்னும் கிராமத்தில் அருள்பாலிக்கும் காவல் தெய்வமே இடைக்கட்டு காளியம்மன் ஆவார். இது மேற்கு பகுதியில் அமைக்கப்பட்ட காளி கோவில்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே வடக்கு பகுதியில் சலுப்பையில் உள்ள துறவுமேல் அழகர் கோயிலில் வீற்றிருக்கும் காளி, சாளுக்கியரை வென்றதன் நினைவாக ராஜேந்திர சோழனால் கொண்டுவரப்பட்ட "சாளுக்கியக் காளி" (சாளுக்கிய குல நாசினி) என்று அழைக்கப்படுகிறார். கங்கை கொண்ட சோழபுரம் தெற்கு திசையில் சுண்ணாம்பு குழி விராரெட்டி தெருவில் உக்கிரமான காளி அருள்பாலிக்கிறார். இவளை வழிபடுவதன் மூலம் குடும்பப் பிரச்னைகள், பில்லி, சூனியம் போன்ற தொல்லைகள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
சோழன் நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி திருச்சி அருகே உள்ள உறையூரில் எழுப்பிய பத்தினிக்கோட்டமே பின்னாளில் புகழ்பெற்ற வெக்காளியம்மன் கோயிலாக மாறியது. சோழர்களின் காவல் தெய்வமான இக்கோயிலின் கருவறைக்கு மேல் கூரை இல்லை;
சோழர்களின் இன்னல்கள் தீர்க்க வெட்டவெளியில் தன் வாக்குபடி அம்மன் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களைக் கடிதமாக எழுதி அம்மன் சன்னதி சூலத்தில் கட்டி பிரார்த்தனை செய்வது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
பாண்டிச்சேரி அருகில் பல பழங்கால ஆலயங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் சந்திர மெளலீஸ்வரர் சோழர் கால கோவில். ராஜ ராஜ சோழனின் தாயார் செம்பியன் மாதேவி கட்டிய சிவாலயம். இந்த கோவில் தான் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் கோவில் என்று அறியப்படுகிறது. சிவன், விஷ்ணு மற்றும் காளி ஆகிய மூன்று தெய்வங்கள் அமைந்துள்ள ஒரே கோவில் இதுவாகத்தான் இருக்கும்.
வக்ரகாளியம்மன் மற்றும் மதுரகாளியம்மன் காளி கோயில்கள்:
இங்குள்ள வக்ரகாளியின் உருவம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கத்தக்கது. தீ ஜூவாலையை பின்னணியாகக் கொண்டு, மண்டை ஓடு கிரீடத்துடன் தலையை சற்று இடதுபுறமாக சாய்த்தபடி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இந்த கோலத்தை வேறு எங்கும் காணமுடியாது. ஜாதகத்தில் உள்ள சந்திரன், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களின் வக்கிர தோஷங்கள் மற்றும் ராகு-கேதுவால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க இங்கு பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற, சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஒரு உக்கிரமான காளி ஸ்தலமாகும். குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இது தமிழ்நாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தின் சிறுவாச்சூர் கிராமத்தில், பெரம்பலூரிலிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ளது.
மதுர காளியம்மன் கோயிலில், பூசாரி வாயில் துணியைக் கட்டிக் கொண்டு பூஜை செய்கிறார். மேலும் அவர் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தீபாராதனை செய்வார். பூசாரியின் வாய் எச்சில் கூட தெய்வத் திருமேனி மீது படாதவாறு,இங்கே தூய்மையான வழிபாடு நடைபெறுகிறது. இங்குப் பிரதான நைவேத்தியம் மாவிளக்கு. மாவிளக்கு ஏற்றி வழிபட வேண்டிய எண்ணம் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும், காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இடைவேளையின்றி கோயில் திறந்திருக்கும்.
திருச்செங்கோடு - நாமக்கல் சாலையில் பாவடி தெருவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் (அழகு நாச்சி அம்மன்) திருக்கோயில், 11 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இது. முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டது. வைகாசி அமாவாசை நாட்களில் நள்ளிரவில் நடைபெறும் இருட்டுத் தேர் திருவிழா இக்கோயிலின் முக்கிய நிகழ்வாகும். அமாவாசை தினத்தில் இரவில் நடக்கும்.
இதனால் இந்த தேரோட்டத்தை இருட்டுத்தேர் என பொதுமக்கள் அழைப்பர். நாளைடைவில் பேச்சு வழக்கில் திருட்டுத்தேர் என அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த தேரை இழுக்க பெரியவர்கள் யாரும் வர மாட்டார்கள். முழுக்க முழுக்க சிறுவர்கள் மட்டுமே ஒன்று கூடி நான்கு ரதவீதிகளில் வழியாக அமாவாசை கும்மிருட்டில் விளக்குகள் எதுவும் இல்லாமல் இந்த தேர் இழுக்கும் வைபவம் நடக்கும்.
தமிழகத்தின் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தில்லை காளியம்மன் கோவில், சோழ மன்னர் கோப்பெருஞ்சிங்கனால் கி.பி. 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து வடக்கே சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
நடராஜரிடம் நாட்டியப் போட்டியில் தோல்வியுற்ற காளி தேவி, ஆக்ரோஷம் தணிந்து சாந்தமான தோற்றத்தில் இங்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள காளியம்மனுக்கு மற்ற தல அம்மன்கள் போல சிவப்பு அல்லது மஞ்சள் ஆடை அணிவிக்கப்படாமல் வெள்ளை நிறப் புடவையையே அணிவிக்கிறார்கள்.
இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம், சோழ மன்னர்கள் தங்களின் வெற்றிக்கும் பாதுகாப்புக்கும் எத்தகைய ஆன்மீக சக்திகளைப் பயன்படுத்தினார்கள் என்பதையும், இன்றளவும் பல அற்புதங்கள் நிகழும் சோழர் காலக் காளி கோயில்களின் அமைவிடம், வழிபாட்டு முறைகள் மற்றும் தோஷ நிவர்த்தி இரகசியங்களையும் நீங்கள் முழுமையாக அறிந்துகொள்ள முடியும்.