கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான நேற்று உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பலர் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். மாலையில் கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையின் நின்று சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பக்தர்கள் குபேர கிரிவலம் செல்ல தொடங்கினர். மேலும் கோவிலில் குபேர லிங்கத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் சிலருக்கு மட்டுமே குபேர கிரிவலம் பற்றி தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் இந்த குபேர கிரிவலத்தை பற்றியும், அதன் மகிமையை பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள, பக்தர்களால் அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதை அமைந்துள்ளது. இந்த கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன. பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து, அருணாசலேஸ்வரரை வணங்கி, கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க கோவிலில் இருந்து கிரிவலம் செல்கிறார் என்று கூறப்படுகிறது.
கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியும், சிவாராத்திரியும் இணைந்து வரும் நாளில், சிவனை வழிபட்டு குபேரனே கிரிவலம் செல்வதாக பக்தர்களின் நம்பிக்கை. எனவே, செல்வத்துக்கு அதிபதியான குபரேன் கிரிவலம் செல்லும் நாளில், கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கர்மவினையின் பயனாக வரும் துன்பங்களில் ஒன்று தான் பணக்கஷ்டம். இதற்கு குபேர கிரிவலம் நிரந்தரத் தீர்வாக அமையும். பிறந்த ஜாதகத்தில் கோடீஸ்வரயோகம் இல்லாவிட்டாலும் கோடீஸ்வரர் ஆகும் யோகத்தை உருவாக்கி தருவது தான் குபேர கிரிவலம்.
ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் பூமிக்கு வருகிறார். அவர் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேர லிங்கத்துக்கு தினப் பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார். அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேர பகவானே கிரிவலம் செல்கிறார்.
அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைக்கும். அப்படி கிரிவலம் செய்யும் போது, முடிந்த அளவிற்கு "ஓம் ரீம் தன தான்யம் அனுகிரஹ ஆகர்ஷய ஆகர்ஷய" என்று கூறுவது மிகவும் சிறப்பு. இதன் மூலம் நாமும், நமது முன்னோர்களும் செய்த பாவங்கள் தீரும். நாம் மட்டுமல்ல நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும், செல்வச் செழிப்புடனும் வாழும் என்பது ஐதீகம்.